“மெர்சல் படத்தை எதிர்ப்பது சரியல்ல” நடிகர்-நடிகைகள் ஆதரவு


“மெர்சல் படத்தை எதிர்ப்பது சரியல்ல” நடிகர்-நடிகைகள் ஆதரவு
x
தினத்தந்தி 22 Oct 2017 10:45 PM GMT (Updated: 22 Oct 2017 8:31 PM GMT)

“மெர்சல் படத்தை எதிர்ப்பது சரியல்ல” என்று நடிகர்-நடிகைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை விமர்சிக்கும் வசனங்கள் உள்ளன. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் கண்டித்தனர். ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து உள்ளார்.

இதனால் மெர்சல் தேசிய அளவில் பிரபலமாகி ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது. டெலிவிஷன்களிலும் இந்த படம் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. எதிர்ப்பு காரணமாக சர்ச்சை காட்சிகளை நீக்க தயார் என்று மெர்சல் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஆனால் நடிகர்களும் நடிகைகளும் சர்ச்சை காட்சிகளை நீக்க கூடாது என்று மெர்சலுக்கு ஆதரவான கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

நடிகர் பார்த்திபன்:- கட்சிகாரர்களின் நெரிசல் காரணமாக மெர்சல் காணவில்லை. முட்டி மோ(டி)தி பார்க்க வைத்து விடுவார்களோ?. வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜயம். மரியாதைக்குரிய எச்.ராஜா மரியாதையை குறைக்க வேண்டும். அவர் களவாடி மெர்சல் கண்டிருந்தால். நான் எல்லோருக்கும் நண்பன். ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும் அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி.

நடிகர் விஜய் சேதுபதி:- கருத்து சுதந்திரம் இல்லாமல் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லாதீர்கள். மெர்சலுக்காக மக்கள் குரல் கொடுக்கும் நேரம் இது.

நடிகர் பிரசன்னா:- பா.ஜனதாவுக்கு முதல் எதிரி நீங்களும் உங்கள் மாநில தலைவரும்தான். இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர்கள்.

நடிகர் சிபிராஜ்:- திரைப்படங்களின் கதை விவாதத்தில் கட்சி பிரமுகர்களும் பங்கேற்க வேண்டும் என்று புதிய விதியை வகுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நடிகை குஷ்பு:- தணிக்கை சான்று பெற்று சட்டப்படி வெளியிடப்பட்ட படத்தை கேள்வி கேட்க எந்த கட்சிக்கும் தனி நபருக்கும் உரிமை கிடையாது. மெர்சல் படம் பா.ஜனதா, காங்கிரஸ் பற்றியது அல்ல. சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயகம் பற்றியது. பா.ஜனதா, ஜனநாயகத்தை கொல்கிறது. பா.ஜனதாவால் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாது. விமர்சனத்தை சிரித்தபடி ஏற்க கற்றுக் கொள்ளுங்கள். சுதந்திரத்தை பறிப்பது வெட்க கேடானது.

நடிகை ஸ்ரீப்ரியா:- ஒரு நடிகர் இயக்குனர் எழுதி கொடுத்ததை தான் பேசுகிறார். இதுதான் நியதி. இதற்காக அந்த நடிகரிடம் விளக்கம் கேட்பது நியாயமில்லை.

நடிகை ஸ்ரீதிவ்யா:- மெர்சல் படம் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறது. அந்த படத்தின் காட்சிகளை நீக்க கூடாது.

நடிகை கஸ்தூரி:- மெர்சல் பட விவகாரத்தில் எச்.ராஜா மதம் மற்றும் சாதி அடையாளங்களை கொண்டு வந்து இருப்பது தவறானது.

நடிகை கவுதமி:- நான் மெர்சல் படத்தை பார்த்து விட்டேன். தணிக்கை குழு இந்த படத்துக்கு ‘யுஏ சான்றிதழ் அளித்து இருப்பது சரியான நடவடிக்கை. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்த படத்தில் சொல்லப்படும் கரு அவசியமானது.

நடிகை காயத்ரி ரகுராம்:- திரைப்படங்களில் வரும் வசனங்களை நடிகர்கள் எழுதுவது இல்லை. அனைவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதற்காக நடிகரை குறைசொல்வது சரியல்ல. மெர்சல் படம் தணிக்கை செய்யப்பட்டுத்தான் வந்துள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்:- முழு கருத்து சுதந்திரமே சிறந்த ஜனநாயகம். இந்தியா ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். எனவே மெர்சல் படத்தை மறு தணிக்கை செய்து காட்சிகளை நீக்க தேவை இல்லை.

டைரக்டர் சீனுராமசாமி:- கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை. சாதி, மதம், அரசியல், வியாபாரம் போன்ற சக்திகளினால் அந்த சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது.

Next Story