ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி தப்பி ஓட்டம்: பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய முடிவு


ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி தப்பி ஓட்டம்: பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய முடிவு
x
தினத்தந்தி 24 April 2017 12:00 AM GMT (Updated: 23 April 2017 8:26 PM GMT)

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்வது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

செங்குன்றம்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்வது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

கைதி தப்பி ஓட்டம்

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவர், அதே பகுதியை சேர்ந்த பேபியம்மாள் (வயது 70) என்பவர் நடத்தி வந்த தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

சம்பள பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் பேபியம்மாளை கோட்டீஸ்வரன் கொலை செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோட்டீஸ்வரன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பார்வை குறைவால் அவதிப்பட்டு வந்த கோட்டீஸ்வரன் உள்பட 10 கைதிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். அப்போது ஆயுள் தண்டனை கைதி கோட்டீஸ்வரன், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

பணி இடைநீக்கம்

தப்பி ஓடிய கைதி கோட்டீஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய சிறைத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

புழல் சிறையில் இருந்து கைதிகளை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போது ஜெயில் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான 5 பெண் போலீசார் மற்றும் 7 ஆண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இவர்கள், ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்றதும் கைதிகளை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உயர் அதிகாரிகள் ஆலோசனை

அதன் பின்பு சிறை போலீசாரும், ஸ்டான்லி ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசாரும் இணைந்துதான் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போதுதான் பரிசோதனைக்காக வரிசையில் நின்ற கைதி கோட்டீஸ்வரன் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ஸ்டான்லி ஆஸ்பத்திரி புறக்காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதா? அல்லது புழல் சிறையில் இருந்து பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதா? என்ற குழப்பம் நீடிக்கிறது.

இது தொடர்பாக சிறைத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கைதி தப்பி ஓட எந்த போலீசாரின் கவனக்குறைவு காரணம் என்று தெரிய வந்ததும் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Next Story