விண்வெளியில் ஏற்படும் மரபணு மாற்றங்கள்


விண்வெளியில் ஏற்படும் மரபணு மாற்றங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2017 5:00 PM GMT (Updated: 18 Feb 2017 7:40 AM GMT)

நம் குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. விரைவில் நம் குழந்தைகள் நிலவிலேயே விளையாடிக்கொண்டு சோறு சாப்பிடப் போகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அதிவேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதன் விளைவாக, ‘விண்வெளியில் மனிதன் வாழ முடியுமா?’ என்ற அடிப்படையான கேள்வி தொடங்கி, அங்கு வாழத்தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் உள்ளிட்ட பல தகவல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், விண்வெளிச் சுற்றுச்சூழலில் மனிதன் வாழக்கூடிய காலம் வரும்போது விண் வெளியானது மனித உடலில் எந்த வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பான ஆய்வுகள் கடந்த பல வருடங்களாக நடந்து வருகின்றன.

உதாரணமாக, இதுவரையிலான ஆய்வுகளில், விண்வெளியில் மனிதன் வாழ்வதால் அவனுடைய எலும்பு திடம் சுமார் 12 மடங்கு குறைந்து போகிறது என்றும், தசை வலிமையும் குறைந்து போவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மனித இதயத்தின் செயல்பாடுகள் மாற்றமடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை, விண்வெளியில் வாழ்வதனால் மனித மரபணுக்களில் எவ்வித மாற்றங்கள் ஏற்படும் என்று கண்டறியப்படவில்லை. நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்றில், விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் பிறப்பில் இரட்டையரான மார்க் மற்றும் ஸ்காட் கெல்லி ஆகியோரின் மரபணுக்கள் விண்வெளி வாழ்க்கையின் காரணமாக மாற்றமடைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, விண்வெளி ஆய்வாளர் இரட்டையர்களில் ஒருவரான மார்க் பூமியில் இருக்க மற்றொருவரான ஸ்காட் கெல்லி சுமார் 340 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் பூமியில் வாழ்ந்த மார்க் மற்றும் விண்வெளியில் வாழ்ந்த ஸ்காட் கெல்லி ஆகியோரின் பல உயிரியல் மாதிரிகள் பல்வேறு மரபியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும், இம்மாதிரியான மரபியல் ஆய்வுகளுக்கு இரட்டையர்கள் மிகச்சரியான தேர்வு என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், இரட்டையர்களின் மரபுக்கோப்பு (genome) 99.99 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், மார்க் மற்றும் ஸ்காட் கெல்லி இருவரும் விண்வெளி ஆய்வாளர்கள் என்பதால் அவர்களுடைய பணிச்சூழல் மற்றும் அனுபவங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

அதன் காரணமாக, இந்த மரபியல் ஆய்வின் முடிவுகள் மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும், தரமானதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவில், மார்க் மற்றும் ஸ்காட் கெல்லி இருவருக்கும் இடையில் பல முக்கியமான மரபியல் மாற்றங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உதாரணமாக, விண்வெளி வாழ்க்கையானது உயிரியல் அடையாளம் காட்டிகளான குடல் பாக்டீரியாக்கள் மற்றும் குரோமோசோம்கள் (மரபியல் தகவல்களை உள்ளடக்கிய அமைப்பு) ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. முக்கியமாக, மூப்படைதலை கட்டுப்படுத்தும் ‘டீலோமியர்’ எனும் குரோமோசோம்களின் நுனிப்பகுதியின் நீளமானது விண்வெளியில் வாழ்ந்த ஸ்காட் கெல்லியின் உடலில் அதிகரித்திருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மரபணு செயல்பாடுகளைக் குறைக்கும் திறன்கொண்ட மரபணு மாற்றமான டி.என்.ஏ. மெதிலையேசன் (DNA methylation) விண்வெளியில் வாழ்ந்த ஸ்காட் கெல்லியின் உடலில் குறைந்துள்ளது. ஆனால் பூமியில் வாழ்ந்த மார்க்கின் உடலில் அதிகரித்திருந்தது.

விண்வெளி சூழலால் ஸ்காட் கெல்லியின் உடலில் ஏற்பட்ட மரபியல் மாற்றங்கள் அனைத்தும் அவர் பூமிக்குத் திரும்பியதும் பழையபடி சகஜ நிலைக்கு திரும்பியதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

தற்போது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வரும் ஸ்காட் கெல்லி மற்றும் மார்க்கின் மாதிரிகள் மீதான மரபியல் ஆய்வுகளின் முடிவுகள் விரைவில் முழுமை அடையும்போது முக்கியமான பல தகவல்கள் தெரியவரும்.
ஆக மொத்தத்தில், செவ்வாய்க்கு போகலாமா அல்லது நிலவுக்கு போகலாமா என்று தயாராக இருக்கும் மனிதர்களுக்கு இந்த மரபியல் ஆய்வு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story