ஒருதலை காதல் தகராறில் விபரீதம்: என்ஜினீயரிங் மாணவியை கொன்றுவிட்டு விஷம் குடித்தவரும் சாவு


ஒருதலை காதல் தகராறில் விபரீதம்: என்ஜினீயரிங் மாணவியை கொன்றுவிட்டு விஷம் குடித்தவரும் சாவு
x
தினத்தந்தி 28 March 2017 5:25 AM GMT (Updated: 28 March 2017 5:25 AM GMT)

ஒருதலை காதலால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை கொன்றுவிட்டு, விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). இவருடைய மனைவி ருக்மணி, வந்தவாசி பஞ்சாயத்து யூனியன் அலுவலக துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவர்களது மகன் புருஷோத்தமன் (23), மகள் ராஜேஸ்வரி (22). புருஷோத்தமன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் வந்தவாசியில் உள்ள ஒரு தர்காவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜேஸ்வரி ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இறுதி ஆண்டு படித்துவந்தார். ராஜேஸ்வரியின் பெரியப்பா மகன் ராஜா (25). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கழுத்தை நெரித்து கொலை

ராஜேஸ்வரி தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜா, ராஜேஸ்வரியை கண்டித்தார். கடந்த 25-ந் தேதி புருஷோத்தமனை பார்ப்பதற்காக பெருமாளும், ருக்மணியும் சென்றுவிட்டனர். ராஜேஸ்வரி தனது தாய்க்கு பதிலாக அன்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை சுத்தம் செய்வதற்காக சென்றார்.

இதை கவனித்த ராஜா அங்கு சென்று, ராஜேஸ்வரியிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அங்குள்ள சமுதாயகூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேஸ்வரியை ஒருதலையாக காதலித்துவந்த ராஜா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு ராஜேஸ்வரி மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, ராஜேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

விஷம் குடித்தவரும் சாவு

பின்னர் சென்னாவரம் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று ராஜா விஷத்தை குடித்தார். தனது தம்பி சதீஷுக்கு நடந்த விஷயத்தை போனில் தெரிவித்தார். தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story