நெல்லையில் இருந்து புனலூருக்கு ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கும் மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் தகவல்


நெல்லையில் இருந்து புனலூருக்கு ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கும் மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் தகவல்
x
தினத்தந்தி 8 April 2017 8:00 PM GMT (Updated: 8 April 2017 2:16 PM GMT)

நெல்லையில் இருந்து புனலூருக்கு வருகிற ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் கூறினார்.

நெல்லை,

நெல்லையில் இருந்து புனலூருக்கு வருகிற ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் கூறினார்.

கோட்ட மேலாளர் வருகை

மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவர், மருத்துவ பயிற்சி பெற்ற ரெயில்வே ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் உதவி அளிப்பது மற்றும் அவர்களை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கொண்டு செல்வது தொடர்பாக ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புனலூருக்கு ரெயில் போக்குவரத்து

செங்கோட்டை–புனலூர் இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது செங்கோட்டையில் இருந்து நியூ ஆரியங்காவு வரையிலும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து எடமண் வரையிலும் பாதை தயார் படுத்தப்பட்டு ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 22 கிலோ மீட்டர் பணிகள் வருகிற ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும். எனவே வருகிற ஜூன் மாதம் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக புனலூருக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கும்.

தற்போது செங்கோட்டையில் இருந்து நியூ ஆரியங்காவு வரை ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி கிடைத்த போதிலும் மலைப்பாதையில் இயக்கக்கூடிய, ஏதேனும் பிரச்சினை என்றால் தானாகவே பிரேக் பிடித்துக் கொள்ளும் வசதி கொண்ட ரெயில் என்ஜின் தேவைப்படுகிறது. அத்தகையை ரெயில் என்ஜின் வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திடம் கேட்டு உள்ளோம். அந்த ரெயில் என்ஜின் வந்த உடன் நியூ ஆரியங்காவு வரை ரெயில் நீட்டிக்கப்படும்.

நெல்லை எக்ஸ்பிரஸ்

நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரே நேரத்தில் ரெயில்கள் புறப்படுகின்றன. எனவே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இரட்டை வழி ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டால் பயண நேரம் குறைவதுடன் இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரமும் ஒரே நேரத்தில் புறப்படாத வகையில் மாற்றி அமைக்கப்பட்டு விடும்.

இரட்டை ரெயில் பாதை

தற்போது மதுரையில் இருந்து விருதுநகர் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மணியாச்சி–நாகர்கோவில், மணியாச்சி –தூத்துக்குடி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் இருந்து தச்சநல்லூர்–ஸ்ரீபுரம் இணைப்பு சாலையுடன் சேரும் வகையில் புதிய ரோடு போடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில் கோட்ட உதவி மேலாளர் முரளி கிருஷ்ணா, தலைமை மருத்துவ அதிகாரி ஷாகு, நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் கல்யாணி, நெல்லை மருத்துவ அலுவலர் கிரிபிரசாத், மருத்துவ உதவி அதிகாரி மணிகண்டன், பயிற்சியாளர் ரவிசங்கர், முகாம் அலுவலர்கள் வேல்முருகன், லெட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story