மானாமதுரை ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் பொதுமக்கள், பயணிகள் குற்றச்சாட்டு


மானாமதுரை ரெயில் நிலையத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் பொதுமக்கள், பயணிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 March 2017 11:00 PM GMT (Updated: 29 March 2017 7:42 PM GMT)

மானாமதுரை ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமல், அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள், ரெயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மானாமதுரை

மதுரை ரெயில்வே கோட்டத்தில் மானாமதுரை ரெயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. இங்கு தினந்தோறும் 16–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக வாரத்தில் 3 முறை இயக்கப்படும் ராமேசுவரம்–திருப்பதி எக்ஸ்பிரஸ், வாரத்தில் 2 முறை இயக்கப்படும் ராமேசுவரம்–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் ராமேசுவரம்–புவனேசுவர் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்–கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் மானாமதுரை ரெயில் நிலையம் வந்து செல்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களுக்கு கரிமூடைகள் சரக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி இங்கு தான் நடைபெறுகிறது. ஒரு மாதத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய ரெயில் நிலையமாகமாகவும் மானாமதுரை இருந்து வருகிறது.

அடிப்படை வசதிகள்

ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததது தான் வேதனை அளிப்பதாக உள்ளது. ரெயில் பயணிகள் டிக்கெட் மூலமாக வரும் வருமானம், போதிய அளவு இல்லாததால் அடிப்படை வசதிகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தொடு திரை வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சறுக்கு நடைப்பாதை, பதிவு செய்யப்பட்ட பெட்டி எண் காட்டி, மேற்கூரை வசதி, வங்கி ஏ.டி.எம். உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் ரெயில் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

புறக்கணிப்பு

மானாமதுரை ரெயில் நிலையத்தில் சுகாதாரமும் தற்போது மிகவும் மோசமாகி உள்ளது. மதுரையில் இருந்து அதிகாரிகள் மானாமதுரை வழியாக ராமேசுவரம் சென்றாலும், மானாமதுரை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகியோருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆனால் அதிகாரிகள் வரும்போது மட்டும் ரெயில் நிலையத்தில் சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகிறது. அதன்பின்னர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விடுகிறது. இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தை அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள், பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேவேளையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரெயில்வே அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story