தாக்குதலை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


தாக்குதலை கண்டித்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2017 10:45 PM GMT (Updated: 23 Jun 2017 9:15 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் கேசவன் (வயது 45). இவர், கடந்த 19-ந் தேதி மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த வக்கீல் கேசவன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வக்கீல் கேசவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில், சங்கத்தின் துணை தலைவர் ஆர்.சுதா, செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், நூலகர் ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் நன்மாறன், சுப்பிரமணியன், தாரா, கோபு, இந்தியன், ஸ்வப்ணா உள்பட ஏராளமான வக்கீல்கள், ஐகோர்ட்டு வளாகத்தில் ஊர்வலம் சென்றனர். பின்னர், ஐகோர்ட்டு நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வக்கீல் கேசவன் மீது தாக்குதல் நடத்திய கூலிப்படையினரை உடனே கைது செய்யவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.

அதேபோல, மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்ற வக்கீல் சங்கம், வக்கீல் கேசவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, தீர்மானம் இயற்றியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

Next Story