மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன் அழகான ஆண் குழந்தை பிறந்தது


மனைவிக்கு பிரசவம் பார்த்த பார்வையற்ற கணவன் அழகான ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 24 Feb 2017 11:45 PM GMT (Updated: 24 Feb 2017 10:05 PM GMT)

மணப்பாறையில் சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவன் பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மணப்பாறை,

பார்வையற்றவர்

சிவகங்கை பாலமுனி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். பார்வையற்றவர். இவரது மனைவி பரிதா (வயது 30) இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தர்மம் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரிதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். உடன் அவரது கணவர் அப்பாஸ் சென்றார். ஆனால் பரிதாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லும்படி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தங்களிடம் பணம் இல்லாததால், மணப்பாறையிலே பிரசவம் பார்க்க கூறினர். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிட்டதால் பின்னர் அவர்கள் மணப்பாறை ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் ஒரு ஆஞ்சநேயர் கோவிலின் அருகே சென்று நேற்று காலை தங்கி விட்டனர்.

ஆண் குழந்தை பிறந்தது

அங்கு சென்ற சிறிது நேரத்தில் பிரசவ வலி அதிகரிக்கவே மண் தரையில் படுத்து பரிதா துடித்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வேனிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் லோகேஷ், அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் ஆகியோர் ஆம்புலன்சுடன் விரைந்தனர். இருப்பினும் பரிதா பிரசவ வலியால் அலறினார். கணவர் அப்பாஸ் தனது மனைவியை ஆசுவாசப்படுத்தினார். குழந்தை பிறந்து கொண்டிருப்பதை பார்வையற்ற தனது கணவன் அப்பாசிடம் பரிதா தெரிவித்தார்.

அவர் செய்வதறியாமல் குழந்தை பிறந்து வெளியே வரும் போது கையில் தாங்கி பிடித்துக்கொண்டார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சாலையோரத்தில் மனைவிக்கு பார்வையற்ற கணவர் பிரசவம் பார்த்ததை கண்ட அப்பகுதியினரின் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்களது நிலையை கண்டு உருகினர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் வேன் வந்து சேர்ந்தது. அவசர கால மருத்துவ நிபுணர் பாஸ்கரன் சிகிச்சை அளித்து குழந்தையை முழுவதுமாக வெளியில் எடுத்தார். இதைத்தொடர்ந்து தாயும், சேயும் பத்திரமாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தாலும், கர்ப்பிணி பெண்களை மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதில் தான் நேற்று பரிதா சாலையோரம் பிள்ளை பெற்றெடுக்க தள்ளப்பட்டார். உரிய சிகிச்சை வசதி இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எந்த பெண்ணுக்கும் இனி இது போன்ற நிலை வரக்கூடாது. அதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சையை மணப்பாறை அரசு மருத்துவமனையில் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story