சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு ‘எந்த ஊருக்கு என்னை அழைத்தாலும் நான் செல்வேன்’ வைகோ பேச்சு


சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு ‘எந்த ஊருக்கு என்னை அழைத்தாலும் நான் செல்வேன்’ வைகோ பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2017 8:30 PM GMT (Updated: 22 Feb 2017 2:42 PM GMT)

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு ‘எந்த ஊருக்கு என்னை அழைத்தாலும் நான் செல்வேன்‘ என்று வைகோ கூறினார்.

திருவேங்கடம்,

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு ‘எந்த ஊருக்கு என்னை அழைத்தாலும் நான் செல்வேன்‘ என்று வைகோ கூறினார்.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

தமிழகத்தின் நீர்ஆதாரங்களை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்து அவரே வாதாடினார். இதனால் தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என 13 மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த 4–ந் தேதி வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள சின்னஞ்செட்டி ஊரணி பகுதி, 11–ந் தேதி கலிங்கப்பட்டி பஞ்சாயத்து வீரணாபுரம், நிச்சேப நதிக்கரை ஆகிய பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை வைகோ அரிவாளால் வெட்டி தொடங்கி வைத்தார். அவருடன் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் குருவிகுளம் அருகே வாகைகுளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நேற்று நடந்தது. இதனை வைகோ தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

எந்த ஊருக்கு அழைத்தாலும் செல்வேன்

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு எந்த ஊருக்கு என்னை அழைத்தாலும் நான் செல்வேன். இதில் சாதி, மதம், கட்சி கிடையாது. தமிழ்நாடு முழுவதும் 6 மாத காலத்துக்குள் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி விவசாயிகளையும், நிலத்தடி நீரையும் காப்பாற்ற உதவ வேண்டும் என பொதுமக்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

வருங்கால சந்ததியினர் அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முடிவை மாற்றி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வாகைக்குளம் ஊராட்சி செயலாளர் செல்வகுமார், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட பிரதிநிதி மகாகிருஷ்ணன், இளைஞர் அணி ரமேஷ் மற்றும் குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஊர் பொதுமக்கள் இந்த பணியில் கலந்து கொண்டனர்.


Next Story