பாலும் கல்வியும் பெண்ணுக்கு இல்லை


பாலும் கல்வியும் பெண்ணுக்கு இல்லை
x
தினத்தந்தி 25 Jun 2017 10:06 AM GMT (Updated: 25 Jun 2017 10:06 AM GMT)

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெண்களின் எழுத்தறிவு சதவீதம் 64.6 சதவீதமாக இருக்கிறது.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெண்களின் எழுத்தறிவு சதவீதம் 64.6 சதவீதமாக இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களின் எழுத்தறிவு சதவீதம் (52.1) குறைவாக இருக்கிறது. அங்கு இரண்டு பெண்களில் ஒருவர் அடிப்படை கல்வி பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் ராஜஸ்தான் மாநில தலைநகரமான ஜெய்ப்பூரில் உள்ள குடிசைப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கல்வி அறிவில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். குடும்பத்தில் 3 பிள்ளைகள் இருந்தால் அதில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி, சத்தான உணவுகள் கொடுக்கப்படும் நிலை அங்கு நீடிக்கிறது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வீட்டில் தங்கள் சகோதர, சகோதரிகளை கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த நிலையை மாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பவர்,
லாவலினா சகோனி.


இவர் குடிசைப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக பள்ளி ஒன்றை நிர்வகித்து வருகிறார். 2004-ம் ஆண்டு 32 பெண் குழந்தைகளை கொண்டு தொடங்கப்பட்ட அந்த பள்ளியில் இப்போது 600 மாணவிகள் படிக்கிறார்கள். அவர்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. புத்தகங்கள், பை, சீருடைகள், எழுது பொருட்கள், மதிய உணவு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. கணினி வழி கல்வியும் போதிக்கப்படுகிறது. 12-ம் வகுப்பை முடிக்கும் மாணவிகள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சிகளும் வழங்கப் படுகின்றன.

சகோனி பெண் குழந்தைகளுக்கான பள்ளியை தொடங்கியதற்கான காரணம் விசித்திரமான சம்பவ பின்னணியை கொண்டது. அவருடைய மகளுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் 14 வயதான சங்கீதா என்ற சிறுமி மாலை நேரங்களில் விளையாடுவதற்கு வந்திருக்கிறார். ஒருநாள் சங்கீதாவுடன் விளையாடிக்கொண்டிருந்த மகளை அழைத்து பாலும், ஊட்டச்சத்துமிக்க பலகாரமும் கொடுத்திருக்கிறார். மகள் பால் குடிப்பதை அந்த சிறுமி ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறார்.

உடனே சகோனி அந்த சிறுமிக்கும் பால் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அவளோ குடிக்க மறுத்துவிட்டாள். அதற்கான காரணத்தை கேட்டபோது, “பெண் குழந்தைகள் பால் குடிக்கக் கூடாது” என்று சொல்லி இருக்கிறார். அந்த பதிலை கேட்டு வியப்படைந்த சகோனி, “உனக்கு யார் அப்படி சொல்லிக் கொடுத்தது” என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த சிறுமியின் குடும்ப நிலவரம் அவருக்கு தெரியவந்திருக்கிறது.

சிறுமியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். அவர்களில் சகோதரனுக்கு மட்டுமே பாலும், சத்தான ஆகாரங்களும் கொடுத்திருக்கிறார்கள். அவனை மட்டுமே பள்ளிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் தன்னுடன் பிறந்தவர்களை வளர்க்கும் பணியை செய்து வந்திருக்கிறார். சிறுமியின் வெகுளித்தனமான பேச்சு, சகோனிக்குள் பெண் குழந்தைகளுக்கு கல்வியும், சத்தான ஆகாரங்களும் புறக்கணிப்படும் அவலத்தை சுட்டிக்காட்டியிருக்கிறது. அதன் தாக்கமாக பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு அவசியம் கிடைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கூடத்தை தொடங்கி இருக்கிறார்.

ஆரம்பத்தில் மதிய உணவு கிடைக்கிறது என்ற மனநிலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த நிலையை மாற்றி அமைக்க சகோனி குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் தரமான கல்வியை போதிக்க தொடங்கி இருக்கிறார். நாளடைவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் படிக்க, எழுத தெரிவதற்கு பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார்கள். கடிதங்கள் எழுதுவது, செய்தித்தாள்கள் வாசிப்பது, பண வரவு-செலவுகளை நிர்வகிக்க கூட்டல், கழித்தல் கணக்குகளை கற்றுக்கொள்வது என பெண் குழந்தைகள் மூலம் தங்கள் கல்வி அறிவை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்கள். 

Next Story