கிழக்கு கடலில் நிகழ்ந்த பேரிடர்


கிழக்கு கடலில் நிகழ்ந்த பேரிடர்
x
தினத்தந்தி 19 Feb 2017 6:03 AM GMT (Updated: 19 Feb 2017 6:02 AM GMT)

அகன்று விரிந்த கடல் பரப்பை தனது மூன்று புற எல்லைகளாக கொண்டிருக்கும் இந்தியா, அந்த நெய்தல் நிலத்தால் பெற்று வரும் பயன்கள் எண்ணிலடங்காதவை

கன்று விரிந்த கடல் பரப்பை தனது மூன்று புற எல்லைகளாக கொண்டிருக்கும் இந்தியா, அந்த நெய்தல் நிலத்தால் பெற்று வரும் பயன்கள் எண்ணிலடங்காதவை. பாரதம் கொண்டிருக்கும் வளரும் பொருளாதாரத்துக்கு கடலும், கடல் சார்ந்த பகுதிகளும் அளித்து வரும் பங்களிப்பு அளப்பெரிது.

அள்ள அள்ள குறையாமல் கொட்டிக்கொடுக்கும் அந்த கடல் அன்னையின் மடிசார்ந்து வாழும் இந்திய கடலோடிகளுக்கு அதுதான் வாழ்வாதாரம். கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே அரபிக்கடல், தெற்கே இந்தியப்பெருங்கடல் என்ற இந்த முக்கடல்களும் இந்திய காலநிலையில் ஏற்படுத்தி வரும் தாக்கம் மேலானது.

இப்படி இந்தியர்களின் அன்றாட வாழ்வியல் சூழலோடு பின்னிப்பிணைந்து இருக்கும் இந்திய கடல் பரப்பு சமீப காலமாக பெரும் அபாயத்தை சந்தித்து வருகிறது. புவி வெப்பமயமாதல் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஒருபுறம், ஆலைகள், நிறுவனங்கள் போன்ற உற்பத்திக்கூடங்களின் பெருக்கத்தால் ஏற்படும் மாசுக்கள் மறுபுறம் என கடலின் சூழியல் மாற்றம் வேகமாக மாறுபட்டு வருகிறது.

இதில் மேலும் ஒரு அபாயத்தை இந்தியாவின் கிழக்கு கடற்பகுதி சமீபத்தில் சந்தித்து இருக்கிறது. 2 கப்பல்களின் வடிவில் வந்த இந்த சோதனையை வெறும் அபாயம் என்று சொல்வதை விட பேரிடர் என்று கூறுவதே சாலச்சிறந்தது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் வீசி வரும் புயலால், கடலில் ஏற்பட்ட இந்த பேரிடரை தமிழகமும் ஏன்... ஒட்டுமொத்த பாரதமும் ஏறக்குறைய மறந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

கணநேர பாதிப்பை ஏற்படுத்தும் புயல், சூறாவளி போல் இல்லாமல், எதிர்காலத்தையும் பலமாக பாதிக்கும் அபாயம் நிறைந்த இந்த பேரிடரை அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது.

ஏனெனில் இந்திய வரைபடத்தின் அடிப்படையே இந்த கடல் பிராந்தியத்தை மையப்படுத்தி அமைந்து உள்ளது. அதுவும் கிழக்கு கடற்கரை எப்போதும் தனிச்சிறப்பு வாய்ந்தது.

மேற்கு வங்காளம் முதல் தமிழகத்தின் தென்கோடி வரை நீண்டு கிடக்கும் இந்த வங்காள விரிகுடா கடற்கரை, கண்களை கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தது. உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினாவை பெற்றிருப்பதுடன், பல இயற்கை மற்றும் செயற்கை துறைமுகங்களையும் பெற்று இந்திய பொருளாதாரத்துக்கும் வலு சேர்க்கிறது.

அப்படிப்பட்ட துறைமுகங்களில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் முக்கியமானது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, இரும்புத்தாது போன்றவற்றை ஏற்றிவரும் கப்பல்களை கையாளுவதில் சிறப்பு பெற்ற இந்த துறைமுகத்துக்கு அருகில் தான் கடந்த மாதம் 28–ந் தேதி அந்த பயங்கரம் நிகழ்ந்தேறியது.

கத்தாரில் இருந்து திரவ பெட்ரோலிய வாயு ஏற்றி வந்த ‘மாபிள்’ சரக்கு கப்பல், எரிவாயுவை இறக்கி விட்டு அதிகாலை 3.30 மணிக்கு எண்ணூர் துறைமுகத்தை விட்டு வெளியேறியது. விசாகப்பட்டினத்தை நோக்கி திரும்பிய அந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த வினோத் சகாதேவன் என்பவர் கேப்டனாக பணியாற்றினார்.

அப்போது சுமார் 33 ஆயிரம் டன் பெட்ரோலிய கச்சா எண்ணெயை (கப்பல் என்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும் பயங்கரமான பெட்ரோலிய நச்சுப்பொருள்) ஏற்றிக்கொண்டு எண்ணூர் துறைமுகம் நோக்கி ‘எம்.டி. டான் காஞ்சீபுரம்’ என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டு இருந்தது.

அதிகாலை 3.45 மணியளவில் துறைமுகத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இரு கப்பல்களும் வந்தபோது திசைமாறியதுடன் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. காஞ்சீபுரம் கப்பலின் பக்கவாட்டில் மாபிள் கப்பல் பலமாக மோதியது.

உடனே காயத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு பாய்வது போல காஞ்சீபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் வேகமாக கொட்டியது. டன் கணக்கில் கொட்டிய அந்த எண்ணெய் படலம் அலையின் வேகத்தால் கரையை நோக்கி திரும்பியது.

இதனால் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பல கி.மீ. தூரத்துக்கு கிழக்கு கடற்பகுதி மாசுபட்டுப்போனது. புகழ்பெற்ற மெரினா கடற்கரையும் இந்த எண்ணெய் மாசுக்கு தப்பவில்லை.

நண்டு, ஆமை, கடற்பஞ்சு, சிப்பிகள் என கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. கடலில் இருந்து ஆக்சிஜனை உருவாக்கி நிலத்துக்கு அனுப்பும் கடல் தாவரங்களும், பாசிகளும் உருக்குலைந்து கரை ஒதுங்கின.

மீன்பிடித்தலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் கரையோர மீனவர்கள், தொழிலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். இன்னும் எத்தனையோ பாதிப்புகள் இந்த எண்ணெய் கசிவால் கிழக்கு கடற்பகுதியில் சூழ்ந்து இருக்கிறது.

ஆனால் டன் கணக்கில் கடலில் கலந்த கச்சா எண்ணெயை அள்ள வெறும் வாளிகளை மட்டுமே கொடுத்து வேடிக்கை பார்த்தனர் அரசும், அதிகாரிகளும். ஏராளமான இளைஞர்கள் உள்பட சுமார் ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் வெறும் கையினால் வாளிகளை கொண்டு அள்ளினர்.

அவர்கள் கரையோரம் ஒதுங்கிய எண்ணெய் படலத்தை சுமார் 15 நாட்களாக இரவு பகலாக பாடுபட்டு அள்ளிவிட்டனர். ஆனால் காற்றின் திசைவேகத்தால் நடுக்கடலில் ஒதுங்கிய கச்சா எண்ணெய் படலம் தற்போது கரையை நோக்கி அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறது. எனவே இந்த பேரிடரின் தாக்கம் இப்போதைக்கு தணிவதாக தெரியவில்லை.

கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெய் முதலில் வெறும் 20 டன் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 70 டன் அளவுக்கு இருக்கும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. 100 டன்னுக்கு மேல் இருக்கும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேரிடருக்கு யார் காரணம்? மிகப்பெரிய இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு காரணமான மனித தவறுகள் குறித்து வல்லுனர்கள் பல வி‌ஷயங்களை பட்டியலிட்டு உள்ளனர். அதாவது எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாபிள் கப்பல் கிளம்பிய போதே பிரச்சினை தொடங்குகிறது.

பொதுவாக துறைமுகங்களில் இருந்து மிகப்பெரிய கப்பல்கள் வெளியேறும் போது, அவற்றை அதற்கான பாதையில் சேர்ப்பதற்காக அனுபவமிக்க மாலுமிகள், சரியான வழிகாட்டுதல்கள் போன்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஆனால் மாபிள் கப்பலை அதன் மாலுமியான வி.கருணாநிதியே துறைமுகத்தில் இருந்து எடுத்து சென்றார்.

பின்னர் சற்று தொலைவில் காஞ்சீபுரம் கப்பல் வருவதை அறிந்ததும், இரு கப்பலும் மோதும் அபாயம் இருப்பதாக மாபிள் கப்பலுக்கு துறைமுகத்தில் இருந்து எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் அந்த எச்சரிக்கை மாபிள் கப்பலுக்கு போய் சேர்ந்ததா? என்பது தெரியவில்லை.

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப்பின் கடலோர பகுதி கண்காணிப்பை பலப்படுத்த, ‘தேசிய தானியங்கி அடையாள அமைப்பை’ (என்.ஏ.ஐ.எஸ்.) மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதன்மூலம் கடலில் மர்ம படகுகளின் நடமாட்டம், கப்பல்களின் திடீர் திசைமாற்றம் போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க நவீன ரேடார், ரேடியோ கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கடலோர காவல்படையிடம் எப்போதும் இந்த என்.ஏ.ஐ.எஸ். கருவிகள் இருக்கும். இந்த அமைப்புக்காக சென்னையில் ஒரு சிறப்பு மையம் கூட நிறுவப்பட்டு உள்ளது. எனவே இத்தகைய சம்பவங்கள் குறித்து யாரும் முன்னெச்சரிக்கை விடுக்க தேவையில்லை. என்.ஏ.ஐ.எஸ். போன்ற நவீன கருவிகளே ஆபத்தை உணர்த்தி விடும். ஆனால் இதை யாரும் உணர்ந்தனரா? என்று தெரியாது.

இப்படிப்பட்ட விபத்து மற்றும் இந்த அளவிலான எண்ணெய் கசிவு போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறைமுகமே கையாள வேண்டும். ஆனால் எண்ணூர் துறைமுக நிர்வாகத்தால் இந்த விபத்தை கையாள முடியவில்லை.

எனவே அவர்கள் கடலோர காவல்படையின் உதவியை நாடியுள்ளனர். எனினும் விபத்து குறித்து 6.15 மணிக்குத்தான் கடலோர காவல் படைக்கு துறைமுக அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி 7 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் அடுத்தகட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.

மிக குறைந்த நேரத்தில் இந்த  நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாக மேலோட்டமாக நமக்கு தோன்றினாலும், நடைமுறை அம்சங்களில் இது மிகப்பெரிய தாமதம் என்றே வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இதுபோன்ற எண்ணெய் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானால் ½ மணி நேரத்துக்குள் சம்பவ இடத்துக்கு குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி.

ஆனால் இந்த விபத்து மற்றும் எண்ணெய் கசிவை மறைப்பதற்குத்தான் துறைமுக அதிகாரிகள் முயன்றதுடன், மீட்பு நடவடிக்கைகளிலும் பெரும் மந்தமாகவே செயல்பட்டு உள்ளனர்.

கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் காற்றின் வேகம் மற்றும் அலையின் தாக்கத்தால் வேகமாக பரவியது. மணல் உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து ஒட்டும் தன்மை கொண்ட சேறாக மாறி விட்டது.

இத்தகைய சூழலில் எண்ணெய் படலம் மேலும் பரவாமல் இருக்க எண்ணெய் கசியும் காஞ்சீபுரம் கப்பலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமாக துறைமுகத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் விபத்துக்குள்ளான கப்பல் மூழ்கிப்போனால் ஒட்டுமொத்த துறைமுகத்தின் இயக்கமும் தடைபட்டு விடும் என அஞ்சிய நிர்வாகம் அதை செய்யாமல் விட்டது.

கடலில் கலக்கும் எண்ணெய் படலத்தை அள்ளுவதற்காக சுமார் ரூ.3 கோடி மதிப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் எண்ணூர் துறைமுகத்துக்கு நவீன கருவி ஒன்று வாங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பேரிடரின் போது இந்த கருவியை பயன்படுத்தாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இப்படி மந்தமாக செயல்பட்ட எண்ணூர் துறைமுக நிர்வாகம், மிக ஆபத்தான பொருட்களை ஏற்றி வந்த 2 கப்பல்கள் துறைமுகத்துக்கு மிக அருகிலேயே மோதிக்கொண்ட சம்பவம் குறித்து இன்னும் சரியான விளக்கமே அளிக்கவில்லை. அந்த கப்பல்கள் மீது கூட 6 நாட்களுக்கு பின்னரே புகாரும் செய்யப்பட்டது.

இத்தகைய எண்ணெய் படலத்தை அகற்ற கடலில் பாத்தி கட்டுதல் போன்ற பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்களை உலக நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் இங்கு வெறும் பிளாஸ்டிக் வாளிகள் தான் அரசால் வழங்கப்பட்டது. இது ஒருவகையில் சிறந்ததுதான் என்றும் வல்லுனர்கள் கூறினாலும், எந்திர வாளிகளை பயன்படுத்தாதது ஏன்? என்றும் அவர்கள் வினவுகின்றனர்.

இந்த பணிகளில் பேரிடர் மேலாண்மை குழு போன்ற பயிற்சி பெற்ற வீரர்களை ஈடுபடுத்தாமல், தன்னார்வலர்கள் என்ற போர்வையில் இளைஞர்களை பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் எவ்வித ஆபத்தையும் எதிர்கொள்ள பயிற்சி பெற்ற பேரிடர் மேலாண்மைக்குழுவுக்கு எந்த வகையிலும் இளைஞர்கள் ஈடாகமாட்டார்கள்.

பெரும் ஆபத்தை விளைவிக்கும் இந்த எண்ணெய் படலத்தை பற்றி எதுவும் தெரியாத, பயிற்சியற்ற இளைஞர்களை பாதுகாப்பற்ற முறையில் இந்த பணியில் ஈடுபடுத்தியது மிகவும் மோசமான செயல் ஆகும். (இவர்களை தன்னார்வலர்கள் என்று அரசு கூறினாலும், இதில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் அரசால் 500 ரூபாய் கூலிக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள் என்பது வேறு வி‌ஷயம்).

கடலில் இருந்து எண்ணெய் படலத்தை அகற்ற ஓ.எஸ்.டி. எனப்படும் ரசாயன முறையை கடலோர காவல்படையினர் கையாண்டனர். சம்பவம் நடந்த 5 நாட்களுக்குப்பின் மேற்கொண்ட இந்த முறையால் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் விளையவில்லை. எண்ணெய் படலத்தின் அடர்த்தியும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை ஏவும் அளவுக்கு தொழில்நுட்பம் பெற்று இருக்கும் இந்தியாவில், இதுபோன்ற பேரிடரை எதிர்கொள்ள சிறந்த வசதிகள் இன்னும் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.

2 வாரங்களுக்கு மேலாக நடந்த எண்ணெய் அள்ளும் பணிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் உண்மையான பாதிப்புகள் இனிமேல் தான் தொடங்கும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏனெனில் அதிக ஆழம் இல்லாத இந்த கடற்கரை பகுதி டால்பின், திமிங்கலம் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்கிறது. ‘ஆலிவ் ரிட்லே’ எனப்படும் பெரிய ஆமைகள் இந்த பகுதியில் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. தற்போது பரவியிருக்கும் எண்ணெய் படலம் இந்த உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வங்காளம், ஒடிசா, ஆந்திரம், சென்னை, இலங்கை வழியாக இந்தியப் பெருங்கடலுக்கு நகரும் காலகட்டம் இது. தற்போதைய கச்சா எண்ணெய் கலப்பால் தெற்கே வரும் மீன்களும் கிழக்குக் கடலுக்கு வர வாய்ப்பு இல்லை என்கிற நிலைதான் ஏற்பட்டு உள்ளது.

கிழக்கு கடற்பகுதியில் தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த பேரிடர் முற்றிலும் சீரடைய குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதுவும் நிலையான பருவமழை இருந்தால் மட்டுமே சாத்தியம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பழவேற்காடு முதல் மெரினா வரை இருக்கும் நூற்றுக்கணக்கான ரசாயன ஆலைகளின் கழிவுகள் கடலில் கலக்கிறது. எண்ணூர் முகத்துவாரத்தில் அனல் மின் நிலைய சாம்பல் கலப்பதுடன், நெகமம், மீஞ்சூரில் கடல் நீரை சுத்திகரிப்பதால் பாலி அசரிலிக் அமிலம், சோடியம் சல்பைடு ஆகியவையும் டன் கணக்கில் கடலில் கொட்டப்படுகிறது.

கல்பாக்கத்தின் அணுமின் நிலைய கழிவுகள், சென்னை நகரின் மொத்த கழிவுகளும் கிழக்குக்கடலில் சென்று சேர்வதால் மீன்வளம் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. இந்த சிக்கல்களுடன் தற்போதைய எண்ணெய் கழிவும் சேர்ந்து கிழக்கு கடற்பகுதியை ராட்சத கழிவுநீர் தேக்கமாகவே மாற்றிவிட்டது.

ஆனால் இதுபற்றி துளியும் கவலைப்படாமல் இந்த பேரிடரையும், மற்றுமொரு விபத்தாக மட்டும் எண்ணிக்கொண்டு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அமைதியாக கடந்து செல்வது ஜீரணிக்க முடியாத சோகம் என்றால் மிகையல்ல.


Next Story