திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ விரும்பும் நடிகை


திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ விரும்பும் நடிகை
x
தினத்தந்தி 24 Sep 2017 6:39 AM GMT (Updated: 24 Sep 2017 6:38 AM GMT)

இந்தி இளம் நடிகைகளில் அழகுமிக்கவரான ஷ்ரத்தா கபூர் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்.

ந்தி இளம் நடிகைகளில் அழகுமிக்கவரான ஷ்ரத்தா கபூர் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். ‘அவரது வெற்றிக்கு என்ன காரணம்?’ என்று கேட்டால், ‘தோல்வியில் கிடைத்த அனுபவங்களே தனது வெற்றிக்கு காரணம்’ என்கிறார். ஏன்என்றால் அவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. அதில் கிடைத்த அனுபவங்களை மூலதனமாகவைத்துக்கொண்டு, தோல்வியில் இருந்து மீண்டு, வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார். நடிகையாக மட்டுமல்ல, பாடகியாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஷ்ரத்தா கபூரிடம் சிறிது நேரம் உரையாடுவோம்!

திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் ஜோடிகளை பற்றி உங்கள் கருத்து என்ன?

காலம் மாறுகிறது. அதற்கேற்ப சமூகத்திலும் பல மாற்றங்கள் நிகழும். இதில் மற்றவர்கள் கருத்து சொல்ல என்ன இருக்கிறது. ஆனாலும் ஒரு பொது நிகழ்ச்சியில் நான் இதுபற்றி என் கருத்தை கூறியிருக்கிறேன். முன்பு படிப்பு முடிந்ததும் திருமணம் நடந்தது. பின்பு வேலை கிடைத்தால்தான் திருமணம் என்ற நிலை உருவானது. இப்படி சமூகத்தின் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கிறது. பலர் திருமண வயதைக் கடந்த பின்பும் திருமணம் செய்துகொள்ளாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே அதற்கு மாற்றாக இன்னொரு ஏற்பாட்டையும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இதை ஒரு கலாசார சீரழிவாக நினைத்தவர்கள்கூட இப்போது அமைதியாகி, அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கும் வந்துவிட்டார்கள்.

நீங்களும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை பற்றி சிந்திப்பதாக கூறியிருக்கிறீர்களே?

ஆமாம். நானும் அதுபற்றி சிந்தித்தேன். இப்போது நான் இருக்கும் நிலையில் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை. இன்னொருவரை நம்பி என்னால் குடும்பத்தைவிட்டு வெளியேறவும் முடியாது. ஒரு ஆணை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவரை அனுசரித்துப்போகும் பொறுமையும் எனக்கில்லை. அதற்கான அவகாசமும் எனக்கில்லை. பெரிய முயற்சிக்குப் பின்பு இப்போதுதான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறேன். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும்போது எனக்கு திருமணம் என்ற ஒரு ‘ஸ்பீட் பிரேக்கர்’ தேவையில்லை என்று தோன்றுகிறது. அதனால் ‘லிவ் இன் ரிலே‌ஷன்’ தான் எனக்கு சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் இன்னும் அதில் இறுதி முடிவு எடுக்கவில்லை.

தற்போது உங்கள் சினிமாக்கள் வெற்றியடைந்து கொண்டிருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இதுவரை யாராலும் அந்த காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த மிக சிறந்த விஷயங்கள்கூட ரசிகர்களிடம் எடுபடாமல் போய்விடுகிறது. அதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் அனுபவங்களை பயன்படுத்தி வெற்றிக்கான பயணத்தை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் படத்தின் தோல்விகள் உங்களை எந்த அளவுக்கு பாதிக்கும்?

பொதுவாக தோல்வி என்பது சகஜம்தான் என்றாலும் என்னால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட தோல்விகள் என்னை மிகுந்த சோர்வுக்கு உள்ளாக்கியது. எதிர்காலம் என்னவாகுமோ என்ற கேள்வியும் எழுந்தது. பின்பு தொடர்ச்சியாக கிடைத்த வெற்றிகள் மூலம் மனத் தெளிவடைந்தேன்.

நடிகையானதால் நீங்கள் இழந்தவை என்னென்ன?

பல சவுகரியங்களை இழந்திருக்கிறேன். சாதாரணமாக வெளியில் போய் வர முடியவில்லை. தோழிகளுடன் ஊர் சுற்ற முடியவில்லை. எனக்கு சாலையோர பானிபூரி மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது என்னால் அதனை சாப்பிட முடியவில்லை. காரில் போகும்போது அதனை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே செல்கிறேன். என் நாய் ஷைலியோடு ஜாலியாக வாக்கிங் போக முடியவில்லை. சில சமயம் எனக்கு இரண்டு முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். நடிகையாகியிருக்காவிட்டால் இந்த சவுகரியங்களை எல்லாம் நான் அனுபவித்திருப்பேன்.

பிரபல நடிகை- சாதாரண பெண், இந்த இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கும்?

சாதாரணப் பெண்ணாக இருக்க கடுமையான உழைப்பும், முயற்சியும் தேவையில்லை. சாதாரணப் பெண்ணாக இருந்தால் சில சந்தோஷங்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையில் பெரிய விஷயங்களை அடைய சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும். பிரபல நடிகையானது ஒரு சாதனைதானே!

கிசுகிசுக்களை பற்றி உங்கள் கருத்து?

கிசுகிசுக்கள் எல்லாமே ஆதாரமற்றது. அபத்தமாக எழுதுவது அடுத்தவர்கள் வாழ்க்கையோடு விளையாடும் விளையாட்டு. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலை நினைத்துப்பார்க்கவேண்டும். என்னைப் பற்றி எழுதுவதோடு நிற்காமல் என் குடும்பத்தாரைப் பற்றியும் எழுதுகிறார்கள். அதுதான் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. பர்ஹான் அக்தரையும், என்னையும் இணைத்து தவறாக எழுதி இருக்கிறார்கள். இது இரண்டு பேர் வாழ்க்கையையும் பாதிக்கும். பர்ஹான் என்னிடம் மன்னிப்பு கேட்டார். நானும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

உங்கள் பொழுதுபோக்கு என்ன?

வீட்டில் உள்ளவர்களோடு பொழுதை கழிப்பேன். நீண்ட தூரம் காரை ஓட்டிச்செல்வதும் பிடிக்கும். குடும்பத்தோடு வெகுதூரம் எங்காவது ஊர் சுற்றிவிட்டு வருவேன். ‘தீம் பார்க்’களுக்கு செல்லப் பிடிக்கும். ஆனால் மக்கள் அங்கு நிறைய கூடுவதால் என்னால் போக முடிவதில்லை. வீட்டில் இருக்கும்போது நினைத்த நேரத்தில் சாப்பிட்டுவிட்டு தூங்குவேன். செல்போனை ஆப் செய்து தூரத்தில் தூக்கிப்போட்டுவிடுவேன்.

உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?


கொஞ்சம் காமெடி கலந்த கதாபாத்திரம் பிடிக்கும். மக்களை சிரிக்க வைப்பது பெரிய சேவை. நான் நடித்திருக்கும் ‘ஹாப் கேர்ள் பிரண்ட்’ அதுபோன்ற கதைதான். நான் ஆசைப்பட்டது போன்ற கதாபாத்திரம் அது.

Next Story