பொள்ளாச்சி– கிணத்துக்கடவு இடையே அகலரெயில் பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு


பொள்ளாச்சி– கிணத்துக்கடவு இடையே அகலரெயில் பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு
x
தினத்தந்தி 23 March 2017 10:30 PM GMT (Updated: 23 March 2017 8:21 PM GMT)

பொள்ளாச்சி– கிணத்துக்கடவு இடையே அகலரெயில் பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி–திண்டுக்கல், பொள்ளாச்சி–பாலக்காடு, பொள்ளாச்சி–போத்தனூர் இடையேயான அகலரெயில் பாதை பணிகள் கடந்த 2009–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அகலரெயில் பாதை பணிகள் முடிந்து பொள்ளாச்சி–திண்டுக்கல், பொள்ளாச்சி–பாலக்காடு இடையே ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி–போத்தனூர் இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகலரெயில் பாதையாக மாற்றும் பணிகள் ரூ.340 கோடி செலவில் நடைபெற்று வந்தது.

நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே நிர்வாகம் செட்டிப்பாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், நல்லட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் 43 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு ரூ.8 கோடி வழங்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

பாலங்கள்

பொள்ளாச்சி–போத்தனூர் இடையேயான அகலரெயில் பாதையில் 110 சிறிய பாலங்களும், 4 பெரிய பாலங்களும் கட்டப்பட்டு உள்ளன. மேலும் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த 37 ரெயில்வே கேட்களை மாற்றி, தற்போது 14 ரெயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதை தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் பல கட்டமாக பார்வையிட்டு தண்டவாளத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜினை மட்டும் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு ரெயில்வே பாதுகாப்பு ஆணையரை ஆய்வு நடத்த வருமாறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

அதன்பேரில் ஆய்வு நடத்த தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நேற்று பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு 6 டிராலிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. பின்னர் பூஜைகள் செய்து டிராலிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு காலை 10.30 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து டிராலியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் புறப்பட்டு கிணத்துக்கடவு வரை சென்று ஆய்வு நடத்தினார்.

அவருடன் தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர் ராவ், தலைமை பொறியாளர் பிரபுல்லா வர்மா, பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் நரேஷ்லால் வாணி, துணை தலைமை பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் 6 டிராலிகளில் சென்றனர்.

தண்டவாளங்களின் உறுதி தன்மை

முன்னதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பொள்ளாச்சி–போத்தனூர் இடையே 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகலரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ரெயில் இயக்குவது குறித்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய வந்து உள்ளேன். தண்டவாளங்களில் உறுதி தன்மை, சிக்னல்கள், பாலங்கள் ஆய்வு நடத்தப்படும்.

இன்று (நேற்று) கிணத்துக்கடவு வரையும், நாளை (இன்று) கிணத்துக்கடவில் இருந்து போத்தனூர் வரையும் ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வு திருப்திகரமாக இருந்தால் இன்று (வெள்ளிக்கிழமை) போத்தனூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். மேலும் ஆய்வு தொடர்பான அறிக்கைகளை ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு ரெயில் நிர்வாகம் ரெயில் எப்போது இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில் நிலைய கட்டிடம் திறப்பு

இதைத்தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு கிணத்துக்கடவு ரெயில் நிலையத்துக்கு டிராலியில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் வந்தார். வரும் வழியில் அவர் ஒவ்வொரு பகுதியில் தண்டவாளத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்தபடி வந்தார். தொடர்ந்து அவர் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தை பார்வையிட்டு, ரெயில் நிலைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் ரெயில் நிலைய கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.


Next Story