நெல்லை அருகே போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது கும்பல் வெறிச்செயல்


நெல்லை அருகே  போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற போது கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 Feb 2017 9:30 PM GMT (Updated: 24 Feb 2017 2:27 PM GMT)

நெல்லை அருகே போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதியை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது.

நெல்லை,

நெல்லை அருகே போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதியை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.

பட்டப்பகலில், சினிமா காட்சி போல் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

பசுபதி பாண்டியனின் கூட்டாளி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன்(வயது 47). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்த பசுபதி பாண்டியனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வழக்குகளும், நெல்லை அருகே சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் மதன் உள்பட 3 பேர் கொலை வழக்கும் உள்ளன.

கடந்த ஆண்டு 9.1.2016 அன்று வெடிபொருளான ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்ததாக சிங்காரம் மீது முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்தனர். இதனைதொடர்ந்து இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்த...

ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தது தொடர்பான வழக்கு தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சிங்காரத்தை ஆஜர்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வீரபாகு, போலீசார் பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ஆகியோர் நேற்று அதிகாலை போலீஸ் ஜீப்பில் புறப்பட்டனர். அந்த ஜீப்பை போலீஸ்காரர் அசோகன் ஓட்டினார்.

திடீர் தாக்குதல்

பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று சிங்காரத்தை அழைத்துக் கொண்டு தூத்துக்குடி நோக்கி போலீசார் புறப்பட்டனர். பாளையங்கோட்டையை கடந்து கே.டி.சி. நகர் பஸ் நிறுத்தத்தை தாண்டி ஜீப் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளால் ஜீப் மெதுவாக இயக்கப்பட்டது.

அப்போது மீன் ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்று போலீஸ் ஜீப்பின் குறுக்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மேலும் 3 கார்கள் அங்கு சர்...சர்ரென்று வந்து நின்றன. அதில் இருந்து 10–க்கும் மேற்பட்டவர்கள் இறங்கி கையில் அரிவாளுடன் போலீஸ் ஜீப்பை நோக்கி வேகமாக வந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் தங்களது கையில் உள்ள பாட்டிலில் தயார் நிலையில் கரைத்து வைக்கப்பட்டிருந்த மிளகாய் பொடி கரைசலை போலீஸ் ஜீப் நோக்கி ஊற்றினார்கள். இதனால் சிங்காரத்தின் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் நிலை குலைந்தனர்.

வெட்டிக்கொலை

இதையடுத்து ஜீப்பின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிங்காரத்தை ஜீப்பில் இருந்து வெளியே இழுத்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் இதை தடுக்க முயற்சி செய்ததுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வெளியே நின்றிருந்த கும்பலை தாக்கினார். ஆனால் அந்த கும்பல் போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து கீழை தரையில் போட்டு அடித்து உடைத்தனர்.

பின்னர் போலீசாரை தாக்கி விட்டு சிங்காரத்தை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தனர். சினிமா காட்சி போல் ஒருசில நிமிடங்களில் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி விட்டு, அந்த கும்பல் தாங்கள் வந்த கார்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கடைகள் அடைப்பு

இதை தொடர்ந்து போலீசார் நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குற்றுயிரும், குலைஉயிருமாக கிடந்த சிங்காரத்தை மீட்டு உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மர்ம கும்பல் நடத்திய இந்த கொலைவெறி சம்பவத்தில் போலீஸ் ஜீப்பின் கண்ணாடிகள் உடைந்து ரோடு முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்தன. இந்த சம்பவத்தையொட்டி அருகில் உள்ள ஒருசில கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.

ஆஸ்பத்திரியில் சாவு

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிங்காரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த 4 போலீசாரும் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் சிங்காரம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

ஆயுதங்கள் பறிமுதல்

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம், துணை கமி‌ஷனர் பிரதீப்குமார், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் ஆகியோரும் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கொலை நடந்த இடத்தில், கொலையாளிகள் விட்டுச்சென்ற அரிவாள் மற்றும் மிளகாய் பொடி கரைசல் தயாரித்து வைத்திருந்த 1 பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதுதவிர அருகில் உள்ள ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம், கார்கள் பதிவாகி உள்ளதா? என்று போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தனிப்படைகள் அமைப்பு

இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து உள்ளார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் சிங்காரத்தின் முந்தைய கொலை வழக்குகளை தூசு தட்டி அதன் மூலம் சிங்காரத்தின் எதிரிகள் பட்டியலை தயாரித்தனர். இதைக்கொண்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலைக்கான காரணம் என்ன?

கொலை செய்யப்பட்ட சிங்காரத்துக்கும், வெங்கடேஷ் பண்ணையாரின் குடும்பத்துக்கும் இடையே முன்பு விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து பசுபதி பாண்டியனிடம், சிங்காரம் கூறியுள்ளார். இதையொட்டி பசுபதி பாண்டியன் இந்த பிரச்சினையில் தலையிட்டார். இதன் பிறகு பண்ணையார் தரப்புக்கும், பசுபதி பாண்டியன் தரப்புக்கும் இடையே மோதல்கள், அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றன. இதுதவிர சுபாஷ் பண்ணையாரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் சிங்காரம் மீது வழக்கு உள்ளது. எனவே சுபாஷ் பண்ணையார் தரப்பினர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதவிர பிரபல ரவுடி மதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அய்யப்பன், மற்றொரு அய்யப்பன் ஆகிய 3 பேரும் கடந்த 2009–ம் ஆண்டு நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பழிக்கு, பழியாக சிங்காரம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

போலீசார் உடந்தையுடன் நடந்த கொலை உறவினர்கள் குற்றச்சாட்டு

கொலை செய்யப்பட்ட சிங்காரத்துக்கு பார்வதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். சிங்காரம் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் பார்வதி மற்றும் உறவினர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் சிங்காரத்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சிங்காரம் கொலையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் செல்லப்பா கூறியதாவது:–

சிங்காரம் கடந்த ஆண்டு முறப்பநாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது சிங்காரத்தின் காலை போலீசார் முறித்து விட்டனர். இதுதவிர கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிங்காரத்தை போலீசார் அழைத்து வந்தனர். திருச்செந்தூர் கோர்ட்டு வளாகத்தில் அவர் மீது மிளகாய் பொடி தூவி கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் போலீசார் அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்யவில்லை.

அதே நபர்கள்தான் தற்போது திட்டமிட்டு மிளகாய் பொடி கரைசலை ஊற்றி சிங்காரத்தை கொலை செய்து விட்டனர். இதற்கு போலீசாரின் அஜாக்கிரதையே காரணம் ஆகும். எனவே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிங்காரம் மீது பல்வேறு வழக்குகள் –

சிங்காரம் மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 10–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2009–ம் ஆண்டு முதல் அவர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து வருகிறார். ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது குற்றவாளிகள் பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2009–ம் ஆண்டு அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த சிங்காரம் வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8.1.2016 அன்று முறப்பநாடு பகுதியில் சிங்காரம் தகராறில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ்காரர் ஜான் பாண்டியன் என்பவர் அங்கு சென்று சிங்காரத்தை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது சிங்காரம், ஜான் பாண்டியனை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து முறப்பநாடு போலீசார் மறுநாள் 9–ந் தேதி முறப்பநாடு பகுதியில் பதுங்கி இருந்த சிங்காரத்தை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் வெடி பொருட்களை வைத்திருந்ததாக போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில், சிங்காரத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று மாவட்ட 2–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் சென்று வந்தனர். நேற்று 2–வது நாளாக வெடி பொருள் வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் பாளையங்கோட்டைக்கு வந்து அழைத்துச் சென்றபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் போலீஸ் அதிகாரிகள் பேட்டி

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் கூறுகையில், ‘‘ கொலை செய்யப்பட்ட சிங்காரத்தை வெடிபொருள் வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றபோது, ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சிங்காரத்தை கொலை செய்து விட்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.


Next Story