தொண்டன்


தொண்டன்
x
தினத்தந்தி 27 May 2017 5:04 PM GMT (Updated: 27 May 2017 5:04 PM GMT)

அதிகாலையில், நடை பயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவரை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டி சாய்க்கிறது.

கதையின் கரு: ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் மனிதநேயம்.

அவரை கொலை செய்ய தூண்டியவர், மந்திரி மகன் நமோ நாராயணன். அவருடைய அடியாட்களால் வெட்டப்பட்டவருக்கு அதிர்ஷ்டவசமாக உயிர் இருக்கிறது. கடமை உணர்வும், மனிதநேயமும் மிகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி வெட்டப்பட்டவரை தனது ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பிழைக்க வைத்து விடுகிறார்.

இதனால், சமுத்திரக்கனியை நமோ நாராயணன் விரோதமாக பார்க்கிறார். அவர் மீது ஒரு கண் வைக்கும்படி தன் அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார். இந்த நிலையில், நமோ நாராயணனின் தம்பி சவுந்தரராஜன் ஒரு கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்து அடி வாங்குகிறார். தன்னை அடித்த மாணவியை பழிவாங்க, கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து அவரை வெட்டுகிறார். மாணவிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அவரை திருப்பி அடிக்கிறார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சவுந்தரராஜனை சமுத்திரக்கனி தனது ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார். சவுந்தரராஜனை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக கூறுகிறார். சமுத்திரக்கனிதான் தன் தம்பியை கொன்று விட்டதாக நம்புகிறார், நமோ நாராயணன். அந்த ஆத்திரத்தில் சமுத்திரக்கனியை பழிவாங்குவதற்காக அவருடைய வீட்டில் ‘கியாஸ் சிலிண்டரை’ வெடிக்கச் செய்கிறார். அதில், சமுத்திரக்கனியின் தந்தை வேல ராமமூர்த்தி படுகாயம் அடைகிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவி சுனைனாவுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது.

கொதித்தெழும் சமுத்திரக்கனி, நமோ நாராயணனுக்கு எப்படி பாடம் புகட்டுகிறார் என்பது மீதிக்கதை.

இப்படி ஒரு படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிறது என்று சொல்கிற மாதிரி, ‘நேர்மறையான அணுகுமுறையில்’ ஒரு படம். உயிருக்கு போராடுகிறவரை பிழைக்க வைக்க வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவராக சமுத்திரக்கனி, வாழ்ந்து இருக்கிறார். தன் கொலை திட்டத்தை கெடுத்து விட்டானே என்ற விரோத மனப்பான்மையில், “ஏய், இங்க வா” என்று திமிராக அழைக்கும் நமோ நாராயணனிடம், “உயிருக்கு போராடுகிறவர் நல்லவரா, கெட்டவரா என்று நான் பார்ப்பதில்லை. என் கடமையை செய்கிறேன்” என்று நேர்மையாக பதில் சொல்லும் அந்த ஆரம்ப காட்சியிலேயே சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மீது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது. அது, படம் முழுக்க தொடர்கிறது.

தன் குடும்பத்தை அழிக்க முயன்றவனை ஒரு கை பார்த்து விடலாம் என்ற ஆத்திரத்தில் அவர், நமோ நாராயணன் கழுத்தில் கத்திரியை வைக்கும்போது, வாழ்வு கொடுத்தவரின் வாசகம் நினைவுக்கு வர- “நான் அவனை பழிவாங்க மாட்டேன். அவன் கவனத்தை திருப்பி விடுகிறேன்” என்று கொலை வெறியில் இருந்து சமுத்திரக்கனி தன்னை விடுவித்துக் கொள்ளும்போது, கைதட்ட தோன்றுகிறது.

இரவு நேரத்தில் ரோந்து வரும் சமுத்திரக்கனி-கஞ்சா கருப்புக்கு சவாலாக பாய்ந்து ஓடும் அந்த வெள்ளை உருவமும், அது தொடர்பான காட்சிகளும், புதிரான நகைச்சுவை. சமுத்திரக்கனி-சுனைனா அறிமுக காட்சியும், சுனைனாவை சமுத்திரக்கனிக்காக பெண் கேட்கும் காட்சியும், சுவாரஸ்யமானவை. சுனைனா நடிப்பிலும், உடம்பிலும் மெருகேறி இருக்கிறது.
போதைக்கு அடிமையாக இருந்து திருந்துகிற இளைஞராக விக்ராந்த். இவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். சூரி தொடர்பான காட்சிகளும், வசனங்களும், அமர்க்களமான காமெடி. நமோ நாராயணனின் தந்தையாக வரும் ஞானசம்பந்தம், ஆம்புலன்ஸ் உதவியாளராக வரும் கஞ்சா கருப்பு ஆகியோரும் கலகலப்பூட்டுகிறார்கள். வில்லன் நமோ நாராயணன் நடிப்பில், வேகம் போதாது.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளை வேகமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கின்றன. இடைவேளை வரை, திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களுடன் இதுவரை பார்த்திராத கதையோட்டம். இடைவேளைக்குப்பின், வில்லனின் கவனத்தை திருப்ப சமுத்திரக்கனி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், புத்திசாலித்தனமான கற்பனை.

படத்தின் ‘டைட்டில்,’ கதையுடன் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.


Next Story