ஆரோக்கிய இந்தியா: டாக்டர்-நோயாளி நல்லுறவு மேம்பட என்ன வழி?


ஆரோக்கிய இந்தியா: டாக்டர்-நோயாளி நல்லுறவு மேம்பட என்ன வழி?
x
தினத்தந்தி 25 Jun 2017 8:47 AM GMT (Updated: 25 Jun 2017 8:47 AM GMT)

ஆரோக்கியமான உலகம் உருவாகவேண்டும் என்றால் அதற்கு முதல் தேவையாக இருப்பது, டாக்டர்கள்- நோயாளிகள் நல்லுறவு!

ஜூலை-1 தேசிய மருத்துவர்கள் தினம்

ரோக்கியமான உலகம் உருவாகவேண்டும் என்றால் அதற்கு முதல் தேவையாக இருப்பது, டாக்டர்கள்- நோயாளிகள் நல்லுறவு! எந்த நாடுகளில் எல்லாம் இந்த இரு தரப் பினருக்கும் இடையே நல்லுறவும், நம்பிக்கையும் உருவாகியிருக்கிறதோ, அந்த நாடுகளெல்லாம் ஆரோக்கியத்தில் முன்னிலை பெற்றிருக்கின்றன. நாம் தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாட இருக்கும் இந்த தருணத்தில் இந்தியாவில் டாக்டர்கள்- நோயாளிகள் நல்லுறவு எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் டாக்டர்களை கடவுளுக்கு நிகராக மக்கள் சொன்னார்கள். இப்போது ‘அவரும் ஒரு தொழிலதிபர்’ என்று சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை மாற, டாக்டர்- நோயாளிகள் நல்லுறவு மேம்பட்டே ஆகவேண்டும்.

நல்லுறவை மேம்படுத்தும் இந்த முயற்சியில் டாக்டர்களாகிய எங்களுக்குத்தான் அதிக பங்கு இருக்கிறது. 80 சதவீதம் அந்த பணியை நாங்கள் செய்யவேண்டும். 20 சதவீதம்தான் நோயாளிகளின் முயற்சி இருக்கிறது. ஏன்என்றால் ஒரு நோயாளி உடல் கஷ்டம், மன கஷ்டம், பண கஷ்டம், நேர நெருக்கடி போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒரு டாக்டரை சந்திக்க வருகிறார். அவர், எங்களோடு உறவை எப்படி பேணவேண்டும் என்பது பற்றி கற்றிருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள், ‘நோயாளிகளோடு நல்லுறவை வளர்ப்பது எப்படி?’ என்பதையும் கற்றுக்கொண்டுதான் இந்த சேவைக்கு வருகிறோம். அதனால்தான் நல்லுறவை பேணுவதில் டாக்டர்கள் பங்களிப்பு முக்கியமானது என்று சொல்கிறேன்.

ஒரு நோயாளி தனக்கான டாக்டரை தேர்ந் தெடுத்து, ஒன்றிரண்டு வாரம் காத்திருந்து ‘அப்பாயிண்ட்மென்ட்’ பெறுகிறார். டாக்டர் தனக்கு சவுகரியமான நேரத்தை குறிப்பிட்டு அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கிறார். பின்பு அந்த நோயாளியை ஆஸ்பத்திரியில் மணிக்கணக்கில் காக்கவைப்பது நல்லுறவை வளர்க்க உதவாது. தவிர்க்க முடியாத சிறிய தாமதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளலாம்.

ஒரு நோயாளி, டாக்டரை சந்திக்க உள்ளே வரும்போது அவரை டாக்டர் புன்னகையோடு வரவேற்றால், அவர் தனது உடல்- மன கஷ்டங்களை மறந்து இயல்பாகிவிடுவார். அங்கே அவர்களுக்குள் உறவுப்பாலம் உருவாகிவிடும். தன் முன்னால் ஒரு நோயாளி உட்கார்ந்திருக்கும்போது தனது நேரத்தை அவருக்காகத்தான் டாக்டர் செலவிடவேண்டும். நோயாளிகள் நிறைய கேள்விகளோடும், சந்தேகங்களோடும் வருவார்கள். அவர்கள் தயக்கமின்றி அதை எல்லாம் பேசும் வாய்ப்பினை டாக்டர்கள்தான் உருவாக்கிக்கொடுக்கவேண்டும்.

எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, ஸ்கேன் போன்றவைகள் எடுத்து முடித்ததும், அதற்கான ரிப்போர்ட்டையும் அத்தோடு இணைத்து கொடுத்துவிடுவார்கள். டாக்டர்கள் அதை மட்டும் படித்துப்பார்த்து சிகிச்சை கொடுத்துவிடலாம்தான். ஆனாலும் ‘நம்ம எக்ஸ்ரேயை நம்ம டாக்டர் ஒரு தடவை பார்த்து ஆய்வு செய்யவேண்டும்’ என்று ஒவ்வொரு நோயாளியும் எதிர்பார்க்கிறார்கள். தன்னை நம்பி வரும் நோயாளிக்காக டாக்டர்கள் அதை செய்யவேண்டியதிருக்கிறது.

‘எந்த நேரத்திலும் நம் டாக்டரை அணுகலாம்’ என்ற நம்பிக்கை, அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிக்கு உருவாகவேண்டும். ஆபரேஷன் முடிந்ததும் நோயாளி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார். வீட்டிற்கு சென்ற ஒரு சில நாட்களில் அவருக்கு உடல்ரீதியாக ஏதாவது நெருக்கடிகள் ஏற்படலாம். தேவைப்படும் நேரத்தில், தேவைப் படும் விபரங்களோடு பதிலளிக் கும் விதத்தில் அந்த டாக்டர் இருக்கவேண்டும். அதை சிறப்பாக செய்யவேண்டும் என்றால், அந்த நோயாளியை பற்றிய குறிப்பு டாக்டரின் பார்வைக்கு உடனடியாக கிடைக்கும் விதத்தில் அந்த மருத்துவமனையின் செயல்பாடு இருக்கவேண்டும்.

முன்பு குடும்பத்திற்கு ஒரு ‘பேம்லி டாக்டர்’ இருப்பார். அவருக்கு அந்த நோயாளியை பற்றி மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர்கள் பற்றியும், அவர்களது பொருளாதார பின்னணி உள்பட அனைத்தும் தெரியும். அதற்கு தக்கபடி அவரது சிகிச்சை முறையும், அணுகுமுறையும் ரொம்ப எளிமையாக இருக்கும். அவரால் குணமளிக்க முடியாதபோது, அவரே இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டுக்கு பரிந்துரைப்பார். அது பல வகைகளில் அந்த நோயாளிக்கு பாதுகாப்பையும், பலனையும் தரும். இப்போது குடும்ப டாக்டர் என்ற கோட்பாடு குறைந்துவிட்டது. அந்த கோட்பாட்டை மீண்டெடுக்க அனைவரும் முன்வரவேண்டும்.

டாக்டர் படிப்புக்காக இப்போது சிலர் லட்சக் கணக்கில் செலவிடவேண்டியிருக்கிறது. ‘அப்படி எக்கச்சக்கமாக செலவிட்டு படித்து, தேறி வருகிறவர்கள் நம்மிடம்தானே அதை வசூலிப்பார்கள்?’ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கேள்வி எழாத அளவுக்கு நமது செயல்பாடுகள் அமையவேண்டும்.

‘ஒரே குடையின் கீழ் அனைத்து சிசிக்சைகளும்’ என்ற பிரமாண்டமான மருத்துவமனைகள் நிறைய உருவாகிவிட்டன. அதில் சில பலன் களும் உண்டு. ஆனால் அங்கே ஒருவித பரபரப்பும், இயந்திரத்தனமும் நிலவுவதாக மக்கள் குறைபடுகிறார்கள். இதையும் டாக்டர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.

ஒரு உண்மையை மக்கள் உணர்ந்துதான் ஆகவேண்டும். நாங்கள் கடவுள் அல்ல, மனிதர்கள்தான். எங்கள் சேவைகளும் கண்காணிக்கப்பட வேண்டியதுதான். எங்களை கண்காணிக்கக்கூடிய உயர் அமைப்புகள் சரிவர இயங்கவேண்டும். அதற்கு தேவையான அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.

புதிதாக மருத்துவமனைகள் தொடங்க சில கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உருவாக்கப்படவேண்டும். அதுபோல் மருத்துவமனைகளில் இருக்கும் சவுகரியங்களின் அடிப் படையில் அதன் தரத்தை ஏ,பி,சி,டி என பிரித்து, மக்களுக்கு எளிதில் புரியும்படி செய்யவேண்டும் என்று கொள்கைகள் வகுத்து அரசுக்கு சமர்ப்பித்தோம். 6 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து, எல்லா டாக்டர்களிடமும் கலந்துபேசி உருவாக்கப்பட்ட அந்த அறிக்கை 15 வருடங்களுக்கும் மேலாக பலனின்றி கிடக் கிறது.

போலி மருந்துகள் மற்றும் தரம் குறைந்த மருந்துகளின் பயன்பாடு இப்போது அதிகரித்திருக்கிறது. அதனால் சிறந்த டாக்டர் சிகிச்சையளித்தாலும், நோய் உடனே சரியாகுவதில்லை. நோய் சரியாகாதபோது நோயாளிகள் மருந்துகளை குறைசொல்லமாட்டார்கள். டாக்டரின் சிகிச்சையில்தான் அவநம்பிக்கைகொள்வார்கள்.

மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வளர்ச்சியைவிட, மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எந்த நோயையும், எப்படியும் குணப்படுத்திவிட முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். சிகிச்சை மேம்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் எந்த அதிசயத்தையும் எந்த டாக்டராலும் உருவாக்கிவிட முடியாது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனாலும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள டாக்டர்கள் மீதும் மருத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.

கட்டுரை: பேராசிரியர் -டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, தமிழ்நாடு மருத்துவர் சங்க தலைவர், சென்னை.

நல்லுறவு மேம்பட டாக்டர்கள் செய்ய வேண்டியது

* நோயாளியை இன்முகத்தோடு வரவேற்றிடுங்கள். நேர்த்தியான தோற்றத்துடன் காட்சியளியுங்கள்.

* நோயாளியை பேசவிடுங்கள். நோய்க்கு பின்புலமாக இருக்கும் மனநிலை பிரச்சினைகளையும் கருத்தில்கொள்ளுங்கள்.

* நோய்க்கான சிகிச்சை பற்றி நோயாளிடம் விளக்கி, அவரது சம்மதத்தோடு சிகிச்சையை முடிவுசெய்யுங்கள்.

* மருத்துவத்தில் ஒரு எல்லை இருக்கிறது. 100 சதவீதம் என்ற கியாரண்டி கிடையாது என்பதை, பக்குவமாக நோயாளிகளுக்கு புரியவைக்கவேண்டும்.

* சிகிச்சை, ஆபரேஷன் மேற்கொள்ளும்போது பக்கவிளைவுகளை பற்றி எடுத்துக்கூறி, உரிய அனுமதியோடு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

* டாக்டரின் நேரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல், நோயாளியின் நேரமும் முக்கியம்தான். அதனால் முடிந்த அளவு டாக்டர்கள், அப்பாயிண்ட்மென்ட் நேரத்தை கடைப்பிடிக்கவேண்டும். நோயாளிகளின் அவசர தேவைக்கு டாக்டர்கள் தகவல்தொடர்பில் இருக்கவேண்டும்.

* நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை சரிவர பேணவேண்டும்.

* அதிகபட்ச விளம்பரம், நோயாளிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிவிடும். அதனால் விதிமுறைகளுக்கு உள்பட்டே விளம்பரம் செய்யவேண்டும்.

* டாக்டர்கள் தங்களுக்கான அமைப்புகளில் இடம்பெற்று ஐக்கியத்தை மேம்படுத்துவதோடு, மருத்துவ துறை முன்னேற்றங் களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

* சக டாக்டர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். அவர்களை குறைசொல்லக்கூடாது. செகண்ட் ஒப்பீனியனை இயல்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

* மருத்துவ தொழிலின் மாண்பை கடைப்பிடிக்கவேண்டும். நோயாளிகளின் உரிமைகளை ஏற்று அதற்கு செவிசாய்க்கவேண்டும்.

* டாக்டர்கள் சமூகத்தோடு நெருங்கிப்பழகி, சமூகத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை செய்து மக்களிடம் நல்லுறவை மேம்படுத்தவேண்டும்.

* டாக்டர்களோடு ஒருங்கிணைந்து நல்லுறவைப் பேண நோயாளிகளும் முன்வரவேண்டும். உணர்ச்சிவசப்படாமல் பொறுப்புடன் நடந்து அவர்கள் நல்லுறவை மேம்படுத்தவேண்டும். டாக்டர்- நோயாளி நல்லுறவானது இருகை ஓசை. இரு கைகளும் இணைந்தால்தான் முழுபலன் கிடைக்கும்.

Next Story