காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது


காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது
x
தினத்தந்தி 23 March 2017 11:00 PM GMT (Updated: 23 March 2017 9:02 PM GMT)

நாகை அருகே தண்டவாளம் உடைந்து கிடந்தது. இதை என்ஜின் டிரைவர் கவனித்து ரெயிலை நிறுத்தியதால் காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,


காரைக்காலில் இருந்து தினமும் நாகை வழியாக சென்னை, பெங்களூரு, கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், நாகை, வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாகை அருகே வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு கப்பலில் வரும் உரம், நிலக்கரியை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றி செல்வதற்காக காரைக்கால்-நாகை வழித்தடத்தில் சரக்கு ரெயில் களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்காலில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் 4 மணி அளவில் வாஞ்சூர் தனியார் துறைமுகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்பதை ரெயில் என்ஜின் டிரைவர் உணர்ந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், உடனடியாக ரெயிலை நிறுத்தி தண்டவாளத்தில் நடந்து சென்று பார்த்தார். இதில் அப்பகுதி தண்டவாளத்தின் ஒரு பகுதி உடைந்து, தரையில் புதைந்திருந்தது தெரியவந்தது.

பயணிகள் அவதி

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரெயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தினர் காரைக்கால்-நாகை வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் களை நிறுத்தி வைத்தனர். பின்னர் ரெயில்வே பணியாளர்கள் உடைந்த தண்டவாளத்தை சீரமைத்தனர். இதன் காரணமாக காரைக்கால்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சூரில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதேபோல் காரைக்கால்- திருச்சி பயணிகள் ரெயில் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. தண்டவாளம் உடைந்திருந்த பகுதியில் நேற்று ரெயில்கள் அனைத்தும் மெதுவாக இயக்கப்பட்டன. அதிகாலை நேரத்தில் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. அதிகாலையில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

விசாரணை

தண்டவாளம் உடைந்தது எப்படி? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்பது பற்றி என்பது பற்றி காரைக்கால் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story