பட்டப்பகலில் வீட்டின் எதிரே விளையாடிய 2 வயது சிறுவன் கடத்தல்


பட்டப்பகலில் வீட்டின் எதிரே விளையாடிய 2 வயது சிறுவன் கடத்தல்
x
தினத்தந்தி 26 March 2017 11:30 PM GMT (Updated: 26 March 2017 8:56 PM GMT)

மணப்பாறையில் பட்டப்பகலில் வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவனை, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட அத்திக்குளம் பகுதியில் வசித்து வருபவர் வசந்தா. இவருடைய மகள் முத்துலெட்சுமி. இவருக்கும் திருச்சி அரபிகுளசந்து பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் திருமணமாகி சாய் தர்ஷன்(வயது 2) என்ற மகன் உள்ளான். பிரகாஷ் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திருச்சியில் இருந்து தாயை கவனித்து வருகிறார்.

பிரகாஷின் தாய்க்கு உள்ள நோய் தொற்று சாய் தர்ஷனுக்கு ஏற்பட்டு விடும் என்பதால் கடந்த 19-ந் தேதி திருச்சிக்கு சென்ற வசந்தா, அங்கிருந்து சாய் தர்ஷனை மணப்பாறைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இதைத்தொடர்ந்து ஒரு வார காலமாக சாய் தர்ஷன் அத்திக்குளம் பகுதியில் உள்ள வசந்தா வீட்டில் இருந்தான். நேற்று அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்த சாய் தர்ஷனும் வீட்டின் எதிரே சாலையில் விளையாடி கொண்டிருந்தான்.

கடத்தல்

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்துள்ளது. இதைப்பார்த்த சாய் தர்ஷன் சாலையை விட்டு ஓரமாக ஒதுங்கி உள்ளான். அப்போது அந்த வழியாக ஊதா நிற மோட்டார் சைக்கிளில், சிவப்பு நிற ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிறுவன் சாய் தர்ஷனை தூக்கிச்சென்றார். இதைப்பார்த்த அங்கிருந்த கலையரசி என்ற சிறுமி சத்தம் போடவே அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அப்போது, சாய்தர்ஷனை மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக கலையரசி கூறியதை கேட்டு, அனைவரும் அதிர்ச்சி அடைந்து மோட்டார் சைக்கிளில் தப்பிய நபரை தேடி அலைந்தனர்.

ஆனால் அவர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, மணப்பாறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சிறுமி கலையரசியிடமும், சாய்தர்ஷனை கடத்திய விவரங்களை கேட்டறிந்தனர்.

போலீசார் கண்காணிப்பு

இந்நிலையில் சாய்தர்ஷன் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக கடத்தப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் சாய்தர்ஷனை யாரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றார்களா என்று பார்த்தபோது, அதில் கடத்தல் சம்பவம் தொடர்பான காட்சி பதிவாகவில்லை.

திருச்சி மாவட்டத்தின் எல்லையும், திண்டுக்கல் மாவட்டத்தின் தொடக்கமாகவும் உள்ள தங்கம்மாபட்டியில் போலீசார் நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிளில் யாரேனும் குழந்தையுடன் செல்கின்றனரா என்று கண்காணிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்கள், கடைகள், கல்வி நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்ட போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

நீதிபதியின் சகோதரி

இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கடத்தி சென்ற நபர் யார்? எதற்காக சிறுவனை கடத்தி சென்றார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுவனை கடத்திய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறை மோர்குளம் பகுதியில் வீட்டில் இருந்த 14 வயது மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து 2 பேர் மிரட்டியதை அடுத்து அந்த மாணவி சத்தம் போடவே அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து மிரட்டியவர்களில் ஒரு வாலிபரை பிடித்து துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். இந்நிலையில் பட்டப்பகலில் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட சாய்தர்ஷனின் பாட்டியான வசந்தா, சென்னை ஜார்ஜ் டவுன் பகுதி கோர்ட்டில் நீதிபதியாக உள்ள வடிவேலின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story