46. சாதனை புரிந்த சகலகலா வல்லவன்


46. சாதனை புரிந்த சகலகலா வல்லவன்
x
தினத்தந்தி 26 May 2017 11:00 PM GMT (Updated: 26 May 2017 12:25 PM GMT)

விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற ‘சிவப்புமல்லி’ படத்தை எடுக்க நினைத்தபோது, நாங்கள் முதலில் அணுகியது கமலஹாசனைத் தான்.

விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற ‘சிவப்புமல்லி’ படத்தை எடுக்க நினைத்தபோது, நாங்கள் முதலில் அணுகியது கமலஹாசனைத் தான். அப்போது அவரிடம் எங்களுக்கு கொடுக்க கால்ஷீட் இல்லை. அதன்பிறகுதான் விஜயகாந்த்தை வைத்து படத்தை எடுத்தோம். அப்போதே கமல் என்னிடம் கூறினார். ‘தமிழிலேயே ஏன் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இந்தியில் நீங்கள் படம் எடுத்து நீண்ட நாள் ஆகிவிட்டதே. ஏன் இந்தியில் ஒரு படத்தை எடுக்கக் கூடாது?’ என்று கேட்டார்.

அவரது அந்த யோசனை எனக்கும், எனது சகோதரர் குமரனுக்கும் சரியாகவே பட்டது. எனவே அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம். டி.ஆர்.பாலுவின் ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தின் உரிமையை இந்திக்காக வாங்க விரும்பினோம். நான், படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி உரிமையை வாங்கினேன். இதற்கிடையில் அதே படத்தை இந்தியில் தயாரிக்குமாறு, ஏற்கனவே கமலஹாசன், மல்லிகா அர்ஜூன்ராவ் என்பவருக்கு யோசனை கூறியிருக்கிறார். அவரும் அந்தப் படத்தின் உரிமையை படத்திற்கு பைனான்ஸ் செய்தவரிடம் இருந்து வாங்கியிருப்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது.

விதிமுறைகளின்படி தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கும் உரிமைதான் செல்லும் என்றாலும், மல்லிகா அர்ஜூன்ராவ் என்னிடம் வந்து படத்தைத் தான் தயாரிக்க விரும்புவதாகவும், விட்டுத்தரும்படியும் கேட்டுக்கொண்டார். எனவே அதை நாங்கள் பெரிது படுத்தி பிரச்சினையாக்க விரும்பவில்லை. ‘சரி..’ என்று ஒப்புக்கொண்டோம். நாங்கள் தந்திருந்த பணத்தை, தயாரிப்பாளர் எங்களுக்குத் திருப்பித் தந்து விட்டார்.

இதனை கேள்விப்பட்ட கமலஹாசன் மிகவும் வருத்தப்பட்டார். எங்கள் தயாரிப்பில் இந்தியில் நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் கமலிடம், ‘இந்திப் படத்திற்கு நீங்கள் தருவதாக இருந்த கால்ஷீட்டை, தமிழில் நாங்கள் எடுக்கப்போகும் படத்திற்கு ஒதுக்கித் தாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டேன். அவரும் அப்படியே ஒதுக்கித் தந்தார்.

பின்னர் பஞ்சு அருணாசலத்திடம் கதை கேட்டேன். அவர், ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பட்டிக்காடா பட்டணமா’ சாயலில் ஒரு கதையைச் சொன்னார். அதில் சென்டிமெண்ட் இல்லாமல் இருந்தது. மறுநாள் கமலின் தங்கை துளசியை வில்லன் கெடுத்து விடுவதாகவும், அதற்கு கமல் பழி வாங்குவதுபோலவும் கதை சொன்னார். மாறுவேடத்தில் கமல், துளசி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வந்து பழிவாங்கும் அந்த கதை மிகவும் கலகலப்பாக இருந்தது. கதையும் அற்புதமாக வந்தது. அந்தக் கதைதான் ‘சகலகலா வல்லவன்’.

நான் இங்கே ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும். ‘சகலகலா வல்லவன்’ என்ற பெயரை நாங்கள் கதைக்காக வைக்க வில்லை. திறமையில் கமலஹாசன் ஒரு சகலகலா வல்லவன் என்பதால் அந்தப் பெயரை வைத்தோம். பஞ்சு அருணாசலம் தான் அந்தப் பெயரை பரிந்துரை செய்தார்.

வடக்கே ராஜ்கபூர், குருதத் போல கலைஞனாகவும், தொழில்நுட்ப நிபுணராகவும் தெற்கே இருப்பவர் கமலஹாசன் ஒருவர் தான் என்பது என்னுடைய தீர்மானமான கருத்து. சிவாஜிக்குப் பிறகு நடிப்பில் மட்டுமல்லாமல், நடனமாடுவது, சண்டைக்காட்சி, பாடுவது, பாடல் எழுதுவது என எல்லாவற்றிலும் அவர் வல்லவர். மேக்கப் பற்றி அவருக்கு தெரியாததே இல்லை. மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர். அமெரிக்காவில் எந்த புதிய தொழில்நுட்பம் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர். இந்தியாவில் எல்லாம் தெரிந்த சினிமா கலைஞர் என்றால் எனக்குத் தெரிந்தவரை அது கமல்தான். அதனால்தான் ‘சகலகலா வல்லவன்’ என்ற தலைப்பை வைத்தோம். அதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் கமல்தான்.



‘சகலகலா வல்லவன்’ பெயர் நன்றாக இருந்தாலும், கொஞ்சம் கரடுமுரடாக இருப்பதாகவும், எல்லாராலும் சகஜமாக ‘சகலகலா வல்லவன்’ என்று உச்சரிக்க முடியுமா?’ என்று ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ் போன்றவர்கள் சந்தேகத்தை எழுப்பினார்கள்.

அவர்களுக்கு பஞ்சு அருணாசலம் சொன்ன பதில் மிகவும் திருப்திகரமாக இருந்தது. ‘ஜகதலப் பிரதாபன் என்ற பெயரையே மக்கள் சகஜமாக உச்சரித்தார்களே.. ‘சகலகலா வல்லவன்’ என்ற பெயர் அதை விட எளிமையாகத் தானே இருக்கிறது’ என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். இருந்தாலும் உடனடியாக அந்தப் பெயரை ஓ.கே. செய்யவில்லை. எங்களின் விநியோகஸ்தர்களுக்கு போன் செய்து, படத்தின் பெயர் பற்றி கேட்டோம். ‘உச்சரிக்கச் சிரமம்தான்’ என்று முதலில் சொன்னவர்கள், பிறகு தங்களுக்குள் ஆலோசித்து ‘சரி.. சகலகலா வல்லவனே இருக்கட்டும்’ என்று உறுதிபடுத்திய பின்புதான் அந்தப் பெயரை ஓ.கே. செய்தோம்.

எஸ்பி.முத்துராமன் 10 நாட்கள் வேறொரு படத்திற்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் சகலகலா வல்லவன் படத்திற்கு வேண்டிய நடிகர், நடிகைகள், செட், உடை போன்றவைகளை எல்லாம், புரடெக்‌ஷன் மேனேஜர் கே.வீரப்பனிடம் விரிவாக எழுதிக்கொடுத்து, விவரங்களைச் சொல்லிவிட்டுச் சென்றார். எல்லாவற்றையும் திட்டமிட்டு எழுதிக்கொடுத்ததால், அவர் வெளியூரில் இருந்து வந்த உடனேயே ‘சகலகலா வல்லவன்’ படப்பிடிப்பைத் தொடங்க முடிந்தது. இப்படி அவர் திட்டமிட்டு வேலை செய்ததால் தான் நாங்கள் அவரது இயக்கத்தில் பல நல்ல படங்களை கொடுக்க முடிந்தது.

‘சகலகலா வல்லவன்’ படத்தில் வரும் ‘இளமை இதோ.. இதோ..’ என்ற பாடல் இன்றும், ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டையும் உற்சாகப்படுத்தும் பாடலாக இருந்து வருகிறது. இந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவின் போது, அது ஒரு புத்தாண்டுப் பாடல் என்பதை அறிந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ‘ஆரம்பத்தில் ஹேப்பி நியூ இயர் என்று ஹை பிட்சில் பாடினால் நன்றாக இருக்குமே..’ என்று சொல்லி பாடினார். அவர் எப்போதுமே ஒரு பாடலைப் பாடும் முன்பு அது இடம் பெறும் காட்சியமைப்பைப் பற்றி தெரிந்து கொண்டுதான் பாடுவார். அந்தப் பாடல் இன்றும் பிரபலமாகவே இருந்து வருவது எங்களுக்குக் கிடைத்த பெருமை.

படப்பிடிப்பு முடிந்து போட்டுப் பார்த்த போது, இடைவேளைக்குப் பிறகு சரியான ‘அயிட்டம்’ ஏதுமில்லை என்று எங்களுக்குத் தோன்றியது. மக்களைக் கவரும் பாப்புலர் காட்சிகளை சினிமா வட்டாரத்தில் ‘அயிட்டம்’ என்று  நாங்கள் பேசிக் கொள்வோம்.

ஒரு நல்ல அயிட்டம் தேவை என நினைத்து, வேனை வைத்து சண்டைக் காட்சி எடுக்க முடிவு செய்தோம். வேனில் தொங்கியபடியே, மவுண்ட்ரோட்டில் போய்க்கொண்டே ஹீரோ சண்டை போடுவது போல காட்சியை எடுத்தோம். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல் ஆகியோர் அந்தக் காட்சியை அருமையாக எடுத்திருந்தனர். கமலஹாசன் மிகவும் ரிஸ்க் எடுத்து அந்தக் காட்சியில் நடித்தார். வேனில் தொங்கிக் கொண்டே அவர் ரொம்பவும் இயல்பான ஸ்டைலில் சண்டை போட்டவாறே சுற்றி வந்தது அற்புதமாக இருந்தது.

அதே போல படத்தில் ‘குச்சி சண்டை’ ஒன்று வரும். இதற்கு நல்லி குப்புசாமி செட்டியாரின் மகன்கள்தான், ஒரு சைனீஸ் படம் கொடுத்து உதவினார்கள். அதில் இருந்த ‘ஸ்டிக் பைட்’டை அடிப்படையாக வைத்துத்தான் அந்தக் காட்சியை எடுத்தோம். இதில் கமல் குச்சியை விரல்களால் சுற்றுவது பெரிய கைத்தட்டலை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை அமைத்தவர் ஜூடோ ரத்னம்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் கமல் நடித்தபோது, அவர் காட்டிய ஈடுபாடு முழுமையானது. கயிற்றில் தொங்கியபடி அவர் செய்த சாகசங்களில் அவர் கையில் கூட ஒரு முறை முறிவு ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அந்த சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்தார்.

படத்தில் மொத்தம் ஐந்து சண்டைக் காட்சிகள், ஆறு பாடல் காட்சிகள். இருந்தாலும் படத்தின் நீளம் 12,750 அடிகள்தான். இது தெரிந்த போது அப்போதைய தமிழ் திரைப்பட உலகமே வியப்படைந்தது. அதற்கு இயக்குனர் எஸ்பி.முத்துராமனும், எடிட்டர் விட்டலும்தான் காரணம். அவர்கள்தான் 15 ஆயிரம் அடி இருந்த படத்தின் நீளத்தை இந்த அளவுக்கு, படத்தின் சுவை குன்றாமல் குறைத்துக் கொடுத்தவர்கள்.

14–8–1982–ல் வெளியான ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் கமல் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்ற அந்தஸ்தைப் பெற்றார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், சில இயக்குனர் கள் கமலஹாசனுக்கு போன் செய்து, ‘நீங்கள் இதுபோன்ற படத்தில் நடித்திருக்கக்கூடாது’ என்று கூறியிருக்கிறார்கள்.

உடனே கமல் எனக்கு போன் செய்து அதை தெரிவித்தார். நான் அவருக்கு தைரியம் சொன்னேன். ‘இதுவரை ‘ஏ, பி’ சென்டர் ரசிகர்களிடம் மட்டுமே வரவேற்பைப் பெற்று வந்த உங்களின் படத்தை, இந்தப் படம் ‘சி, டி’ சென்டர் ரசிகர்களிடையேயும் கொண்டு சென்றிருக்கிறது. இதனால் உங்களின் மார்க்கெட் உயரத்தான் செய்யுமே தவிர குறையாது’ என்றேன். இன்று கமலஹாசன் கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருப்பதற்கு இந்தப் படம்தான் பிள்ளையார் சுழி போட்டது.

‘சகலகலா வல்லவன்’ படம் ரிலீஸ் ஆன 94–வது நாளில் தீபாவளி வந்ததால், நிறைய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாட முடியாமல் போனது. அதனால் வரும் காலங்களில் 100–வது நாள் கொண்டாடும் வகையில், தீபாவளிக்கு முன்னால் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். தியேட்டர்காரர்கள் படம் எவ்வளவு நன்றாக போனாலும், தீபாவளிக்கு புதிய படம் போட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இப்போது அந்தப் பிரச்சினையே இல்லை. வெள்ளிக்கிழமை வெளியாகும் படம், திங்கட் கிழமையை தாண்டினாலே அது வெள்ளிவிழா படமாகிவிடுகிறது.

அடுத்த வாரம்: கமலஹாசனுக்கு நடந்த அறுவைசிகிச்சை.

Next Story