வெள்ள பாதிப்பை தடுக்க ஏரி, குளங்களை தூர்வார கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


வெள்ள பாதிப்பை தடுக்க ஏரி, குளங்களை தூர்வார கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2017 12:45 AM GMT (Updated: 19 Aug 2017 7:46 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி, கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜனதா பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம்.

தாம்பரம், 

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி, கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினரும், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளருமான செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் புறநகர் பகுதியில் உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டது. மீண்டும் அதே போல் வெள்ள பாதிப்புகள் வராமல் தடுக்க வரும் மழை காலத்துக்குள் சென்னை புறநகர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்களை தூர்வாரி, கால்வாய்களை சீரமைக்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரி ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காஞ்சீபுரம் கோட்ட பொறுப்பாளர் பாஸ்கர், பல்லாவரம் பொறுப்பாளர் ஹரி பாபு, தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் பொற்றாமரை சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story