செங்குன்றத்தில், சாலை விரிவாக்க பணிக்காக எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு


செங்குன்றத்தில், சாலை விரிவாக்க பணிக்காக எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jun 2017 11:00 PM GMT (Updated: 23 Jun 2017 9:49 PM GMT)

செங்குன்றத்தில், சாலை விரிவாக்க பணிக்காக எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்குன்றம், 

செங்குன்றம் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 1993-ம் ஆண்டு அப்போதைய புழல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயபால் ஏற்பாட்டின் பேரில் அமைக்கப்பட்ட இந்த சிலையை அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் திறந்துவைத்தார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் அ.தி.மு.க.வின் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது அந்த பகுதி அ.தி.மு.க.வினர் இந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து விட்டுதான் நிகழ்ச்சியை தொடங்குவார்கள்.

அகற்றம்

இந்த நிலையில் நேற்று காலை பீடத்தில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டு, அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. காலையில் அங்கு வந்த அ.தி.மு.க.வினர், எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் பரவியதும் ஏராளமான கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டனர்.

செங்குன்றம் ஜி.என்.டி. சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு சாலை விரிவாக்க பணியின் போது நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், அந்த எம்.ஜி.ஆர். சிலையை அகற்றி, அதன் அருகிலேயே வைத்து விட்டு சென்றது பின்னர் தெரியவந்தது.

முன் அறிவிப்பு இல்லை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில், சுற்று வட்டாரத்தில் எம்.ஜி.ஆர். சிலை ஏதும் இல்லாத நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக எந்தவித முன்அறிவிப்பும் இன்றி எம்.ஜி.ஆர். சிலையை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story