கலை பேசும் கண்கள்


கலை பேசும் கண்கள்
x
தினத்தந்தி 28 May 2017 8:49 AM GMT (Updated: 28 May 2017 8:49 AM GMT)

“இளம் பெண்கள் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும் என்றால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சமயோசிதம், மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றல், மேடையில் திறமையை தயக்கமின்றி முழுமையாக வெளிப்படுத்தும் திறமை போன்றவை இருக்க வேண்டும்.

“இளம் பெண்கள் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும் என்றால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சமயோசிதம், மனதை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றல், மேடையில் திறமையை தயக்கமின்றி முழுமையாக வெளிப்படுத்தும் திறமை போன்றவை இருக்க வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கை, நேர்த்தியான தோற்றம், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை கொண்ட திறமைமிகு பெண்கள் எப்போதுமே சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களை எல்லாம் பெண்கள் பெறவேண்டும் என்றால், சிறுவயதிலே அவர்கள் பரதநாட்டியம் பயில வேண்டும்” என்கிறார், மனிஷா கணேசன். கும்பகோணத்தை சேர்ந்த இவர், பரத நாட்டியத்தில் தேசிய விருது பெற்றவர்.

“இன்று பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுக் கொண்டிருந்தாலும், அவர்களது முன்னேற்றம் என்னவோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பெண்களிடையே நிலவும் தயக்கமும், தன்னம்பிக்கை குறைவும்தான் அவர்களது வேகமான முன்னேற்றத்துக்கு முக்கிய தடைகளாக இருந்துகொண்டிருக்கின்றன. இந்த இரண்டு தடைகளையும் பத்து வயதுக்குள்ளே சிறுமிகளால் தகர்த்திட முடியும். அதற்கு அவர்கள் பரதநாட்டியம் பயில வேண்டும்.

பரதநாட்டியம் பயிலும் சிறுமிகளுக்கு மேடை பயம் இருக்காது. எங்கும் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்பார்கள். அவர்கள் தகவல்தொடர்பிலும் சிறந்துவிளங்குவார்கள். சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெளிவாக உணர்ந்து, அதற்கு தக்கபடி தன்னை மாற்றிக்கொள்வார்கள். பரதம் பயிலும் மாணவிகள் மனதிடம் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். தினசரி பயிற்சியால் அவர்களது மூளையின் வேகம் அதிகரிக்கும். அதன் மூலம் அவர்களது உள்ளுணர்வும் சிறப்பாக செயல்படும்” என்று விளக்கம் தரும் இவர், பரத நாட்டியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தி, பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது பெற்றோர்: கணேசன்-கிரிஜா.

இவருக்கு மூன்று வயதில் பரதத்தின் மீது ஆர்வம் வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக் கிறது.

“அப்போது நாங்கள் வீட்டின் மாடியில் குடியிருந்தோம். வீட்டின் கீழ் பகுதியில் குடியிருந்த சிறுமிக்கு பரதம் கற்றுக்கொடுக்க குரு ஒருவர் வருவார். அவர் வந்ததும் கீழ் வீட்டில் இருந்து இசையும், நடனம் ஆடும் ஓசையும் என் காதுகளில் விழுந்துள்ளது. அதை பார்க்கும் ஆர்வம் அதிகரித்து என் பெற்றோரிடம் கூறாமலே நான் இறங்கி, கீழ் வீட்டிற்கு சென்றிருக் கிறேன். சில நாட்களுக்கு பிறகுதான் என் குடும்பத் தினர் அதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

என் அம்மா கிரிஜாவும், சித்தி சுபத்ராவும் பார்த்தபோது நான் கீழ் வீட்டில் ஜன்னலுக்கு வெளியே நின்று, அந்த சிறுமிக்கு குரு, பரதம் கற்றுக்கொடுப்பதை ஆழ்ந்து கவனித்தபடி நின்றிருந்திருக்கிறேன். அப்போது என் முகத்தில் தெரிந்த உற்சாகத்தை பார்த்த அவர்கள், ‘நீயும் பரதம் கற்றுக்கொள் கிறாயா?’ என்று கேட்டிருக்கிறார்கள். நானும் சரி என்று கூறியிருக்கிறேன். அப்போதே எனக்கும் கற்றுத்தர குருவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நானும் ஆர்வமாக பயிற்சி பெற தொடங்கி யிருக்கிறேன்” என்று மனிஷா பரதத்திற்கு அறிமுகமான நாட்களை அசைபோடுகிறார். இவர், குழந்தைகளிடம் பெற்றோர் எந்த கலையையும் திணிக்கக் கூடாது என்றும் கூறுகிறார்.

“நாம் கலைத் துறையில் இறங்கி சாதிக்க வேண்டும் என்றால், நமது குடும்பத்திற்கு பெரிய கலைப் பின்னணி இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது குடும்பத்தை பொறுத்தவரையில் என் தாயார் பரதம் பயில ஆசைப்பட்டிருக் கிறார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமலே திருமணம் நடந்திருக்கிறது. திருமணமானதும் குடும்பத்தை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

தன்னால் முடியாததை மகளாவது செய்து முடிக்கவேண்டும் என்று நினைத்து, சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கலைகளை திணிப்பார்கள். திணிக்கிற கலை இனிக்காது. திணிக்கிற எதையும் குழந்தைகள் ரசித்து செய்யாது. அதனால் குழந்தைகள் விரும்பும் கலையை அவர்கள் பயில அனுமதிக்கவேண்டும். என்னிடம் பரதம் பயிலும் ஆர்வம் இருந்ததால் பெற்றோர் அதற்கான வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்தார்கள். நானும் அதை ரசித்து செய்ததால் நான் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துக்கொண்டிருக் கிறது” என்கிறார்.

மனிஷா, நான்கு வயதில் முதன் முதலில் மேடை ஏறி, நடனமாடி பாராட்டு பெற்றிருக்கிறார்.

“நான் கும்பகோணத்தில் உள்ள டாக்டர் ஜி.எஸ்.கல்யாண சுந்தரம் பள்ளியில் படித்தேன். நாட்டிய பயிற்சியை தொடர்ந்த படியே நான் படிக்கவும் செய்தது, என் கல்விக்கும் பயனுள்ளதாக இருந்தது. நாட்டியத்தால் நினைவாற்றலும், பாடங்களை படிக்கும் திறனும் மேம்பட்டது. அதனால் அதிக மதிப்பெண் பெற்றேன். நடனத்திலும், படிப்பிலும் பள்ளிக் காலத்திலே நான் பாராட்டுகளை பெற்றேன்.

நிறைய மாணவிகள் பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் வருடங்களில் நாட்டிய பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். அது சரியல்ல. அந்த மாதிரி அதிகம் படிக்க வேண்டிய காலகட்டத்தில்தான் நாட்டிய பயிற்சி மிக அவசியம். ஏன்என்றால் நாட்டிய பயிற்சியோடு படித்தால், படிப்புத்திறன் மேம்படும். படிப்பால் களைப்பும் ஏற்படாது. மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். நான் பள்ளி இறுதித் தேர்வு காலகட்டங்களிலும் நாட்டிய பயிற்சி பெற்றேன். இரண்டுக்கும் தகுந்தபடி நேரத்தை ஒதுக்கிக்கொண்டேன். வெளி நிகழ்ச்சிக்கு செல்வதை மட்டும் அப்போது தவிர்த்தேன்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருச்சியில் உள்ள அரசு நாட்டியக் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு ஓகேஸ்வரி சண்முகநாதன் பேராசிரியையாக இருந்தார். நான் பல்வேறு குருக்களிடம் நாட்டியம் கற்றிருந்தாலும், ஓகேஸ்வரி சண்முகநாதன்தான் என் மனதில் நிலைத்து நிற்கிறார். காரணம் நாட்டியத்தில் என்னிடம் இருந்த குறைகளை அகற்றி என்னை ஜொலிக்கச் செய்தவர் அவர்தான். நான் குச்சிப்புடி, மயில் நடனம் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்..” என்கிறார்.

பரதம் கற்ற பெண்கள், மற்றவர்கள் முன்னால் தனித்துவம் பெற்று திகழ்வதற்கான காரணத்தையும் மனிஷா விளக்குகிறார்!

“பரதநாட்டியம் ஒரு அழகியல் சார்ந்த கலை. அதனால் நாட்டியத்தோடு சேர்த்து தங்களை நன்றாக அலங்கரிக்கும் நேர்த்தியையும் பரதநாட்டிய கலைஞர்கள் கற்றுக்கொள்வார்கள். எதையும் அவர்கள் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வார்கள். அவர் களது உடல்மொழியும் மற்றவர்களை கவரும் விதத்தில் அற்புதமாக இருக்கும். நடை, உடை, பாவனை அனைத்திலும் அவர்களது சிறப்பு தென்படுவதால் எவ்வளவு பெரிய கூட்டத்தில் நின்றா லும் ஒரு பரதக் கலைஞர் தனித்துவம் பெற்றவராக திகழ்வார்.

பரத கலைஞர்களின் வாய்க்கு மட்டுமல்ல, கண்களுக்கும் பேசும் சக்தி இருக்கிறது. அவர்கள் மேடைகளில் கண்களாலே ஒரு காட்சியை மக்களுக்கு தத்ரூபமாக உணர்த்திவிடும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பரத நாட்டியத்தில் கைஅசைவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கண் அசைவுகளுக்கும் கொடுக்கிறோம். அதனால் கண்களுக்கு அதிக பயிற்சி கிடைக்கிறது. முறைப்படுத்தப்பட்ட அந்த பயிற்சிகளால் கண்கள் அழகாக தோன்றும். கூடவே பொருத்தமாக அலங்காரமும் செய்வதால் ஊமை விழிகளை பேசும் விழிகளாக மாற்றிவிடுகிறோம்” என்று அழகியல் சார்ந்து அழகாக விளக்கம் தருகிறார்.

நாட்டியத்தோடு இசையிலும் ஆர்வமிக்கவராக மனிஷா திகழ்கிறார். இவர் இசையையும் முறைப்படி கற்றுக்கொண்டிருக் கிறார்.

“எனது அண்ணன் ராகவ். எனது அண்ணி பின்னணி பாடகி பாம்பே சாரதா ராகவ். எனக்கு சிறுவயதிலேயே இசையிலும் ஆர்வம் இருந்தது. அதற்கான வாய்ப்பும் கிடைத்ததால் இசையையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். பரத நாட்டியமே இசையோடு கலந்ததுதான். நான் ஏராளமான மேடைகளில் இசைக்கு ஏற்ப ஆடியிருப்பதால், இசையை நான் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறது..” என்று கூறும் மனிஷா, திருமண பருவத்தில் இருக்கிறார். பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

“நடனமும், இசையும் எனக்கு இரு கண்கள். அந்த கலைக் கண்கள் கலங்காத அளவுக்கு என்னை கலையில் ஊக்குவிப்பவர் கணவராக அமையவேண்டும் என்று விரும்புகிறேன். நான் பாரம்பரியத்தை சார்ந்து பண்புடன் வாழும் பெண்..” என்று நாணம் கலக்க சொல்கிறார். மனிஷா வேலூர் தங்கக்கோவில் வரலாற்றையும், அற்புதங்களையும் நடனத்தில் வடிவமைத்து ஆவணப்படுத்தியுள்ளார். இவரது தந்தை கணேசன் பன்முகத் திறமை வாய்ந்தவர். எழுத்தாளர், பாடலாசிரியர், பேச்சாளர் போன்ற திறமைகளை கொண்டவர். திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் தெளிவுரை எழுதிக்கொண்டிருக்கிறார்.

புதுடெல்லியில் நடந்த தேசிய விழாவில் கலந்துகொண்ட மனிஷா, அங்கு இளம் வயது சாதனையாளராக அங்கீகரிக்கப்பட்டு தேசிய விருதினை பெற்றிருக்கிறார்.

“நான் நாட்டிய கல்லூரியில் தனித்துவம் பெற்ற மாணவியாக திகழ்ந்தேன். ஏன்என்றால் அங்கு புதிதாக சேர்ந்த பல மாணவிகள் தொடக்க நிலையில் இருந்து நாட்டியத்தை கற்றார்கள். எனக்கு அப்போதே நாட்டியத்தில் 14 ஆண்டுகால அனுபவம் இருந்ததால் என்னால் நன்றாக ஜொலிக்க முடிந்தது. எனது திறமையை உணர்ந்து, எங்கள் கல்லூரியில் இருந்தே என்னை தேசிய விருதுக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். எனது மேடை நிகழ்ச்சி தொகுப்புகளையும் அனுப்பியிருக்கிறார்கள். அதனால் மிகப்பெரிய அறிஞர்களைகொண்ட சபையில் இளம் வயதிலே, மனித உரிமை அமைப்பு ‘நடன கலாரத்னா’ என்ற தேசிய விருதினை வழங்கி என்னை கவுரவித்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. பரதகலை மாமணி என்ற விருதினையும் பெற்றிருக்கிறேன். இத்தகைய விருதுகள் நாட்டியத்தின் மீது எனக்கு மிகுந்த பக்தியை உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து முதுகலை கல்வி பயின்று நடனத்தை ஆராய்ச்சி செய்து பி.எச்டி. பட்டம் பெறவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் கற்ற இந்த கலையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறேன்” என்கிறார், மனிஷா.

இவரது ஆசைகள் அனைத்தும் அரங்கேறட்டும்! 

Next Story