சான்றிதழ்: சினிமா விமர்சனம்


சான்றிதழ்: சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 7 Aug 2023 6:38 AM GMT (Updated: 7 Aug 2023 6:42 AM GMT)
நடிகர்: ஹரிகுமார் நடிகை: ஆஷிகா  டைரக்ஷன்: ஜேவிஆர் இசை: பைஜு ஜேக்கப் ஒளிப்பதிவு : ரவிமாறன் சிவன்

மக்கள் அனைவரும் அறத்தோடும் சுய ஒழுக்கத்தோடும் வாழ்ந்தால் நாடும் வீடும் நலமாக இருக்கும் என்பதை கனவு கிராமம் மூலம் ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

ஹரிகுமார்வித்தியாசமான கிராமம். அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஜாதி மத பேதம் பார்க்காமல் ஒற்றுமையாக ஒழுக்கமாக வாழ்கிறார்கள். அந்த ஊருக்குள் அத்துமீறி யாரும் நுழையாதபடி ஊர் வாசலில் அரண் அமைத்து காவல் காக்கிறார்கள். அந்த ஊர் மக்களின் நல்ல செயலை கண்டு அரசாங்கம் சிறந்த கிராமத்துக்கான விருதை அளிக்கிறது. சிறந்த கிராமத்துக்கான விருது கிடைப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த சமூக சேவகரான ஹரிகுமார் முக்கிய பங்கு வகிக்கிறார். அதற்கு அவர் கொடுத்த விலை என்ன? ஊர் மக்களின் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது? என்பது பிளாஷ்பேக்கில் வரும் மீதி கதை.

ஊர் பெரியவர் தோற்றத்துக்கு ஹரிகுமாரின் ஆஜானுபாகுவான தோற்றம் கைக்கொடுக்கிறது. மனைவி, மகன் என்று குடும்பத்துக்காக பாசத்தைக் கொட்டி நேசிப்பது, ஊர் மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது என அறம் பேசும் கேரக்டரை ரசித்துப் நடித்திருக்கிறார். அவரது முடிவு பரிதாபம்.

அமைச்சராக வரும் ராதாரவி வசனம் பேச வேண்டிய அவசியமே இருக்காது என்பதுபோல் முகபாவனையிலேயே பேசி அசத்தியுள்ளார்.

மனோபாலா, ரவிமரியா இருவரும் படத்தை கலகலப்பாக வைத்திருக்க உதவியிருக்கிறார்கள். ரோஷன் பஷீர், அருள்தாஸ், கவுசல்யா, ஆஷிகா. காஜல் பசுபதி ஆகியோருக்கு சிறிய வேடம் என்றாலும் மனதில் நிற்கிறார்கள்.

திணிக்கப்பட்டு உள்ள படுக்கை அறை காட்சிகள் நெருடல். கதை களமான கிராமத்தை தெளிந்த நீரோடைபோல் அழகாக காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிமாறன் சிவன்.

பைஜு ஜேக்கப் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவர்ந்திழுக்கிறது.

மக்கள் அனைவரும் அறத்தோடும் சுய ஒழுக்கத்தோடும் வாழ்ந்தால் நாடும் வீடும் நலமாக இருக்கும் என்பதை கனவு கிராமம் மூலம் ஜனரஞ்சகமாக சொல்லியுள்ளார் இயக்குனர் ஜேவிஆர்.


Next Story