சாதனையாளர் பிரமாதம்... பிரணம்யா!


சாதனையாளர் பிரமாதம்... பிரணம்யா!
x
தினத்தந்தி 18 Feb 2017 4:30 PM GMT (Updated: 18 Feb 2017 6:44 AM GMT)

‘ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங்’ போட்டியில் தொடர்ந்து 9 முறை தேசிய சாம்பியனாகி பிரமாதப்படுத்தியிருக்கிறார், பிரணம்யா ராவ்.

பிரணம்யா - சமீபத்தில் தேசியப் போட்டியில் வென்றபோது...

இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரராகத் திகழும் ஒரே தமிழகப் பெண் இவர்.
பளபளப்பான ஸ்கேட்டிங் தளத்தில் அழகாக வளைந்து நெளிந்து இசைக்கேற்பச் சறுக்குவதுதான், ‘ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங்’.

அதில் தனி ராணியாகத் திகழும் பிரணம்யாவைச் சந்தித்தோம்.

ஸ்கேட்டிங் லாவகத்துடனே வழுக்கிவந்து விழுந்தன வார்த்தைகள்...
நீங்கள் ஸ்கேட்டிங்குக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
நான் ஸ்கேட்டிங்குக்கு வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் வீரராகத் திகழ்ந்த எங்கண்ணன் சித்தாந்த ராவைப் பார்த்துத்தான் நானும் ஸ்கேட்டிங்குக்கு வந்தேன். ஆனால் நான், அழகும், நளினமும் சேர்ந்த ‘ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங்’கில் ஈடுபடத் தொடங்கினேன்.

தேசிய அளவில் முதல் வெற்றியை எப்போது பெற்றீர்கள்?

முறைப்படி பயிற்சி பெறத் தொடங்கிய ஓராண்டிலேயே தேசிய அளவில் முதல் வெற்றியைப் பெற்றுவிட்டேன். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அப்போட்டியில், நான் ஜோடிப் பிரிவில் அருண் என்ற வீரருடன் இணைந்து வென்றேன்.

சர்வதேச அளவில்...?

கடந்த 2012-ம் ஆண்டு சீனாவின் ஹெபேயில் நடைபெற்ற ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றேன். அதில் அஸ்வின் ஆப்ரகாம் என்ற வீரருடன் இணைந்து ஜோடி ஸ்கேட்டிங், ஜோடி நடனத்தில் வெள்ளிப் பதக்கங் களையும், தனி நடனத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றேன்.

அதற்கு அடுத்த ஆண்டில் தைவான் தலைநகர் தைபேயில் நடந்த உலக ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றேன். அங்கே முன்னணி இடங்களைப் பெறவில்லை என்றாலும், நல்ல அனுபவமாக அமைந்தது. 2014-ல் சீனா ஹைனிங்கில் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினேன்.

வேறு குறிப்பிடத்தக்க வெளிநாட்டு வெற்றிகள்?

சீனா லிஷுய்யில் கடந்த ஆண்டு நடந்த 17-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் நிலையில் இருந்த நான் எதிர்பாராத விதமாக நான்காவது இடம் பெற்றேன்.

சமீபத்தில்...?

சமீபத்தில், நொய்டாவில் நடைபெற்ற தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் மகுடம் சூடியிருக்கிறேன். நான் தொடர்ச்சியாக வென்ற 9-வது தேசிய சாம்பியன் பட்டம் இது. எனக்கு முன் அதிக தேசிய பட்டங்களை வென்றவர், தெலுங்கானாவைச் சேர்ந்த அனு என்ற வீராங்கனைதான்.
தற்போது நிறைய சிறார், சிறுமியரை ஸ்கேட்டிங் வளையங்களில் காண முடிகிறது. ஸ்கேட்டிங் ஆர்வம் வளர்ந் திருக்கிறதா?

நான் ஸ்கேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை ஒப்பிடும்போது தற்போது பொதுவான ஸ்கேட்டிங் ஆர்வமும், இதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. ஆனால், ஒரு பொழுதுபோக்குப் போல இதில் சில காலம் ஈடுபட்டு, பின் ஒதுங்கிவிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது வருத்தம். தொடர் பயிற்சி, நீண்டநாள் பயிற்சிதான் இதில் வெற்றி தரும்.

நம் நாட்டில் பொதுவாக ஸ்கேட்டிங் சூழல் எப்படி மாறியிருக்கிறது?

பெரிதாக மாறவில்லை என்பதுதான் உண்மை. போட்டிகளில் பங்கேற்போரின் தரம் உயர்ந்திருக்கிறது என்றாலும், சர்வதேச தரத்துடன் ஒப்பிடும்போது நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம். தரமான பயிற்சியாளர்கள், சிறந்த வசதிகள் இருந்தால்தான் நம்மால் பிற நாட்டவர்களுடன் போட்டி போடுவதையே நினைத்துப் பார்க்க முடியும். இன்னும் இது, பெருநகரங்கள் சார்ந்த விளையாட்டாகத்தான் உள்ளது. ஆனால் சென்னை போன்ற மாநகரங்களிலும் பெரிதாக வசதிகள் வந்துவிடவில்லை.

வேறென்ன தடைகள் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

சர்வதேசப் போட்டிகள் அனைத்தும், உள்ளரங்கில், மரத்தளத்தில் நடைபெறுகின்றன. நாமோ திறந்தவெளியில், கோட்டா ஸ்டோன் தளத்தில் பயிற்சி பெறுகிறோம். எனவே, சர்வதேசப் போட்டிகளின்போது உடனடியாக அந்தச் சூழலுக்கு மாறி, ஸ்கேட்டிங் சக்கரங்களை எல்லாம் மாற்றி அமைத்து துரிதமாக பயிற்சி பெற வேண்டியிருக்கிறது. இங்கே நாம் திறந்தவெளிப் பயிற்சியில் ஈடுபடுவதால் காலை, மாலை தவிர பிற நேரங்களில் பயிற்சி என்பது சாத்திய மில்லாததாக இருக்கிறது.

தடைகளைத் தாண்டி சாதித்திருக்கும் நீங்கள் இதுவரை எத்தனை பதக்கங்கள் வென்றிருக் கிறீர்கள்?

அந்த வகையில் நான் சதத்தை நெருங்குகிறேன் என்று சொல்ல வேண்டும். 4 சர்வதேசப் பதக்கங்கள், 20 தேசியப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 96 பதக்கங்களை வென்றிருக்கிறேன்.

உங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் தேசிய அளவில் சாதிக்கும் வீராங்கனைகள் தோன்றியிருக் கிறார்களா?

சில நம்பிக்கையூட்டும் வீராங்கனைகள் உருவாகி வருகிறார்கள் என்ற போதும், எனக்கும், எனக்கு அடுத்து உள்ள வீராங்கனைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகம்.

‘ஆர்ட்டிஸ்டிக் ரோலர் ஸ்கேட்டிங்’கில் ஜொலிக்க என்ன தேவை?
நல்ல நளினம், நெகிழ்வுத் தன்மை, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் போன்றவை அவசியம். அடிப் படையில் நடனத் திறமை இருந்தால் நன்கு கைகொடுக்கும். நான் பரதநாட்டியம், ஜாஸ் போன்ற நடனங்களைக் கற்றிருக்கிறேன். அது எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஸ்கேட்டிங் பயிற்சி, படிப்பு என்று இரண்டையும் சமாளிக்க முடிகிறதா?

நான் தற்போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் முதலாமாண்டு பயில்கிறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுகிறேன். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பயிற்சி நேரம் கூடும். பொதுவாக, கல்வி, விளையாட்டு என்று சரியாக நேரத்தைப் பிரித்துக்கொண்டால் ஒன்றும் பிரச்சினையில்லை.

கல்லூரிப் படிப்பில் சமூகவியலைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?
விளையாட்டைப் போல நான் படிப்பிலும் வித்தியாசமான வழியில் போகிறேன் என்று நினைக்கிறேன். பொதுவாக சமூகவியலில் எனக்கு ஆர்வம் அதிகம். இந்தப் படிப்பில் வரும் சில ‘கேஸ் ஸ்டடிகள்’ மிகவும் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். விளையாட்டு தவிர படிப்பு என்று பார்த்தால், எதிர்காலத்தில் மனோதத்துவவியல் பயின்று அதுதொடர்பான பணியில் ஈடுபட ஆசை.

ஸ்கேட்டிங்கில் உங்களின் ஆசை என்ன?

நம் நாட்டைப் பொறுத்தவரை, டென்னிசில் சானியா, பேட்மிண்டனில் சாய்னா, ஜிம்னாஸ்டிக்சில் தீபா என்று தனித்தனி வீராங்கனைகள்தான் அந்தந்த விளையாட்டுகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார்கள். அதேபோல, ஸ்கேட்டிங்கை பிரபலப்படுத்த என்னாலான முயற்சி களைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ரசிகர்களின் கவனம் இந்த விளையாட்டின் மீது விழுந்தால் விறுவிறுவென்று வளர்ச்சி வரும்.

நீங்கள் பெற்ற உயர்வின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
முதலில், என்னுடைய குடும்பத்தினர். அம்மா லாவண்யா ராவ்- அப்பா சந்தோஷ்குமார் ராவ், அண்ணன் சித்தாந்த், பாட்டி ஆகியோர் எனது பிரதான பலம். மாமா, அத்தைகளும் வெளியில் இருந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எனது ஸ்கேட்டிங் பயிற்சி யாளர் ஆரோன் சல்டான்ஹா, நடனப் பயிற்சியாளர் தீபக் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் என்னை செதுக்கி வரு கிறார்கள்.

ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட விரும்பும் இளஞ்சிறார், சிறுமியருக்கு ஒரு முன்னணி வீராங்கனை என்றமுறையில் நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?
பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங்கில் உண்மையான ஆர்வம் இருந்தால் மட்டுமே இவ்விளை யாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் சாதிக்க முழுமூச்சாக ஒத்துழைக்க வேண்டும். ஸ்கேட்டிங்குக்காக ஏற்படும் செலவுகளைச் சமாளிக்கவும் தயாராயிருக்க வேண்டும்.

ஆசிய அளவில் பதக்கங்கள் வென்றிருக்கிற பிரணம்யா, அடுத்து உலக சாம்பியன்ஷிப் பதக்கத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை நாமும் வாழ்த்துவோம்!

Next Story