தினமும் காலிபெட்டிகளுடன் வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்


தினமும் காலிபெட்டிகளுடன் வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்
x
தினத்தந்தி 13 March 2017 10:45 PM GMT (Updated: 13 March 2017 9:48 PM GMT)

திருச்சி–தஞ்சாவூர் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சி

தினமும் காலி பெட்டிகளுடன் திருச்சி வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை, பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி–தஞ்சாவூர் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்

தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு தினமும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பராமரிப்பு பணி, தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி, திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலைய யார்டிற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூரில் இருந்து உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து திருச்சிக்கு தினமும் காலை 8 மணி அளவில் காலி பெட்டிகளுடன் வந்தடைகிறது. யார்டில் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்தல், இருக்கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்பின்னர் இரவு 7 மணி அளவில் தஞ்சாவூருக்கு காலி பெட்டிகளுடன் புறப்பட்டு செல்கிறது.

டீசல் செலவு வீண்

பராமரிப்பு பணிக்காக திருச்சி வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணி தொடர்ந்து திருச்சி ஜங்‌ஷன் யார்டில் தான் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர். எனவே காலி பெட்டிகளாக செல்வதை தவிர்க்கும் வகையில் திருச்சி– தஞ்சாவூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து ரெயில்வே துறை மீது ஆர்வம் கொண்ட சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

திருச்சி– தஞ்சாவூர் இடையே ரெயில்வே தண்டவாள பாதை மொத்தம் 56 கிலோ மீட்டர் தூரமாகும். ஒரு கிலோ மீட்டர் தூரம் ரெயிலை இயக்க 5 லிட்டர் டீசல் செலவாகும். அப்படி இருக்கையில் பராமரிப்பு பணிக்காக தினமும் திருச்சி– தஞ்சாவூர் இடையே காலி பெட்டிகளுடன் வந்து செல்வதால் டீசல் செலவு வீணாகி ரெயில்வே துறைக்கு பெரும் நஷ்டம் ஆகும்.

திருச்சி–தஞ்சாவூர் இடையே...

பராமரிப்பு பணிக்காக வந்து செல்லும்போது ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது என ரெயில்வே விதிமுறை உள்ளது. இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் ரெயில் சேவை கூடுதலாக தேவைப்படும் போது காலி பெட்டிகளுடன் வந்து செல்வதை ரெயில்வே துறைக்கு வருமானமாக மாற்றும் வகையிலும், பயணிகள் பயன்பெறும் வகையிலும் ரெயிலை இயக்கலாம். இதற்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் தான் ரெயில்வே வாரியத்திடம் எடுத்துரைக்க வேண்டும்.

ரெயில்வே துறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிற நிலையில் வீணாகும் செலவுகளை குறைத்து வருமானத்தை உயர்த்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. மக்கள் பிரதிநிதிகளும் இதனை ரெயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டும். திருச்சி–தஞ்சாவூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கினால் இரு மாவட்டத்தை சேர்ந்த பயணிகளும், வழியில் நின்று செல்லும் ஊர்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவார்கள். எனவே பராமரிப்பு பணிக்காக காலியாக வந்து செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருச்சி–தஞ்சாவூர் இடையே இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்

ஏற்கனவே மன்னார்குடி– ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிக்காக காலி பெட்டிகளுடன் திருச்சி வந்து செல்கிறது. இந்த நிலையில் மேலும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிக்காக காலியாக திருச்சி வந்து செல்வதால் ரெயில்வே துறைக்கு டீசல் செலவு கூடுதலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story