தொழில் வரி செலுத்தாத 3 நிறுவனங்கள், 5 கடைகளுக்கு ‘சீல்’


தொழில் வரி செலுத்தாத 3 நிறுவனங்கள், 5 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 18 Feb 2017 9:55 PM GMT (Updated: 18 Feb 2017 9:55 PM GMT)

மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்தாமலும், தொழில் உரிமம் இன்றி செயல்பட்டதாகவும் 3 நிறுவனங்கள் மற்றும் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பெரம்பூர்,

தண்டையார்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்தாமலும், தொழில் உரிமம் இன்றி செயல்பட்டதாகவும் 3 நிறுவனங்கள் மற்றும் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தொழில் வரி–உரிமம்

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4–வது மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிக்கும் 2 நிறுவனங்கள், அட்டைபெட்டி தயாரிக்கும் ஒரு நிறுவனம் என 3 நிறுவனங்கள் மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்தாமலும், முறையான தொழில் உரிமம் பெறாமலும் செயல்பட்டு வருவது தெரிந்தது.

இதேபோல் வியாசர்பாடி–எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள துணிக்கடை, மளிகை கடை, பாத்திரக்கடை, டீக்கடை மற்றும் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை என 5 கடைகளும் மாநகராட்சிக்கு முறையாக தொழில் வரி செலுத்தாமல், தொழில் உரிமத்தை புதுப்பிக்காமலும் நடத்தி வருவது தெரிந்தது.

மாநகராட்சியில் தொழில் வரியை செலுத்தி விட்டு உரிமத்தை புதுப்பித்தும், முறையாக தொழில் உரிமம் பெறும்படியும் மண்டல அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

‘சீல்’ வைப்பு

இதையடுத்து தண்டையார்பேட்டை 4–வது மண்டல அதிகாரி விஜயகுமார் உத்தரவின்பேரில் உதவி வருவாய் அதிகாரிகள் சூரியபானு, ரங்கநாதன் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் முன்னிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 3 நிறுவனங்கள் மற்றும் 5 கடைகளில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு, கதவை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இதேபோல் மாநகராட்சிக்கு முறையாக தொழில் வரி செலுத்தாமலும், உரிமம் இல்லாமலும் செயல்படும் நிறுவனங்கள், கடைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story