இருவழி அகல ரெயில் பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை


இருவழி அகல ரெயில் பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 30 March 2017 11:00 PM GMT (Updated: 30 March 2017 9:01 PM GMT)

வாளாடி-பொன்மலை இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரு வழி அகல ரெயில் பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி,

விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் வாளாடியில் இருந்து பொன்மலை வரை இருவழி அகல ரெயில் பாதை மின்மயமாக்கலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாள பாதையை ஆய்வு செய்வதற்காக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் பெங்களூருவில் இருந்து திருச்சி வந்தார். நேற்று காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை புதிய பாதையை அவர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

சோதனை ஓட்டம்

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக வாளாடி-பொன்மலை இடையே இருவழி அகல ரெயில்பாதையில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வாளாடியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 12 நிமிடங்களில் காவிரி பாலம் வந்து சேர்ந்தது. சோதனையின்போது, பொதுமக்கள் யாரும் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

பயண நேரம் குறையும்

சோதனை ஓட்டம் திருப்திகரமாக இருந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வுக்கு பிறகு, இரு வழி அகல ரெயில் பாதையில் ரெயில்களை இயக்குவதற்கு பாதுகாப்பு ஆணையர் மனோகரன் சில நாட்களில் சான்றிதழ் அளிப்பார். அதன்பின்னர் ஓரிருவாரங்களில் புதிய பாதையில் ரெயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் திருச்சி-சென்னை இடையே ரெயில் போக்குவரத்து பயண நேரம் குறையும் எனவும், கிராசிங்கிற்காக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.


Next Story