தமிழகத்தில் ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை


தமிழகத்தில் ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 21 April 2017 11:30 PM GMT (Updated: 21 April 2017 5:37 PM GMT)

தமிழகத்தில் ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாதி தெரிவித்தார்.

அரக்கோணம்

சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் நவீன் குலாதி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்வதற்காக நேற்று வந்தார். ரெயில் நிலையத்தில் உள்ள 8 பிளாட்பாரங்களில் ஒவ்வொரு பிளாட்பாரங்களாக சென்று பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பிளாட்பாரங்களில் நின்று கொண்டு இருந்த பயணிகளிடம் ரெயில் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து அதை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பயணிகள் ஓய்வறைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது ரெயில்களின் கால அட்டவணை படிக்க முடியாத வகையில் சிறிய அளவிலான எழுத்துகள் காணப்பட்டது. உடனடியாக பழைய கால அட்டவணையை மாற்றி விட்டு நன்றாக தெரியும் வகையில் ரெயில் நிலையத்தில் உள்ள 8 பிளாட்பாரங்களில் புதிய கால அட்டவணை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விரிவாக்க பணி

ரெயில் நிலையத்தில் ஒவ்வொரு பிரிவுகளுக்கு நேரடியாக சென்று கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகள் கேட்டறிந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடந்து வரும் 1,2–வது பிளாட்பாரங்களின் விரிவாக்க பணி எந்த நிலையில் உள்ளது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் சென்னையில் இருந்து காட்பாடி ரெயில் நிலையம் வரை ஆய்வு பணிகள் செய்து வருகிறேன். தற்போது அரக்கோணம் ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து காட்பாடி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ரெயில்கள் இல்லை என பயணிகள் குறை கூறி உள்ளனர்.

ஆய்வு பணிகளுக்கு பின்னர் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்களை இயக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்

தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சார ரெயிலில் முதற்கட்டமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனைகளுக்கு பின்னர் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து ரெயில்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பெருமளவில் ரெயில்களில் குற்றங்கள் குறைந்து விடும்.

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளுக்காக அடிப்படை வசதிகள் கூடுதலாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், ரெயில்வே போலீசார் உடனிருந்தனர்.


Next Story