வேலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


வேலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 March 2017 11:30 PM GMT (Updated: 26 March 2017 7:07 PM GMT)

வேலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் கல்லூரி பேராசிரியை தூக்கில் பிணமாக தொங்கினார்.

வேலூர்,

புதுப்பெண்

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் இன்பநாதன். சமையல் கலை படித்துவிட்டு வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 25). எம்.பில் படித்துள்ள இவர் வாலாஜாவை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. தற்போது சரண்யா கர்ப்பிணியாக இருந்தார்.

மனைவி சரண்யா வேலைக்கு செல்வது, இன்பநாதனுக்கு பிடிக்கவில்லை. எனவே, அவர் வேலையை விட்டு நிற்குமாறு கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை கேட்டும் சரண்யாவை, இன்பநாதன் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா மன வருந்திய நிலையில் இருந்துள்ளார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்த நிலையில், நேற்று காலை சரண்யா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெருமுகைக்கு விரைந்துசென்றனர். அங்கு பிணமாக கிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரண்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி அவருடைய உறவினர்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சாவில் மர்மம்

அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். அப்போது ‘‘ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு சரண்யாவை துன்புறுத்தியதாகவும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும், சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கூறினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து புகார் மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் சரண்யாவின் சாவுக்கான காரணம் குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story