கிருஷ்ணகிரி அருகே அரசு பஸ்சின் மீது லாரி உரசி விபத்து 5 பயணிகள் காயம்


கிருஷ்ணகிரி அருகே அரசு பஸ்சின் மீது லாரி உரசி விபத்து 5 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2017 11:00 PM GMT (Updated: 23 Feb 2017 7:01 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே அரசு பஸ்சின் மீது லாரி உரசிய விபத்தில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி,

விபத்து

ஓசூரில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. பஸ்சை வேலம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 43) என்பவர் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருந்தார். பஸ்சில் 48 பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் நேற்று மாலை கிருஷ்ணகிரி அருகே திப்பனப்பள்ளி கூட்டுரோடு பக்கமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி பின்னால் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று லாரியின் முன்புற டயர் வெடித்தது.

5 பயணிகள் காயம்

இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை உரசியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினார்கள். உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையின் வலதுபுறமாக சிறிது தூரம் ஓட்டி நிறுத்தினார்.

இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறமாக அமர்ந்து பயணம் செய்த 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் விபத்துக்குள்ளான லாரி மற்றும் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

போலீசார் விசாரணை

லாரியின் முன்புற டயர் வெடித்ததின் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திப்பனப்பள்ளி கூட்டு ரோடு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story