சினிமா கேள்வி பதில்!-குருவியார்


சினிமா கேள்வி பதில்!-குருவியார்
x
தினத்தந்தி 20 Aug 2017 6:21 AM GMT (Updated: 20 Aug 2017 6:21 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்த ‘2.0,’ ‘காலா’ ஆகிய 2 படங்களில், எந்த படம்
முதலில் திரைக்கு வரும்? (பி.வினித், சென்னை–23)

‘2.0’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எனவே அந்த படம்தான் முதலில் திரைக்கு வரும். ‘காலா’ படத்தை அடுத்த கோடை விடுமுறை விருந்தாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்!

***

நடிகை அஞ்சலியை ராசியான கதாநாயகி என்கிறார்களே...? (ஏ.சேக் முகமது, வாணியம்பாடி)

அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதால், அவரை ராசியான கதாநாயகி ஆக்கி விட்டார்கள்!

***

குருவியாரே, படத்துக்கு படம் இளமையாக தெரிகிற நயன்தாரா, அதற்காக பிரத்யேகமாக என்ன செய்கிறார்? (ஆர்.ஸ்டீபன், திருச்சி)

உடல் மெலிவாக தெரிய வேண்டும் என்பதற்காக, நயன்தாரா வெறும் திரவ உணவை மட்டும் சாப்பிட்டு வருகிறார். பெரும்பாலும் அவர் இரவு உணவு எடுப்பதில்லையாம். பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறார்!

***

குருவியாரே, காதலில் தோல்வி அடைந்த சிம்புவுக்கு அவருடைய பெற்றோர்கள் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்காதது ஏன்? (பி.பவானி, குமாரபாளையம்)

சிம்புவுக்கு அவருடைய பெற்றோர்கள் மிக தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். பெண்ணை அவர்களுக்கு பிடித்தால், சிம்புவுக்கு பிடிப்பதில்லையாம். சிம்புவுக்கு பிடித்தால், ஜாதகம் பொருந்தவில்லையாம். எல்லாம் பொருந்துகிற மாதிரி ஒரு பெண்ணை தேடி வருகிறார்கள்!

***

கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படம் டிஜிட்டல் முறையில் திரைக்கு வந்ததே... அது வெற்றி பெற்றதா? (எஸ்.ஜேக் கப், களியக்காவிளை)

‘வெற்றி விழா’ டிஜிட்டல் படம், எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்து இருக்கிறது!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு நடிக்க வந்தது போல், ஜெய்சங்கரின் பேரனும், ரவிச்சந்திரனின் பேரனும் ஏன் நடிக்க வரவில்லை? (பாஸ்கரன், பெங்களூரு)

ஜெய்சங்கர் பேரனுக்கும், ரவிச்சந்திரன் பேரனுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையாம். இருவருக்குமே மருத்துவ துறையில் ஆர்வம் இருக்கிறதாம்!

***

குருவியாரே, “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...” என்ற பாடலை எழுதியவர் யார், அந்த பாடல் இடம் பெற்ற படம் எது, பாடலை பாடியவர் யார்? (ஜி.பழனியப்பன், மேட்டூர்)

அந்த பாடலை எழுதியவர், கவிஞர் வாலி. பாடல் இடம் பெற்ற படம், ‘தெய்வத்தாய்.’ பாடியவர், டி.எம்.சவுந்தரராஜன்!

***

காஜல் அகர்வாலுக்கு எது அழகு? அவருடைய கண்களா, உதடுகளா? (பி.வி.சீனிவாசன், கடலூர்)

அவருடைய கரிய பெரிய கண்களுக்குத்தான் நிறைய ஓட்டு கிடைத்து இருக்கிறது. உதடுகளுக்கு இரண்டாவது இடம்தான்!

***

குருவியாரே, நடிகர் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்து வரும் பொன்வண்ணன் எந்த டைரக்டரிடம் உதவி டைரக்டராக இருந்தார்? அவர் இதுவரை எத்தனை படங்களில் நடித்துள்ளார்? (ஆர்.ரங்கநாதன், காஞ்சிபுரம்)

பொன்வண்ணன், பாரதிராஜாவிடம் உதவி டைரக்டராக இருந்தார். அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்!

***

எஸ்.ஏ.சந்திரசேகரன் அவருடைய மகன் விஜய்யை வைத்து எத்தனை படங்கள் இயக்கியுள்ளார்? அந்த படங்கள் என்னென்ன? (பா.விஜய முருகன், குள்ளே கவுண்டன் புதூர்)

எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்யை வைத்து 7 படங்கள் டைரக்டு செய்து இருக்கிறார். அந்த படங்கள்: நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, விஷ்ணு, ரசிகன், மாண்புமிகு மாணவன், சுக்ரன், ஒன்ஸ் மோர்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் மார்க்கெட் இழந்த ஸ்ரேயாவுக்கு பிற மொழி பட வாய்ப்புகள் இருக்கிறதா, இல்லையா? (எம்.கார்த்திக், ராசிபுரம்)

ஸ்ரேயா கைவசம், ‘பைசா வசூல்’ என்ற ஒரே ஒரு தெலுங்கு பட வாய்ப்பு மட்டும் இருக்கிறது. இது, பாலகிருஷ்ணாவின் 101-வது படம் ஆகும்!

***

‘முனி’ படத்தின் நான்காம் பாகம் எடுப்பார்களா? அது எப்போது தொடங்கும்? (ஆனந்த், மதுரை-2)

‘முனி’ நான்காம் பாகம் எடுப்பது உறுதி. ராகவா லாரன்சின் அடுத்த படம் அதுதான். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது!

***

குருவியாரே, ஷங்கர் டைரக்டு செய்த படங்களில், மிக அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்திய படம் எது? (பாரதி விக்னேஷ், மதுரை-12)

‘அந்நியன்,’ ‘ஐ’ ஆகிய 2 படங்களுக்கும் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஏறக்குறைய 500 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, “எனக்கு வரப்போகிற கணவர் 6 அடி உயரம் இருக்க வேண்டும்” என்று ரகுல் பிரீத்சிங் சொல்லியிருக்கிறாரே...அதன் அர்த்தம் என்ன? (ஜி.கோபால், கோபிச்செட்டிப்பாளையம்)

உயரமான ஆண்களை ரகுல் பிரீத்சிங்குக்கு பிடிக் கும் என்று அர்த்தம்!

***

இன்றைய கதாநாயகிகளில் பணத்தாசை யாருக்கு அதிகம்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

கோடிகளில் சம்பளம் வாங்கும் அத்தனை கதாநாயகிகளுக்கும்...!

***

குருவியாரே, சிவகார்த்தி கேயனுடன் சமந்தா நடிக்கும் படம் எது? அந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு விட்டதா? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது!

***

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம் ஜோடி யார்? (எஸ்.ரவிகுமார், பணகுடி)

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா ஆகிய இரண்டு பேரும் விக்ரம் ஜோடிகளாக நடிக் கிறார்கள்!

***

குருவியாரே, அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் அக்‌ஷராஹாசனுக்கு என்ன வேடம்? (வி.தீபக், கோவை)

அக்‌ஷராஹாசன் வேடத்தை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைத்து இருக்கிறார்கள். அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அக்‌ஷராஹாசனுக்கு தடை உத்தரவு போட்டு இருக்கிறார்கள்!

***

“எதற்கும் ஒரு காலம் உண்டு...பொறுத்திரு மகளே...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? (எஸ்.ஜெயக்குமார், திண்டிவனம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘சிவகாமியின் செல்வன்!’

***

Next Story