அம்பத்தூர் அருகே மை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து


அம்பத்தூர் அருகே மை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
x
தினத்தந்தி 23 April 2017 10:45 PM GMT (Updated: 23 April 2017 8:26 PM GMT)

அம்பத்தூர் அருகே மை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆவடி

அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது 36). இவர், அதே பகுதியில் வானகரம் சாலையில் அச்சகத்துக்கு தேவையான மை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு 3 பேர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து வினோத், கம்பெனியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை 7 மணியளவில் திடீரென கம்பெனிக்குள் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

4 மணி நேரம் போராட்டம்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அம்பத்தூர், ஜெ.ஜெ. நகர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கம்பெனியில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கம்பெனியில் மை தயாரிக்கும் ரசாயன பேரல்கள் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மின் கசிவு காரணமா?

எனினும் தீ விபத்தில் கம்பெனியில் இருந்த மை தயாரிக்க பயன்படும் ரசாயன பேரல்கள், வேதிப் பொருட்கள், எந்திரங்கள் உள்பட அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

இது குறித்து வினோத் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story