சத்ரியன்


சத்ரியன்
x
தினத்தந்தி 11 Jun 2017 11:52 PM GMT (Updated: 24 Jun 2017 10:20 AM GMT)

கதையின் கரு: ரவுடியை காதலிக்கும் தாதா மகள். திருச்சியை ஆட்டி படைக்கும் தாதா சமுத்திரம், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வை சந்தித்த ஆத்திரத்தில் இன்னொரு ரவுடி அருள்தாசை ஏவி தீர்த்துக்கட்டுகிறார் மந்திரி.

 சமுத்திரம் இடத்தில் அருள்தாசை அமர்த்தி நகரை தனது கட்டுக்குள் வைத்துக்கொள்கிறார். சமுத்திரம் குடும்பத்தினரை பாதுகாக்கும் பொறுப்பை அவரிடம் அடியாளாக வேலை செய்த விஜய் முருகன் ஏற்கிறார்.

சமுத்திரம் மகள் மஞ்சிமா மோகன் கல்லூரிக்கு செல்லும்போது சில இளைஞர்கள் கலாட்டா செய்கிறார்கள். முகத்தில் திராவகம் வீசுவதாகவும் மிரட்டுகிறார்கள். மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக தன்னிடம் ரவுடி வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவை அனுப்புகிறார் விஜய் முருகன். அப்போது மஞ்சிமாவுக்கு விக்ரம்பிரபு மீது காதல் மலர்கிறது. காதலை ஏற்க மறுக்கிறார் விக்ரம் பிரபு.

ரவுடி தொழிலை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கும் மஞ்சிமா மீது ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுக்கும் காதல் வருகிறது. மஞ்சிமா குடும்பத்தினர் காதலை பிரிக்க முயற்சிக்கின்றனர். விஜய் முருகனும் மஞ்சிமாவை விட்டு விலகும்படி விக்ரம் பிரபுவை எச்சரிக்கிறார். ஆனால் காதலில் இருவரும் உறுதியாக இருக்கின்றனர். மஞ்சிமாவை மணந்து அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படும் விக்ரம் பிரபுவை தீர்த்துக்கட்ட அருள்தாஸ் ரவுடிகளுடன் சுற்றி வளைக்கிறார். விஜய் முருகனும் தனது பேச்சை கேட்காத விக்ரம் பிரபுவை கொல்ல முடிவு செய்கிறார். அவர்களிடம் இருந்து விக்ரம் பிரபு தப்பினாரா? காதலியை கைப்பிடித்தாரா என்பது மீதி கதை...

விக்ரம் பிரபு முறைப்பும் விறைப்புமாக ரவுடி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். காதலிப்பதாக சொல்லும் மஞ்சிமாவை விட்டு விலகுவதும், மஞ்சிமா அறிவுரைப்படி ஒரு நாள் ஆயுதம் இல்லாமல் இருந்து சக ரவுடிகளை பார்த்து பயந்து ஒதுங்குவதும் அவரது கதாபாத்திரத்தை மெருகூட்டுகின்றன.

காதல் உணர்வுகளையும் யதார்த்தமாக பிரதிபலிக்கிறார். கொலை வெறியோடு தாக்கும் அருள்தாஸ் கும்பலுடன் மோதும் சண்டையில் ஆக்ரோ‌ஷம் காட்டி இருக்கிறார். மஞ்சிமா மோகன் வசீகரிக்கிறார். தாதா சமுத்திரமாக சரத் லோகிதஷ்வா சிறிது நேரம் வந்தாலும் கம்பீரம். அருள்தாஸ் இன்னொரு தாதாவாக மிரட்டி இருக்கிறார். விஜய் முருகனும் ரவுடியாக கெத்து காட்டுகிறார்.

ரவுடியை காதலிக்கும் தங்கையை நினைத்து தவிக்கும் சவுந்தரராஜா, மந்திரியாக வரும் போஸ்டர் நந்தகுமார், மருத்துவ மாணவராக வரும் கவின் கதாபாத்திரங்களும் வலுசேர்க்கின்றன. காதல் காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். தாதாக்களின் அதிரடி மோதலுக்குள் காதல் கதையை வைத்து அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம். சிவகுமார் விஜயன் கேமரா நகரம் முழுவதும் சுழன்று திருச்சிக்குள் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

Next Story