21. அறியப்படாத அதிசயங்கள்


21. அறியப்படாத அதிசயங்கள்
x
தினத்தந்தி 25 Jun 2017 9:15 AM GMT (Updated: 25 Jun 2017 9:15 AM GMT)

செடிகள் செம்மையின் விரிப்புகள், பூக்கள் செடியின் சிரிப்புகள். மலர்களை நேசிக்காதவர்களால் மனங் களையும் நேசிக்க முடியாது.

செடிகள் செம்மையின் விரிப்புகள், பூக்கள் செடியின் சிரிப்புகள். மலர்களை நேசிக்காதவர்களால் மனங் களையும் நேசிக்க முடியாது.

செடியை உற்றுப் பார்ப்பதும், மரத்தை நன்கு கவனிப்பதும், மலரை நேசித்து அதிசயிப்பதும் ஆன்மிகப் பயிற்சிகள். இயற்கையை ரசிப்பவர்களுக்கு தவம் தனியே தேவையில்லை.

பூங்காவிற்கும், வனத்திற்கும் வித்தியாசம் உண்டு. செயற்கையாய் செதுக்கப்பட்டது பூங்கா. இயற்கையாய் தோன்றியது வனம்.

பூங்காவைப் பார்ப்பது, படித்த கதையைப் படமாய்ப் பார்ப்பதைப்போல. வனத்துக்குள் செல்வது திகில் கதையை வாசிப்பதைப்போல.

வரையறுக்கப்பட்ட உலா பூங்காவில். திருப்பங்கள் கொண்ட பயணம் வனத்தில். வனத்திற்குச் சென்று வந்தால் உடலெல்லாம் உற்சாக முலாம். பூங்காவிற்குச் சென்றால் அழகு உண்டு, அதிசயம் இல்லை. அது கட்டமைக்கப்பட்ட தாவங்களின் அணிவகுப்பு.

தாறுமாறாய் வளர்ந்து காற்றில் அசையும் மரங்களும், செடிகளும், கொடிகளும் இணைந்து மர்மப்பிரதேசமாய் விரிவது காடு.

பூங்காவில் அழகுக்காக தாவரங்கள் கத்தரிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. செடிகளின் விரல்களை வெட்டுவதுபோல் அது சித்ரவதை. மரங்களுக்கு முடிவெட்ட முனைவதா அழகு! அவை கூந்தலை விரித்து காற்றைக்கோதும் போதுதானே தென்றல் தெம்மாங்கு பாடுகிறது.

வனத்தில் ஓடும் எலிகளும் அழகாக இருப்பதைப் பார்க்கலாம். ஓணான்களும் ஒயிலாக நடப்பதைப் பார்க்கலாம்.

காடுகளுக்குச் சென்றவர்கள் அறிவார்கள், அங்கு சின்ன ஓசை எவ்வளவு வேகமாக காற்றில் ஊடுருவி எத்தனை தொலைதூரம் செல்கிறது என்பதை.

காற்று சுத்தமாக இருப்பதால் ஒலி, ஒளியின் வேகத்தில் ஓட நினைக்கிறது. மரங்கள் அதற்கு உற்சாகக் குரல் எழுப்புகின்றன. காற்று அபரிமிதம் என்பதால் அங்கு யாருக்கும் வாயுத்தொல்லை வாய்ப்பதில்லை.

காட்டில் வாழ்பவர்கள் அல்லர், காட்டை அழிப்பவர்களே காட்டுமிராண்டிகள். வம்சாவளியினர் நிர்வாணமாக இருந்தும் அங்கு ஆபாசம் இல்லை. இங்கு ஆடை அணிந்தும் சிலர் அம்மணமாய் இருக்கிற அவலம்.

அவர்களுக்கு வன்மம் இல்லை. அவர்கள் யாருடனும் போட்டிபோடுவதில்லை. அவர்கள் எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் பதுக்குவதில்லை.

அவர்கள் கழுத்தறுக்கும் போட்டியில் கைகோர்ப்பதில்லை. அங்கு பொறாமையில்லை. உள்ளொன்று வைத்து உதட்டில் இனிப்பு வளர்க்கும் பாசாங்கு இல்லை.

இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் அவர்கள். அவர்களிடம் நம் ஒழுக்கத்தைத் திணிக்கும் பெயரில் ஒழுங்கின்மையை ஏற்படுத்த நாம் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

வனத்தில் எல்லைகள் இல்லை. எனவே அங்கு மற்றவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. அங்கு சுதந்திரம் உண்டு, அடுத்தவர்களிடம் அத்துமீறாதவாறு. அங்கு நெறிமுறை உண்டு, யாரும் கைகளைக் கட்டிப்போடாமலே. அங்கு தண்டனைகள் உண்டு, அது உடல்மீது மட்டுமே - மனதின்மீது அல்ல.

இந்தியாவின் பல்லுயிர் பன்முகத்தன்மை ((biodiversity) ) அமேசான் காடுகளைவிட அதிகம். பனித்தலை கொண்ட மலைகளும், படர்மணல் கொண்ட பாலைகளும் இங்குதான் இருக்கின்றன. உச்சபட்ச வெப்பம் கொண்ட பிரதேசங்களும், உறைய வைக்கும் குளிர்கொண்ட பகுதிகளும் இந்தியாவில் இருக்கின்றன.

இங்கு ‘யாக்’ கூட்டங்களும் உண்டு, ஒட்டக மந்தைகளும் உண்டு. இப்படி இயற்கை கரங்களை விரித்து வைத்த அதிசயம் வேறெங்கும் இல்லை.

தமிழகத்தில் எண்ணற்ற இயற்கை வளங்கள் இருக்கின்றன. அவற்றின் அருமையை நாம் அறிவதில்லை. ஒகேனக்கல், குற்றாலம், சுருளி, சின்ன சுருளி, ஆகாய கங்கை, பாபநாசம், அகத்தியர் அருவி, திற்பரப்பு அருவி, திருமூர்த்தி அருவி, குரங்கு அருவி என வெள்ளிக்கம்பியாய் நீர் நிலத்தில் விழும் அருவிகள் தமிழகத்தில் அநேகம்.

நீலகிரி, ஏலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, சிறுமலை, மேகமலை, வால்பாறை என்று மனதை மயக்கும் மலைச்சாரல்கள் அதிகம்.

முதுமலை, பேரிஜம், கோடியக்கரை, களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம் என்று தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் அதிகம். இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய், மிளா, புள்ளி மான், நீலகிரி வரையாடு என்று கண்களைக் கவரும் வனவிலங்குகள்.

இவை தவிர விதவிதமான பல்லி இனங்கள். ஊர்ந்து செல்லும் உடும்புகள். வாய் பிளந்து கிடக்கும் முதலைகள். முதலைக்கும் சரணாலயங்கள்.

அதிசய அணில் வகைகள். பறவைகளுக்குப் பல சரணாலயங்கள். பல்வேறு வகையான பாம்பினங்கள். ஆளுயரத்திற்குப் படமெடுக்கும் ராஜ நாகங்கள்.

இந்த உயிரினங்களால் பாதுகாக்கப்படும் மழைக்காடுகள், கடற்கரைக் காடுகள், முள்வெளிக்காடுகள். இத்தனை சொத்தையும் முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறது தமிழகம்.

நீலகிரி மலை அழகுகளின் தலைநகரம். அங்கு நகரத்தில் படகு ஓட்டி, பான்பூரி சாப்பிட்டுவிட்டுத் திரும்புகிறவர்கள் ஏராளம். ஊட்டி மட்டுமே நீலகிரி அல்ல. உள்ளே சென்றால் கண்ணில்படும் விதவிதமான தாவங் களையும், இதழ்விரித்த மலர்களையும் காணலாம்.

காற்று அங்கு வாசனை பூசிக்கொள்கிறது. ஊரையே இயற்கை குளிர்பதனம் செய்திருக்கிறது. மருந்துச் செடிகள் பலவும் அங்கே மானாவாரியாக வளர்ந்திருக்கின்றன. தீராத வியாதிகளுக்கும் மருந்து அவற்றின் காய்களிலும், பூக்களிலும் மறைந்து இருக்கிறது.

அவற்றையெல்லாம் உணர்ந்து ரசிக்கவும், அறிந்து வியக்கவும் பொறுமை தேவை. கேளிக்கைப் பயணம் செல்பவர்களுக்கு அது சாத்தியமில்லை. நிழற்படங்களோடு சுற்றுலாவைச் சுருக்கிக்கொள்பவர் களுக்கு வாய்ப்பே இல்லை.

சிலப்பதிகாரத்தில் வஞ்சிக்காண்டத்தில் நீலகிரியைப்பற்றி குறிப்பு வருகிறது. செங்குட்டுவன் அங்கு சென்ற சேதியும் இருக்கிறது. அப்போதே மன்னர்கள் ஓய்வெடுக்க நீலகிரிக்குத்தான் சென்றார்கள் என்பது தெரிகிறது.

பல சொற்கள் நாளடைவில் பொருள் திரிந்து புழங்கி வருகின்றன. எண்ணெய் என்பது தொடக்கத்தில் எள்ளின் நெய்யையே குறிப்பிட்டது. இப்போது அது நல்லெண்ணெய் ஆனது.

நாற்றமென்பது வாசனையைக் குறித்தது. இப்போது அது துர்நாற்றத்தை உணர்த்துகிறது.

ஆங்கிலத்திலும் அப்படிச் சொற்கள் உண்டு. ‘பாக்ஸ்’ என்பது பெட்டி செய்யும் மரம். இப்போது பெட்டிக்கே அந்தப் பெயர்.

‘அமெச்சூர்’ என்பது தொடக்கத்தில் ‘ஒரு பணியை விரும்பிச் செய்கிறவர்’ என்று பொருள். இப்போது அதை ‘கற்றுக்குட்டி’ என்கிற பெயரில் பொருள் கொள்கிறோம். உன்னதமான சொற்கள் எப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் என்பதற்கு இந்தச் சொல்லே அத்தாட்சி.

ஆங்கிலத்தில் ‘காதல் பணி’ (labour  of love) என்ற பதம் உண்டு. பணம் வாங்காமல் செய்கிற பணியை அப்படி அழைப்பார்கள். அமெச்சூர்கள் அப்படிப்பட்டவர்கள்.

‘நடுத்தர வயது மடைமாற்றம்’ என்கிற சொற்றொடர் ஆங்கிலத்தில் உண்டு. நாற்பத்து ஐந்து வயதாகும்போது செய்கிற பணியைவிட்டு வேறொரு பணிக்குச் செல்லத்தோன்றும்.

மருத்துவர் வைத்தியம் பார்ப்பதை விட்டுவிட்டு வயல்களை மேற்பார்வையிடச் செல்வார். காவல்துறையில் இருந்தவர் கவிஞராகி விடுவார்.

நம் ஊரில் இது நடப்பதில்லை. பணி ஓய்வுபெற்ற பிறகும் ஆற்றிய பணியை அடைப்புக் குறிக்குள் போடுபவர்களே அதிகம். நம்மால் பல்லி வாலைப்போல பதவி எனும் வாலைக் கழற்றிவிட முடிவதில்லை.

தருண் சாப்ரா என்கிற பல் வைத்தியர். அவரும் ராம்னீக் சிங் என்பவரும் நீலகிரியின்மேல் காதல் கொண்டவர்கள்.

பலநேரங்களில் வெளியே இருப்பவர்களுக்குத் தெரியும் அருமை அருகிலிருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு கோவிலில் அர்ச்சனைப் பொருள் விற்பவர்கள் அடுத்த கோவிலுக்குச் சென்று மொட்டை போடுவதுண்டு.

சாப்ரா பல் வைத்தியராய் இருந்து பல்லினத் தொகுப்பில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தவர். பண்பாட்டு மானுடவியலிலும் அவருக்கு அக்கறை அதிகம்.

தோடர்களின் வாழ்க்கையின் மீது அவருக்குப் பிடிப்பு. அவர்கள் குறித்து புத்தகம்கூட எழுதியிருக்கிறார். அவர்கள் சைவ வம்சாவளியினர்.

அவர்களோடு பணியாற்றும்போது மூன்று அரிய தாவரங்களைக் கண்டுபிடித்திருக்கிறார். ஒரு தாவரத்தை பெரிய வெள்ளை மலர்களாலும், முடிபோன்ற வளர்ச்சியாலும் அடையாளம் காணலாம்.

தோடர்கள் வணங்கும் ‘காட்டி’ என்கிற மலையின் பெயரால் அதற்கு நாமகரணம் சூட்டியிருக்கிறார். இன்னொன்றை அவர்கள் வணங்கும் ‘தைமுஷ்குன்’ என்கிற மலையின் பெயரால் அழைத்திருக்கிறார். அங்கு அவர்களுடைய கடவுள் வசித்து மறுமை உலகத்தை ஆள்வதாக ஐதீகம்.

மூன்றாவது செடியை தோடர்கள் அழைக்கும் பெயரைக்கொண்டு அடையாளப்படுத்தியிருக்கிறார்.

இப்படி மூன்றையும் தோடர்கள் வழிபடும் தெய்வங்களின் பெயரால் அழைத்ததற்குக் காரணம் உண்டு. அந்தத் தூய்மையான சுற்றுச்சூழல் அமைப்பை முக்குருத்தி தேசியப்பூங்காவில் பராமரிக்கும் பங்களிப்பைச் செய்பவர்கள் தோடர்களே.

தோடர்களின் 14 புனித மலைகள் அந்தப் பூங்காவில் இருக்கின்றன. அவற்றை அவர்கள் கண்போலக் காத்து வருகிறார்கள்.

இன்னும் நம் அறிவுக்கு அகப்படாத ஆயிரம் செய்திகள் இருக்கின்றன என்பதே இச்செய்தி தரும் சேதி.

(செய்தி தொடரும்)


அதிகாரத்தின் அடையாளம்

வேட்டையாடிய கற்கால மனிதர்கள் குகைகளுக்கு முன்னால் புல்வெளிகளை (lawns) வளர்க்கவில்லை. அரண் மனைகளும், மாளிகைகளும் பச்சைப் புல்வெளிகளை அதிகாரத்தின் அடையாளமாக ஆக்கி வைத்திருக்கின்றன.

இப்போது விளையாடுவதற்கும் அவை ஆதார மையம். அதிகாரத்தையும், அந்தஸ்தையும், செல்வத்தையும் வெளிப்படுத்த மரகதப் போர்வையாய் விரியும் புல்வெளிகள் தேவை. இவ்வளவு பரப்பை எங்களால் வெறுமனே வைத்திருக்க முடியும் என்பதை உணர்த்துவதே, உபயோக மற்ற இந்தப் புல்வெளிகளை பராமரிப்பதன் நோக்கம். இவற்றிற்கு சிகை திருத்தவும், சீவி முடிக்கவும், குளிப்பாட்டவும் ஆட்கள் இருக்குமளவிற்கு எங்களுக்கு அந்தஸ்து உண்டு என்பதற்கு இந்தப் புல்வெளிகள் பதாகைகள் ஆகின்றன. 

Next Story