சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பரிந்துரை கோட்ட மேலாளர் தகவல்


சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பரிந்துரை கோட்ட மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 6 March 2017 11:00 PM GMT (Updated: 6 March 2017 4:27 PM GMT)

சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை,

சிலம்பு எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு முதன் முறையாக வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரெயில் பயணிப்போர் நலச் சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை ரெயில் நிலைய அலுவலர் சிவகுருநாதன் வரவேற்றார். கூடுதல் கோட்ட மேலாளர் முரளிகிருஷ்ணா, வர்த்தக பிரிவு மேலாளர் ரதிப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார்கார்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது;–

கூடுதல் பெட்டிகள்

சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வாரம் இரு முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும் என்றும், மேலும் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

வரும் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து தினமும் ரெயிலை இயக்குவதற்கான நடவடிக்கையிலும், மேலும் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கவும் பரிந்துரை செய்யப்படும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக சென்னைக்கு இயக்க பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதுரை–அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்ட பணி துரிதப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ரெயில் பயணிப்போர் நலச் சங்க செயலாளர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story