சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டுடன் வட மாநில ஆசாமி கைது


சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டுடன் வட மாநில ஆசாமி கைது
x
தினத்தந்தி 24 April 2017 9:15 PM GMT (Updated: 24 April 2017 7:20 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டு கொடுத்து டிக்கெட் எடுக்க முயன்ற வட மாநில ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தேவாரம் (வயது 19). இவர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டார். அப்போது டிக்கெட் கொடுப்பவர் பணத்தை வாங்கி பார்த்தபோது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விரைந்து வந்து தேவாரத்தை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பிருதிவிராஜ் என்பவரது பொம்மை கடையில் வேலை பார்ப்பதாகவும், பிருதிவிராஜ் தான் இந்த பணத்தை கொடுத்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.

கள்ள நோட்டு

உடனே போலீசார் பொம்மைக் கடை உரிமையாளரான பிருதிவிராஜை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் அவரது கடைக்கு வந்து பொம்மை வாங்கி விட்டு இந்த கள்ள நோட்டுகளை தனக்கு தெரியாமல் கொடுத்து விட்டு சென்றதாக கூறினார்.

இதை நம்பாத போலீசார் பிருதிவிராஜின் கடை மற்றும் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மூன்று மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இரண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி தேவாரம் மற்றும் பிருதிவிராஜின் மீது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story