சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் 290 பேர் கைது


சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் 290 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2017 10:45 PM GMT (Updated: 23 March 2017 8:13 PM GMT)

இந்து முன்னணி பிரமுகர் கொலையில் வாலிபரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கண்டித்து

கோவை,

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக 290 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு தொடர்பாக கோவை சாய்பாபா காலனி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த நடைபாதை துணி வியாபாரி ஏ.சையது அபுதாகீர் (வயது 30) என்ப வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் காலை 11 மணி முதல் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கூடினார்கள். பகல் 12 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாகீர் தலைமை தாங்கி பேசியதாவது:–

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொலை வழக்கில் தொடர்பில்லாத சையது அபுதாகீரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி முனையில் பலவந்தமாக அழைத்து சென்று சட்டவிரோத காவலில் வைத்து மிரட்டி சசிகுமார் கொலையை ஒத்துக்கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளனர். அவர் மீது போலீசார் பொய்யான

வழக்கை புனைந்து அவசர அவசரமாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.இதைப்போன்று பொய்யான வழக்குகள் கடந்த காலங்களில் பல இஸ்லாமியர்கள் மீது போடப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதை போன்ற நிலை இந்த வழக்கிலும் உள்ளது. எனவே பொய்யான வழக்கை புனைந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாவட்ட தலைவர் அன்வர் உசேன், எஸ்.டி.பி.ஐ. மண்டல தலைவர் முஸ்தபா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கைது

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு எதிராக கோ ‌ஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 290 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவகளை வேனில் ஏற்றி கோட்டைமேட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story