வேலையில்லா பட்டதாரி-2


வேலையில்லா பட்டதாரி-2
x
தினத்தந்தி 17 Aug 2017 4:45 AM GMT (Updated: 17 Aug 2017 4:45 AM GMT)

கதாநாயகன்-கதாநாயகி: தனுஷ்-அமலாபால் டைரக்‌ஷன்: சவுந்தர்யா ரஜினிகாந்த் கதையின் கரு: பெண் தொழில் அதிபருடன் மோதும் இளைஞர்.

தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார் தனுஷ். இவரது மனைவி அமலாபால், தந்தை சமுத்திரக்கனி, தம்பி ரிஷிகேஷ். தனுசின் திறமையான பணிக்காக சிறந்த பொறியாளருக்கான விருது கிடைக்கிறது. இதனால் போட்டி நிறுவனத்தின் முதலாளியான கஜோல் அதிக சம்பளம் தருவதாக ஆசை காட்டி தனுசை தனது கம்பெனியில் இழுத்துப்போட முயற்சிக்கிறார்.

அவரது கம்பெனியில் வேலைக்கு சேர தனுஷ் மறுத்து விடுகிறார். இதனால் தனுசை வேலையில் இருந்து ஒழித்துக்கட்ட திட்டமிட்டு அவரது கம்பெனிக்கு செல்லும் கட்டுமான ஒப்பந்தங்களையெல்லாம் மந்திரியை வைத்து தனது கம்பெனிக்கு மாற்றுகிறார் கஜோல். தனுசை வேலையில் இருந்து நீக்கும்படியும் நெருக்கடி கொடுக்கிறார். இதனால் தனுஷ் வேலையை ராஜினாமா செய்கிறார்.

வேலையில்லாத என்ஜினீயரிங் பட்டதாரிகளை சேர்த்து சொந்தமாக புதிய கம்பெனி தொடங்குகிறார். அந்த நிறுவனத்தின் பங்குகளையும் கஜோல் வாங்கி தனக்கு சொந்தமாக்கி விட்டு தனுசை நடுரோட்டில் நிறுத்துகிறார். ரவுடி கும்பலும் அவரை தாக்குகிறது. கஜோல் பகையை தீர்த்து கம்பெனியை தனுஷ் மீண்டும் கைப்பற்றினாரா? என்பது கிளைமாக்ஸ்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது. தனுஷ் கதாபாத்திரத்தில் நிறைவு. கஜோலிடம் நேருக்கு நேர் மோதும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மனைவி அமலாபாலை குடிபோதையில் மிரட்டி அலப்பறை செய்வதும் விடிந்த பிறகு நடுங்குவதும் ரசிக்க வைக்கின்றன.
சண்டை காட்சியிலும் வேகம் காட்டுகிறார். அந்த மழை வெள்ள காட்சியில் ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், மேல்சாதி, கீழ் சாதி என்று அத்தனை மனிதர்களையும் மழை வெள்ளம் ஓட விட்டதாக பேசும் நீண்ட வசனம் கைதட்ட வைக்கிறது. அமலாபால் குடும்பம் மீது அக்கறை உள்ள கோபக்கார மனைவியாக மனதில் நிற்கிறார். அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்தும் எப்போதாவது பார்த்து நலம் விசாரிப்பது சுவாரஸ்யப்படுத்துகிறது.

கஜோல் பணக்கார திமிர் பிடித்த தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக வருகிறார். தனுசை வீழ்த்த அவர் வியூகங்கள் வகுப்பது பரபரக்க வைக்கின்றன. பாசக்கார தந்தையாக வருகிறார் சமுத்திரக்கனி. விவேக் நகைச்சுவை கலகலப்பு. கதிரேசன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் ஆகியோரும் உள்ளனர்.

குடும்ப பாசம், உறவுகள் பின்னணியில் கார்பரேட் மோதல்களை விறுவிறுப்பாக காட்சிபடுத்தி உள்ளார் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த். கிளைமாக்சை இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம். ஷான்ரோல்டன் பின்னணி இசை ஒன்ற வைக்கிறது. சமீர் தாஹிர் ஒளிப்பதிவு பெரிய பலம்.

Next Story