புதிய அகல ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்குகிறது நெல்லை-செங்கோட்டை ரெயில் பகவதிபுரம் வரை இன்று முதல் நீட்டிப்பு


புதிய அகல ரெயில் பாதையில் போக்குவரத்து தொடங்குகிறது நெல்லை-செங்கோட்டை ரெயில் பகவதிபுரம் வரை இன்று முதல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 30 March 2017 8:15 PM GMT (Updated: 30 March 2017 8:14 PM GMT)

நெல்லை-புனலூர் இடையே புதிய அகல ரெயில் பாதையில் போக்குவரத்தை தொடங்கும் முயற்சியாக நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலானது, பகவதிபுரம் வரை நீட்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

நெல்லை,

நெல்லை-புனலூர் இடையே புதிய அகல ரெயில் பாதையில் போக்குவரத்தை தொடங்கும் முயற்சியாக நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலானது, பகவதிபுரம் வரை நீட்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த தடத்தில் புனலூர்-எடமண் இடையே இன்று முதல் ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய அகல ரெயில் பாதை

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் புனலூர் வரையிலான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

இந்த வழித்தடத்தில் செங்கோட்டையில் இருந்து ‘நியூ‘ ஆரியங்காவு ரெயில் நிலையம் வரையிலும், புனலூர்-எடமண் இடையேயும் ஆய்வுப் பணிகள், ரெயில் சோதனை ஓட்டங்கள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு ரெயில் பாதை தயார் நிலையில் உள்ளது.

இன்று ரெயில் சேவை

இந்த நிலையில் இந்த பாதையில் ரெயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதற்கட்டமாக ஒரு ரெயில் மட்டும் செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

அதாவது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு காலை 9.25 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயில் செங்கோட்டையை சென்றடைந்து, அங்கிருந்து மதியம் 12 மணிக்கு புறப்படுகிறது. அந்த ரெயில் புதிய அகல ரெயில் பாதையில் இயக்கப்பட்டு, பகவதிபுரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.12 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரெயில் மறு மார்க்கத்தில் பகவதிபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.08 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டை ரெயில் நிலையத்துக்கு வருகிறது. பின்னர் செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

புனலூர்-எடமண்

இதே போல் இந்த தடத்தில் புனலூர் ரெயில் நிலையத்தில் இருந்து புதிய அகல ரெயில் பாதையில் எடமண் ரெயில் நிலையம் வரை ரெயில் போக்குவரத்தை இன்று தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

கொல்லம்-புனலூர் பாசஞ்சர் ரெயில்கள், குருவாயூர்-கொல்லம்-புனலூர் பாசஞ்சர் ரெயில்கள் ஆகியவை எடமண் ரெயில் நிலையம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் கோரிக்கை

ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் செங்கோட்டையில் இருந்து நியூ ஆரியங்காவு ரெயில் நிலையம் வரை போக்குவரத்து மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இருந்த போதிலும் தமிழக எல்லைக்குள் உள்ள பகவதிபுரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே ரெயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தமிழக பயணிகளுக்கு எந்தவித பயனையும் அளிக்கப்போவதில்லை. ஏனென்றால் தற்போது செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் இறங்கி பஸ் நிலையத்துக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. அதே போல் பகவதிபுரம் ரெயில் நிலையத்துக்கு சென்றாலும் கொல்லம் மெயின் ரோட்டை அடைய 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ள ‘நியூ‘ ஆரியங்காவு ரெயில் நிலையம் வரை ரெயில் போக்குவரத்தை நீட்டிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பயணிகள் நியூ ஆரியங்காவு ரெயில் நிலையத்தில் இறங்கி, ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள செங்கோட்டை -கொல்லம் மெயின் ரோட்டுக்கு சென்று பஸ்சில் கேரளாவுக்கு தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

இதுதவிர நெல்லையியில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் அனைத்து பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் அனைத்து பாசஞ்சர் ரெயில்களையும் ‘நியூ‘ ஆரியங்காவு வரை நீட்டிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story