ரங்கூன்


ரங்கூன்
x
தினத்தந்தி 11 Jun 2017 11:49 PM GMT (Updated: 11 Jun 2017 11:49 PM GMT)

1988-ல் கதை தொடங்குகிறது. கவுதம் கார்த்திக் சிறுவனாக இருக்கும்போது, அவருடைய குடும்பம் பர்மாவில் இருந்து சென்னைக்கு குடிபெயர்கிறது.

கதையின் கரு: ஒரு பர்மா தமிழனின் வாழ்க்கை.

 அவர் வளர்ந்து வாலிபரான நிலையில், நகை வியாபாரம் செய்யும் சித்திக்கிடம் வேலைக்கு சேருகிறார். சித்திக்கின் நன்மதிப்பை பெற்ற கவுதம் கார்த்திக் படிப்படியாக உயர்கிறார்.

சில வருடங்களுக்கு முன் கைவிட்ட கடத்தல் தொழிலை, கடனை அடைப்பதற்காக மீண்டும் தொடங்குகிறார், சித்திக். அதற்கு வலது கையாக இருக்கிறார், கவுதம் கார்த்திக். அவருடைய நண்பர்கள் இரண்டு பேரை சேர்த்துக் கொண்டு, ஒரு பெரிய கடத்தலை செய்வதற்காக கவுதம் கார்த்திக் பர்மா செல்கிறார். ரங்கூனில் தங்க கட்டிகளை கொடுத்து விட்டு, பதிலுக்கு ரூ.6 கோடி பணத்தை பெறுகிறார். அந்த பணம் முழுவதும் திடீரென்று காணாமல் போகிறது.

“என்ன செய்வாயோ தெரியாது. இரண்டு நாட்களில் பணம் முழுவதும் எனக்கு வேண்டும்” என்கிறார், சித்திக். அந்த பணத்துக்காக, ஒரு கோடீஸ்வரரின் மகனை கவுதம் கார்த்திக் கடத்துகிறார். இந்த கடத்தல் சம்பவம் அவரை சிக்கலில் மாட்டி விடுகிறது. அதில் இருந்து அவர் விடுபட்டாரா, இல்லையா? என்பதே கதை.

கவுதம் கார்த்திக்கின் சின்ன கண்களும், மாறுபட்ட முகதோற்றமும் பர்மா தமிழர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. வட சென்னையில் வசிக்கும் ஒரு ஏழை இளைஞராக ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல், கதாபாத்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்து இருக்கிறார். அவர் சித்திக்கிடம் வேலைக்கு சேர்ந்த பிறகே கதை நகர்கிறது.

“உன் தங்கைக்கு வெளி இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறாயே...எங்களை எல்லாம் பார்த்தால் மாப்பிள்ளையாக தெரியவில்லையா?” என்று கேட்கும் நண்பனை கட்டிப்பிடித்து, “நீதான்டா என் தங்கைக்கு மாப்பிள்ளை” என்று சொல்லும் இடத்திலும், அந்த மாப்பிள்ளையின் உடலை கட்டிப்பிடித்து கதறும் காட்சியிலும் கவுதம் கார்த்திக் நெகிழவைக்கிறார்.

சனாவுடனான அவருடைய காதலும், அந்த காதல் தொடர்பான காட்சிகளும் கதையுடனும், மனதுடனும் ஒட்டவில்லை. சனாவுக்கு அதிக வேலை இல்லை.
‘குணசீலன் என்ற சியா’ கதாபாத்திரத்துக்கு சித்திக், மிக பொருத்தமான தேர்வு. இவர் வில்லனாக மாறுவது, எதிர்பாராத திருப்பம்.

படத்தின் இன்னொரு கதாநாயகன், அனிஷ் தருண்குமாரின் ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகளை இரவு நேரங்களிலேயே படமாக்கியிருப்பது, படத்துக்கு திகில் சேர்க்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, கதையோட்டத்துக்கு பலம் கூட்டுகிறது.

பர்மா தமிழர்களின் வாழ்வியல் பின்னணியில், ஒரு மாறுபட்ட கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி. சித்திக் வில்லனாக மாறுவதற்கான காரணம், வலுவாக இல்லை. இந்த குறையை திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை மூடி மறைத்து, ரங்கூனுக்கு ஒரு புதிய தோற்றப் பொலிவு தருகிறது.

Next Story