உலகிலேயே ஆரோக்கியமான இதயம் கொண்டவர்கள்!


உலகிலேயே ஆரோக்கியமான இதயம் கொண்டவர்கள்!
x
தினத்தந்தி 25 March 2017 7:11 AM GMT (Updated: 25 March 2017 7:11 AM GMT)

பொலியாவின் தாழ்வான பகுதிகளில், அமேசான் மழைக்காடுகளில் பாயும் மனிக்குய் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழும் இந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரம் ஆகும்.

லகிலேயே ஆரோக்கியமான இதயத்துக்குச் சொந்தக்காரர்கள், பொலிவிய காடுகளில் வசிக்கும் ‘சிமானே’ மக்கள்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிமானே மக்களில், வயதானவர்கள் உட்பட எவருக்குமே இதயத் தமனிகளில் அடைப்புகள் இல்லை என அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

இந்த மக்கள் மிகவும் அற்புதமானவர்கள் என்று கூறும் ஆய்வாளர்கள், அவர்களின் உணவுப் பழக்கங்களும், வாழ்க்கை முறையும்  மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

சிமானே மக்களின் வேட்டையாடும் குணத்தையும், பண்டைய விவசாய முறைகளையும் யாராலும் மாற்றமுடியாது என்று கூறும் ஆய்வாளர்கள், அவர்கள் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்கின்றனர்.

பொலியாவின் தாழ்வான பகுதிகளில், அமேசான் மழைக்காடுகளில் பாயும் மனிக்குய் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழும் இந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரம் ஆகும். வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம் போன்றவைதான் இவர்களின் பிரதான தொழில்கள்.

இவர்களின் வாழ்க்கைமுறை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தைப் போன்று உள்ளது. காட்டு விலங்குகள், மீன்கள், விவசாய விளைபொருட்களான அரிசி, ராகி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழத்துடன், காட்டுப்பழங்களும் இவர்களின் முக்கிய உணவுகள்.

சிமானேக்கள் கடின உழைப்பாளிகள். இவர்களில் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 16 ஆயிரம் அடிகளும், ஆண்கள் 17 ஆயிரம் அடிகளும் நடக்கின்றனர். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட தினசரி 15 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடக்கிறார்கள்.

உலகில் மற்றவர்கள் தினந்தோறும் சில ஆயிரம் அடிகள் நடப்பதே பெரிதாக இருக்கும் நிலையில், சிமானேக்களின் நடைப்பழக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

உணவுப் பழக்கமும், நடைப் பழக்கமும் இந்த மக்களின் இதய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Next Story