தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க மதுரை–நாகர்கோவில் இடையே இருவழி பாதை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்


தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க  மதுரை–நாகர்கோவில் இடையே இருவழி பாதை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jan 2017 10:45 PM GMT (Updated: 26 Jan 2017 2:35 PM GMT)

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கும் வகையில் மதுரை–நாகர்கோவில் இடையே இருவழி ரெயில் பாதை

விருதுநகர்,

இணைப்பு

தமிழகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே பட்ஜெட்டில் புதிய ரெயில்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள ரெயில்பாதை திட்டப்பணிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் வரும் நிதியாண்டிற்கு என தனியாக ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் ரெயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுன் மத்திய அரசு இணைத்துவிட்டது. இதனால் ரெயில்வே திட்டங்களுக்கும் பொது பட்ஜெட்டில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உ.பி. உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநிலங்களை தவிர பிற மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்களை வரும் பிப்ரவரி 1–ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பொதுபட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அறிவிக்கலாம் என தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றமும் தடை ஏதும் விதிக்கவில்லை.

இருவழிப்பாதை

சென்னை–மதுரை இடையே இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இருவழிரெயில்பாதை அமைத்தால்தான் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் மதுரை–நாகர்கோவில் இடையே இருவழி ரெயில்பாதை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும் என மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதி ரெயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படாததால் மதுரை–நாகர்கோவில் இடையேயான இருவழி ரெயில்பாதை திட்டப்பணி தொடங்கப்படவில்லை.

பாதிப்பு

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் மதுரை–விருதுநகர் இடையேதான் விரைவாக செல்ல முடியாமல் கூடுதல் நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மதுரை–விருதுநகர் இடையே முதல் கட்டமாக இருவழி ரெயில்பாதை முடிக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விரைவாக செல்ல வாய்ப்பு ஏற்படும்.

நிதி ஒதுக்கீடு

மேலும் மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் வழியாக தூத்துக்குடிக்கான 140 கிலோமீட்டர் தூர அகல ரெயில்பாதை திட்டப்பணி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இந்த திட்டப்பணி கிட்டத்தட்ட முடங்கிய நிலையில் உள்ளது. மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கான அகலரெயில்பாதை திட்டப்பணி முடிந்து விட்டால் துறைமுக நகரான தூத்துக்குடியில் இருந்து வடமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் அந்த வழியாக செல்லும் நிலை ஏற்படும். இதன் மூலம் மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக நெல்லை செல்லும் ரெயில்பாதையில் சரக்கு ரெயில் போக்குவரத்து குறைந்து அதிக பயணிகள் ரெயிலை இயக்க வாய்ப்பு ஏற்படும். இதனை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்ய உள்ள பொதுபட்ஜெட்டில் தென்மாவட்டங்களுக்கான இந்த ரெயில் பாதைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

புதிய ரெயில்கள்

மேலும் செங்கோட்டையில் இருந்து ராமேசுவரம் செல்வதற்கும், ராமேசுவரத்தில் இருந்து கோவை செல்வதற்கும் புதிய ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நாகூர்–கொல்லம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்திற்கு 4 முறை இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து நெல்லை வரை

செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து செங்கோட்டை வரை அந்தோதையா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். இந்த புதிய ரெயில்கள் மற்றும் ரெயில் நீட்டிப்பு பற்றி அறிவிப்புகளை பொதுப்பட்ஜெட்டில் அறிவிக்க தென் மாவட்ட எம்.பி.க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story