ஹர்காரா - சினிமா விமர்சனம்


ஹர்காரா - சினிமா விமர்சனம்
x
நடிகர்: காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிகை: கயல் விஜயலட்சுமி  டைரக்ஷன்: ராம் அருண் காஸ்ட்ரோ இசை: ராம் சங்கர் ஒளிப்பதிவு : பிலிப் சுந்தர், லோகேஷ்

போடிநாயக்கனூர் அருகில் மலைகிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் காளி வெங்கட் தபால்காரராக வேலை பார்க்கிறார். போன் சிக்னல் கூட கிடைக்காத அந்த கிராமத்தில் வேலை பார்க்க காளி வெங்கட்டுக்கு விருப்பம் இல்லை.

வேறு ஊருக்கு மாறுதல் கேட்டு மேலதிகாரியை வற்புறுத்தியும் பயன் இல்லை. ஒரு நாள் மலை உச்சியில் இருக்கும் கிராமத்துக்கு தபால் கொடுக்க செல்லும் காளி வெங்கட்டுக்கு பேச்சுத் துணையாக மலைவாசி ஒருவர் செல்கிறார்.

அவர் மலைவாசிகள் தெய்வமாக வணங்கும் 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹர்காராவான (தபால்காரர்) மாதேஸ்வரன் பிளாஷ்பேக் கதையை சொல்கிறார். மாதேஸ்வரன் அந்த கிராமத்துக்கு செய்தது என்ன? எதற்காக அவரை தெய்வமாக வணங்குகின்றனர்? மாதேஸ்ரன் கதையை கேட்ட காளி வெங்கட் என்ன முடிவு எடுத்தார்? என்பது மீதி கதை.

தபால்காரர் கதாபாத்திரத்தில் வரும் காளி வெங்கட் கிராமத்தினரின் அப்பாவித்தமான இம்சைகளில் சிக்கி படும் அவஸ்தைகளையும் பெண் கிடைக்காத வேதனையையும் இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். கிளைமாக்சில் உணர்ச்சிகரமான நடிப்பை வழங்கி மனதில் நிறைகிறார்.

ஹர்காரா மாதேஸ்வரனாக வரும் ராம் அருண் காஸ்ட்ரோ வித்தியாசமான உடல்மொழி மற்றும் தோற்றத்தில் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார். தபால் கட்டுக்களுடன் மலைப்பகுதிகளில் ஓடுவது. வில்லன்களுடன் ஆவேசமாக சண்டை போடுவது. காதலில் உருகுவது. சிலம்பம் சுற்றி அசத்துவது, மக்களை காப்பாற்ற உயிரை கொடுக்க துணிவது என்று ஜீவனுள்ள நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.

மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், நிக்கோலா புஸ்ட்டேர், பாலுபோஸ், கயல் விஜயலட்சுமி ஆகியோரும் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளனர்.

ஹர்காராவை ஊர் மக்கள் வழிபடுவற்கான பிளாஷ்பேக் திரைக்கதையில் இன்னும் வலுசேர்த்து இருக்கலாம்

சுதந்திரத்திற்கு முந்தைய மலைக்கிராம மக்களின் வாழ்வியலை கச்சிதமாக படம் பிடித்து உள்ளது பிலிப் சுந்தர், லோகேஷ் ஆகியோரின் கேமரா. ராம் சங்கர் பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக்கி உள்ளது.

நாயகனாக வரும் அருண் காஸ்ட்ரோவே படத்தை இயக்கி திறமையான டைரக்டராகவும் தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்.


Next Story