காற்றாடி பறக்கும்.. காளைகள் தீ மிதிக்கும்..


காற்றாடி பறக்கும்.. காளைகள் தீ மிதிக்கும்..
x
தினத்தந்தி 14 Jan 2017 5:16 AM GMT (Updated: 14 Jan 2017 5:15 AM GMT)

காற்றாடி பறக்கும்.. காளைகள் தீ மிதிக்கும்..

கர்நாடகத்தில் காவிரி படுகைகளில் வசிக்கும் மக்களுக்கும் இது அறுவடை பண்டிகை. இந்த நன்னாளில் சிறுமிகளும், இளம்பெண்களும் புத்தாடை அணிந்து தேவதைகளாக தோற்றம் அளிக்க, கைகளில் மகர சங்கராந்தி சிறப்பு உணவுப் பொருட்கள் அடங்கிய தட்டை பக்கத்து வீடு மற்றும் அன்புக்கு பாத்திரமானவர்களின் வீடுகளுக்கு எடுத்து சென்று கொடுத்து, அவர்களிடம் இருந்தும் அதே போன்ற தட்டுகளை வாங்கி வருவார்கள்.

இந்த பாரம்பரிய நிகழ்வை கன்னடத்தில் ‘எள்ளு பிரோது’ என்று அழைப்பார்கள். அவர்கள் பரிமாறிக் கொள்ளும் தட்டில் எள், வறுத்த நிலக்கடலை, நேர்த்தியாக நறுக்கப்பட்ட தேங்காய், பனை வெல்லம் ஆகியவை இருக்கும். இந்த கலவைக்கு ‘எள்ளு பெல்லா’ என்று பெயர். மேலும் வெவ்வேறு வடிவங்களுடன் கூடிய கற்கண்டு துண்டுகளுடன் தித்திக்கும் கரும்பு துண்டும் இடம்பெற்று இருக்கும். இது குறிப்பால் உணர்த்துவது என்னவென்றால், ‘எள்ளு பெல்லா திண்டு ஒள்ளே மாத்தாடி’ (எள், பனை வெல்லத்தை சாப்பிட்டு நல்லவற்றை மட்டும் பேசுங்கள்) என்னும் உன்னத கருத்தை போதிப்பதன் அடையாளமாக உள்ளது. இது அறுவடை பண்டிகை என்பதால் அந்த பகுதியில் அதிகளவில் விளையும் கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது.

கர்நாடகத்தின் சில பகுதிகளில் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு முதல் 5 ஆண்டுகள் எள்ளு பெல்லாவுடன் வாழைப்பழமும் சேர்த்து வழங்கும் வழக்கம் உள்ளது. அந்த வாழைப்பழ எண்ணிக்கை 5-ன் பெருக்குதொகையாக வரும் வகையில் பார்த்துக் கொள்கிறார்கள். இதுதவிர சில வீடுகளில் எலந்த பழமும் சேர்த்துக் கொடுக்கிறார்கள். மகர சங்கராந்தி அன்று வடகர்நாடகத்தில் காற்றாடி பறக்க விடும் பழக்கம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் குழுவாக அமர்ந்து ரங்கோலி கோலம் போடுவதும் முக்கியமான ஒன்று. இதுதவிர சங்கராந்தி அன்று மாடுகளை குளிப்பாட்டி வண்ண பொடிகளால் அலங்கரித்து ஊர்வலம் நடத்துவார்கள். மேலும் விறகு குவியலில் தீ மூட்டி, அது கொழுந்து விட்டு எரியும்போது அதன் குறுக்கே காளை களை ஓட விடுவார்கள். காளைகள் தீயை மிதித்து கடந்து செல்லும். கிராமப்புறங் களில் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ‘கிச்சு ஹாயிசுவுடு’ என்று பெயர். இதன்மூலம் தீமைகள் அகன்று நன்மைகள் விளைவதாக நம்பிக்கை.

Next Story