குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 19 Nov 2017 8:59 AM GMT (Updated: 19 Nov 2017 8:58 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, இந்திய திரையுலகில், அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி யார்? (ஜெய் விக்னேஷ், சென்னை–63)

இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர், ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கி, இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில், முதல் இடத்தில் இருக்கிறார்!

***

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவருக்கு நடிகர் சங்கம் ஆதரவு கொடுக்குமா? (வி.சீனிவாசன், போரூர்)

நிச்சயமாக ஆதரவு கொடுக்கும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்!

***

குருவியாரே, ஹன்சிகா, முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்காக மும்பை அருகே நிலம் வாங்கி இல்லம் கட்டப் போவதாக கூறினாரே...அவர் கட்டி முடித்து விட்டாரா? (ஆர்.தனசேகரன், சங்ககிரி)

இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டுமான வேலை கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறதாம்!

***

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார்? (எஸ்.ராம்குமார், திருச்சி)

ஏ.ஆர்.ரகுமான், ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்! தெரிந்த டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு சம்பளத்தை குறைத்து கொள்கிறாராம்!

***

குருவியாரே, தனுஷ் நடித்து அடுத்து திரைக்கு வரும் படம் எது? அவர் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள் எவை? (பி.தங்கராஜ், கடலூர்)

தனுஷ் நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘வட சென்னை.’ தொடர்ந்து பெய்த அடை மழை காரணமாக படப்பிடிப்பு நடத்தி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ‘வட சென்னை’ படத்தை முடித்து விட்டு தனுஷ், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படம் முடிந்ததும் அவர், ‘மாரி–2’ படத்தில் நடிக்க இருக்கிறார்!

***

தமிழ் பட கதாநாயகிகளில், செல்லப்பிராணிகளை அதிக அளவில் வளர்ப்பவர் யார்? (சி.கே.சந்தோஷ், திருச்செங்கோடு)

ரூபா மஞ்சரி. கொல்லிமலையில், இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆடு, மாடு, கோழி, குதிரை, ஒட்டகம் என நிறைய செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்!

***

குருவியாரே, விஜயகாந்த், சத்யராஜ் ஆகிய 2 பேரில், அதிக படங்களில் நடித்து இருப்பவர் யார்? (ஏ.விமல்ராஜ், தர்மபுரி)

விஜயகாந்த் இதுவரை 157 படங்களில் நடித்து இருக்கிறார். சத்யராஜ், 200 படங்களை தாண்டி விட்டார். அதில் வில்லனாக மட்டும் 75 படங்களில் நடித்து இருக்கிறார்!

***

நாகார்ஜுனை காதலித்து மணந்த அமலா சினிமாவில் நடிப்பதை கைவிட்டது போல், நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்த சமந்தாவும் சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவாரா? (சி.டெல்லி பாபு, அரக்கோணம்)

சமந்தா, சினிமாவில் நடிப்பதை ஒருபோதும் கைவிட மாட்டாராம். இன்றைய தேதி வரை, அவருடைய முடிவு இது. நாளை என்ன முடிவு எடுப்பாரோ?

***

குருவியாரே, சிவகார்த்திகேயன் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க காரணம் என்ன? (ஜி.சுமித்ரா, சின்ன சேலம்)

அதிக படங்களில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்வதை விட, ஒரு படத்தில் மட்டுமே நடித்து, சிவகார்த்திகேயன் பெயரை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறாராம்!

***

மறைந்த ஆந்திர முதல்–மந்திரி என்.டி.ராமராவின் வாழ்க்கை படமாகிறதாமே... அதில், லட்சுமி பார்வதியின் கதாபாத்திரம் இடம் பெறுமா? அப்படி இடம் பெற்றால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார்? (ஆர்.ராஜா, மதுராந்தகம்)

அந்த படத்தில், லட்சுமி பார்வதியின் கதாபாத்திரம் நிச்சயமாக இடம் பெறுகிறது. அதில், ராய் லட்சுமி நடிக்கிறார்!

***

குருவியாரே, விஜய், மகேஷ்பாபு ஆகிய இருவரும் இணைந்து நடிப்பார்களா? (ஏ.பாரூக், அமானியா நகர்)

இரு துருவங்களும் இணைவதற்கு வாய்ப்பு மிக குறைவு. அப்படி இருவரும் இணைந்தால், அபூர்வம்!

***

இன்னும் 20 வருடங்கள் கழித்து தமிழ் சினிமா எப்படியிருக்கும்? (பெ.ஸ்ரீதர், ஓமலூர்)

20 வருடங்கள் கழித்து தமிழ் சினிமா வீடு தேடி வந்து விடும்!

***

குருவியாரே, முன்னாள் கதாநாயகி சரோஜாதேவி வசிப்பது சென்னையிலா, வெளியூரிலா? (வி.ராஜேந்திரன், காமைய கவுண்டன்பட்டி)

சரோஜாதேவி, பெங்களூரில் வசித்து வருகிறார். தேவைப்படும்போது மட்டும் அவர் சென்னைக்கு வந்து போகிறார்!

***

இயக்குனர் பூபதி பாண்டியனின் சொந்த ஊர் எது? தற்போது அவர் இயக்கி வரும் படம் எது? (முருகன், மதுரை)

பூபதி பாண்டியனின் சொந்த ஊர், பட்டுக்கோட்டை. தற்போது அவர், ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில், கதாநாயகனாக விமல் நடிக்கிறார்!

***

குருவியாரே, ‘அறம்’ படத்தின் வெற்றி நயன்தாராவை அரசியலுக்கு அழைத்து வருமா? (எம்.சவுந்தரராஜன், திருப்பூர்)

கொண்டு வந்தால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

***

அயர்லாந்தில் பணிபுரிந்த டாக்டரை திருமணம் செய்து கொண்ட நடிகை கோபிகா, இப்போது எந்த ஊரில் இருக்கிறார்? (எஸ்.ராஜேஷ், திருக்கோவிலூர்)

கோபிகா கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்!

***

குருவியாரே, நமீதா திருமணத்துக்குப்பின் நடிப்பாரா? (கே.ரவிவர்மா, அச்சரப்பாக்கம்)

நமீதா அவருடைய ‘மச்சான்’களை ஒருபோதும் மறக்க மாட்டாராம். சினிமாவில் அவர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்து இருக்கிறார்!

***

பிரபு, கார்த்திக் ஆகிய இரண்டு பேரில் வயதில் மூத்தவர் யார்? (இரா.பாஸ்கர பால்பாண்டியன், கோவில்பட்டி)

பிரபுதான் மூத்தவர். இவரை விட, வயதில் இளையவர், கார்த்திக்!

***

குருவியாரே, ‘டார்லிங்’ நாயகி நிக்கி கல்ராணிக்கு புது பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதே...அதன் ரகசியம் என்ன? (கே.சி.பிரதாப், ஊட்டி)

நிக்கி கல்ராணியின் உழைப்பு...அவருடைய கடுமையான உழைப்புதான் அந்த ரகசியம்!

***

ஐஸ்வர்யா ராஜேஷ், சென்னையில் வீடு கட்டியிருக்கிறாராமே...உண்மையா? (வெ.கார்த்திகேயன், உசிலம்பட்டி)

இப்போதுதான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்!

***

Next Story