மும்பை மாநகராட்சி தேர்தல் பா.ஜனதா எழுச்சி; சிவசேனா மிரட்சி


மும்பை மாநகராட்சி தேர்தல் பா.ஜனதா எழுச்சி; சிவசேனா மிரட்சி
x
தினத்தந்தி 23 Feb 2017 9:28 PM GMT (Updated: 23 Feb 2017 9:27 PM GMT)

மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா ‘திடீர்’ எழுச்சி பெற்று இருப்பது, சிவசேனா கட்சிக்கு மிரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா ‘திடீர்’ எழுச்சி பெற்று இருப்பது, சிவசேனா கட்சிக்கு மிரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

பணக்கார மாநகராட்சி

நாட்டிலேயே மிகவும் பழமையானது மும்பை மாநகராட்சி ஆகும். இது ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியாக கருதப்படுகிறது. இங்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.37 ஆயிரத்து 52 கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டது.

இந்த தொகை இந்தியாவில் பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகமாகும். எனவே மும்பை மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவு எல்லா கட்சிகளுக்கும் இருந்து வருகிறது.

சிவசேனா-பா.ஜனதா, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது கூட்டணியை முறித்து கொண்டதில் இருந்தே அக்கட்சிகள் மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் மும்முரம் காட்டின. பெரிய கட்சிகள் தனித்து போட்டியிட்டதால் தேர்தல் களத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது.

பண மழை கொட்டும் மும்பை மாநகராட்சியை கைப்பற்ற போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் எகிறியது.

திடீர் எழுச்சி

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23 மையங்களில் நேற்று நடந்தது. இதில், ஆரம்பம் முதலே சிவசேனாவின் கையே ஓங்கி இருந்தது. குறிப்பாக பரேல், லாக்பாக் போன்ற மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிவசேனாவின் வெற்றி, வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் பா.ஜனதா கட்சி சிவசேனாவிற்கு கடும் சவால் விடுத்தது. நேரம் போக போக சிவசேனாவை பா.ஜனதா நெருங்கி விட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், சிவசேனா 84 வார்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது. பா.ஜனதா 82 வார்டுகளில் வெற்றி பெற்று ‘திடீர்’ எழுச்சி கண்டது. இது சிவசேனாவுக்கு மிரட்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 31 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கூட்டணி

இந்த தேர்தல் முடிவுகளின்படி, சிவசேனா தொடர்ச்சியாக 5-வது தடவையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று, மும்பை தனது கோட்டை என்று மார்தட்டிக் கொள்கிறது. அதாவது 1996-ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக சிவசேனா மேயர்களே மும்பை மாநகராட்சியில் பதவி வகித்து வருகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலிலும், சமீப காலங்களில் நடந்து முடிந்த பல்வேறு உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதேப்போல மும்பை மாநகராட்சியையும் தனித்து கைப்பற்றிவிடலாம் என கணக்கு போட்டது. ஆனால் பா.ஜனதாவால் மும்பையில் சிவசேனாவை வீழ்த்த முடியவில்லை என்றாலும், அக்கட்சிக்கு சவால் விடுத்து விட்டது.

சிவசேனா, பா.ஜனதா இடையே தேர்தலின் போது முறிந்த கூட்டணி, மாநகராட்சியை கைப்பற்றுவதற்காக மீண்டும் மலரும் என்று கருதப்படுகிறது.

Next Story