மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு ‘காங்கிரசில் இருந்து விலக மாட்டேன்’ நடிகை ரம்யா பேட்டி


மத்திய அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு ‘காங்கிரசில் இருந்து விலக மாட்டேன்’ நடிகை ரம்யா பேட்டி
x
தினத்தந்தி 25 April 2017 8:45 PM GMT (Updated: 25 April 2017 6:55 PM GMT)

“நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன்“ என்று நடிகை ரம்யா கூறினார்.

பெங்களூரு,

“நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன்“ என்று நடிகை ரம்யா கூறினார்.

பா.ஜனதாவில் சேருவதாக...

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருடைய உறவுக்கார பெண்ணான நடிகை ரம்யாவும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேருவார் என்று அடிக்கடி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ரம்யா பா.ஜனதாவில் சேர முன்வந்தால் அவரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் வலியுறுத்தினர். இப்படி வெளியான தகவல்களுக்கு நடிகை ரம்யா எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இதனால் அவர் பா.ஜனதாவில் சேருவார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நடிகை ரம்யா வரவில்லை. அவரது தாயார் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது “ரம்யா எக்காரணம் கொண்டும் காங்கிரசை விட்டு விலக மாட்டார்“ என்று அவர் கூறினார். இந்த பிரச்சினைக்கு நடிகை ரம்யா ‘டுவிட்டர்’ மூலம் முற்றுப்புள்ளி வைத்து உள்ளார். இதுபற்றி நடிகை ரம்யா தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து விவரம் வருமாறு:–

விலகமாட்டேன்

“உடல்நலக்குறைவு காரணமாக நான் ஓய்வில் இருக்கிறேன். அதனால் தீவிர அரசியலில் இருந்து சற்று தொலைவில் உள்ளேன். அடுத்த மாதம் முதல் நான் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். அதில் உண்மை எதுவும் இல்லை. எக்காரணம் கொண்டும் நான் காங்கிரசில் இருந்து விலகமாட்டேன். சத்தீஸ்கார் மாநிலத்தில் மத்திய படையினர் 25 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். இது மத்திய அரசின் உளவுத்துறை தோல்வியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

இந்த நாட்டில் ராணுவத்தினர், போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் குடிமக்கள், ஆதார் தகவல்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மத்திய அரசின் கீழ் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பசுக்களை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?

இந்தி திணிப்பு

மத்திய உள்துறை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. இந்திய மொழிகளின் உரிமையை காப்பதற்கு பதிலாக இந்தி மொழியை திணிக்கிறார்கள். உள்ளூர் மொழியில் டுவிட்டரில் பதிவிடுகிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை குறித்து பேசுகிறீர்கள். ஆனால் மெதுவாக இந்தியை திணிக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்ன?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தி மொழி திணிப்புக்கும் நடிகை ரம்யா தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.


Next Story