குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 24 Sep 2017 7:39 AM GMT (Updated: 24 Sep 2017 7:39 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார் நடிக்கும் புதிய படம் எது? அந்த படத்தை தயாரிப்பவர் யார், இயக்குபவர் யார்? (பி.சூர்யகுமார், சென்னை–1)

அஜித்குமார் தனது அடுத்த படத்தை இன்னும் முடிவு செய்யவில்லை. சில டைரக்டர்களிடம் அவர் கதை கேட்டு இருக்கிறார். எந்த கதையில் நடிப்பது என்று அவர் முடிவெடுக்கவில்லை!

***

திரையுலகில் திரிஷாவின் சாதனை எது, அவர் சந்தித்த வேதனை எது? (எஸ்.ஸ்ரீதர், ஈரோடு)

15 வருடங்களுக்கு முன்பு சாதாரண துணை நடிகையாக அறிமுகமாகி, படிப்படியாக கதாநாயகியாக உயர்ந்து, தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக நீடித்து நிலைத்திருப்பது, திரிஷாவின் சாதனை. பிரபல கதாநாயகியாக இருக்கும்போதே மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதது, வேதனை!

***

கவர்ச்சியும், காமெடியும் கலந்து நடித்து வரும் ‌ஷகிலா, படுகவர்ச்சியாக நடித்து வரும் பாபிலோனா ஆகிய இருவரில் வயதில் மூத்தவர் யார்? (ஜெய கிருஷ்ணா, பெருங்களத்தூர்)

பாபிலோனாவை விட வயதிலும், திரையுலக அனுபவத்திலும் மூத்தவர், ‌ஷகிலா!

***

குருவியாரே, ‘‘இரவினில் ஆட்டம்...பகலினில் தூக்கம்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர், பாடலுக்கு நடித்தவர் யார்? (ஜெ.சார்லஸ், தூத்துக்குடி)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘நவராத்திரி.’ பாடியவர்: டி.எம்.சவுந்தரராஜன். நடித்தவர்: ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

தமிழ் பட கதாநாயகிகளில் கார், பங்களா, தோட்டம், மற்றும் நிலபுலன்களாக அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் யார்? (கே.சீனிவாசன், ஸ்ரீரங்கம்)

கேரளாவில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2 சகோதரி நடிகைகளிடமே அதிக சொத்துக்கள் இருப்பதாக கேள்வி!

***

குருவியாரே, ஸ்ரீதிவ்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்த மார்க்கெட் இப்போது இல்லையே...என்ன காரணம்? (என்.ரத்னகுமார், பெரம்பலூர்)

புது பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்ற நுட்பம் ஸ்ரீதிவ்யாவுக்கு தெரியவில்லை போலும்!

***

வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘பார்ட்டி’ படம் எந்த நிலையில் உள்ளது? (கே.ஆர்.கார்த்திகேயன், சின்ன சேலம்)

‘பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு பிஜீ தீவில், இரவு–பகலாக நடைபெற்று வருகிறது. 50 நாட்கள் ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்!

***

குருவியாரே, விஷால் கதாநாயகனாக நடிக்க, லிங்குசாமி டைரக்டு செய்யும் ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விட்டதா? அதில் கதாநாயகி யார்? (எம்.நரேஷ், கரூர்)

‘சண்டக்கோழி–2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 20–ந் தேதி, சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ். விஷால்–கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற ஒரு பாடல் காட்சி முதன்முதலாக படமாக்கப்பட்டது!

***

குஷ்பு நடித்த படங்களில், மிக அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம் எது? (கே.செல்வகுமார், கோவை)

‘சின்ன தம்பி.’ இந்த படத்தில், பிரபு கதாநாயகனாக நடித்து, பி.வாசு டைரக்டு செய்திருந்தார். கே.பி.பிலிம்ஸ் பாலு தயாரித்து இருந்தார்!

***

குருவியாரே, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் படம் எது? (இரா.சங்கர்லால், திருக்கோவிலூர்)

சிம்பு, ஒரு ஆங்கில படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே. திரைக்கதை–வசனத்தை கவுதம் வாசுதேவ் மேனன் எழுதியிருக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது!

***

ஆர்யா என்ன ஆனார்? அவரை மீண்டும் திரையில் பார்ப்பது எப்போது? (கே.சசிதரன், பொள்ளாச்சி)

ஆர்யா நடித்து வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே ஆர்யா உடனடியாக ஒரு வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்!

***

குருவியாரே, விஜய், விஜய் சேதுபதி இருவரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிப்பார்களா? (ஈ.சிவா, அடையார்)

விஜய், விஜய் சேதுபதி இருவரும் கைவசம் அதிக படங்களை வைத்து நடித்து வருகிறார்கள். இரண்டு பேரும் ஒரே படத்தில் இணைவது, அபூர்வம்!

***

உதயநிதி ஸ்டாலினுக்கு பொருத்தமான கதாநாயகி யார்? (எச்.காதர் பாட்ஷா, துவரங்குறிச்சி)

‘ஒரு கல் ஒரு கண்ணாடி,’ ‘மனிதன்’ ஆகிய 2 படங்களில் ஜோடி சேர்ந்த ஹன்சிகா பொருந்திய அளவுக்கு வேறு கதாநாயகி யாரும் உதயநிதிக்கு பொருந்தவில்லை!

***

குருவியாரே, கரண் வில்லனாக நடித்த படம் எது? (சி.ராஜேந்திரன், திருநின்றவூர்)

கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’ படத்தில்தான் கரண் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் வில்லனாகத்தான் நடித்தார்!

***

‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த அனு இமானுவேல், எந்த ஊரை சேர்ந்தவர்? இதுவரை அவர் எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (ஏ.ஆனந்த், காஞ்சீபுரம்)

அனு இமானுவேல், கேரளாவை சேர்ந்தவர். ‘துப்பறிவாளன்’ படத்துக்கு முன்பு அவர் 2 மலையாள படங்களிலும், 7 தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, புதுமுகங்கள் நடித்திருந்தாலும், சில படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய படம் எது? (டி.ஜாக்சன், வேதாரண்யம்)

இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நடித்து, வாசு பாஸ்கர் இயக்கியுள்ள ‘பள்ளிப்பருவத்திலே’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!

***

காஜல் அகர்வால் மூத்த கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பாரா? (ஆர்.விஜயன், மதுரை)

ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் அவர் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து இருந்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் ஜோடி என்றால் உடனே சம்மதம் சொல்லி விடுவாராம்!

***

குருவியாரே, சங்கவி என்ன ஆனார்? திரையில் அவரை பார்க்க முடியவில்லையே...? (எஸ்.ரஞ்சித், வாணியம்பாடி)

அவர் நடித்து முடித்துள்ள ‘கொளஞ்சி’ படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்!

***

ஊர்வசியும் ‘சின்னத்திரை’க்கு வந்து விட்டாரே...? (வி.ராஜேஷ், கூடுவாஞ்சேரி)

‘வம்சம்’ என்ற தொடரில், ரம்யாகிருஷ்ணன் மீது கொண்ட நட்புக்காக ஊர்வசி நடித்துக் கொடுக்கிறாராம்!

***

Next Story