“தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம்” சுருதிஹாசன், ரகுல் பிரீத்சிங் வற்புறுத்தல்


“தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம்” சுருதிஹாசன், ரகுல் பிரீத்சிங் வற்புறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2017 10:15 PM GMT (Updated: 17 Oct 2017 7:04 PM GMT)

“தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். சுற்றுச்சூழல் மாசுபடும், விலங்குகள் பயப்படும்” என்று நடிகை சுருதிஹாசன், ரகுல் பிரீத்சிங் ஆகிய இருவரும் வற்புறுத்தி உள்ளனர்.

சென்னை,

நடிகை சுருதிஹாசன் இது குறித்து கூறியதாவது:-

“சிறுவயதில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது எனக்கு விருப்பமாக இருந்தது. அனால் வளர்ந்த பிறகு வெடி சத்தம் அறவே பிடிக்காமல் போய்விட்டது. இதனால் பட்டாசு வெடிப்பதை விட்டு விட்டேன். தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தேவை இல்லை. அதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை.

பட்டாசு வெடி சத்தம் குழந்தைகளை கஷ்டப்படுத்தும். இதனால் கவலைப்படும் பெற்றோர்களை நான் பார்த்து இருக்கிறேன். வாயில்லாத பிராணிகளும் விலங்குகளும் வெடிசத்தத்தால் பயந்து நடுங்கும். பட்டாசுக்கு பதிலாக குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம். சுவையான உணவு பண்டங்கள் தயாரிக்கலாம். வீட்டில் விளக்குகள் ஏற்றி வைக்கலாம். பூக்களால் வீட்டை அலங்காரம் செய்யலாம். அதில்தான் மன நிம்மதி இருக்கும்.”

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

நடிகை ரகுல்பிரீத் சிங் கூறியதாவது:-

“நான் பத்தாவது வகுப்பு படித்தது வரை பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினேன். அதன் பிறகு ஒரு நாய் குட்டியை வாங்கி வந்து வீட்டில் வளர்த்தேன். தீபாவளி வெடி சத்தத்தில் அந்த நாய் குட்டி பயந்ததை பார்த்து மனம் மாறி இனிமேல் பட்டாசுகள் வெடிப்பது இல்லை என்று முடிவு எடுத்தேன்.

தீபாவளி பண்டிகை என்ற பெயரில் சுற்றுப்புறத்தை குப்பையாக மாற்றுவதும் ஒலி மாசு ஏற்படுத்துவதும் ஏற்புடையது அல்ல. அதற்கு பதிலாக எத்தனையோ நல்ல விஷயங்களை செய்யலாம். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்துவதுதான் உண்மையான தீபாவளியாக இருக்கும். ஒவ்வொரு தீபாவளியையும் வீட்டில் விளக்குகள் ஏற்றித்தான் நான் கொண்டாடுகிறேன். பட்டாசுகள் வெடிப்பதை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

தெலுங்கு நடிகை ஸ்ரத்தா கபூர், பட்டாசுகள் வெடித்து வாயில்லாத ஜீவன்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று வீடியோவில் பேசி அதனை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. நீங்கள் காரில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தி சுற்றுப்புறத்தை மாசு படுத்தாதீர்கள். அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு பிராணிகளுக்கு உதவி செய்ய வாருங்கள் என்றெல்லாம் அவருக்கு பதிலடி கொடுத்து கருத்துக்கள் பதிவிட்டனர்.

Next Story