தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர நீர் மேலாண்மை வழிகள்


தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர நீர் மேலாண்மை வழிகள்
x
தினத்தந்தி 20 Aug 2017 5:53 AM GMT (Updated: 20 Aug 2017 5:53 AM GMT)

“வச்சா குடுமி; அடிச்சா மொட்டை” என்பது போல் சில ஆண்டுகளில் மழை வெளுத்து வாங்கி வெள்ளப்பெருக்கை உண்டாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ஆண்டுகள் வருண பகவான் ஏமாற்றி விடுவார்.

ந்தியாவில் தண்ணீர் பஞ்சம் நிலவும் மாநிலங்களில் குறிப்பிடத்தக்கது தமிழகம்.

“வச்சா குடுமி; அடிச்சா மொட்டை” என்பது போல் சில ஆண்டுகளில் மழை வெளுத்து வாங்கி வெள்ளப்பெருக்கை உண்டாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ஆண்டுகள் வருண பகவான் ஏமாற்றி விடுவார். போதிய மழை பெய்யாமல் எங்கும் வறட்சி நிலவும். இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்.

பொதுவாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆண்டுகளை விட, வறட்சி கோர தாண்டவமாடி மக்களை தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைத்த ஆண்டுகள்தான் அதிகம்.

எனவே நீர்வளம் பற்றாக்குறை உள்ள தமிழகத்தில், கிடைக்கும் தண்ணீரை கொண்டு தேவையை செம்மையாக பூர்த்தி செய்வது எப்படி? நீர்வளத்தை பெருக்குவது எப்படி? என்பது பற்றி தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பருவகால மாற்ற ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர் ப.மு.நடராசன் தெரிவிக்கும் கருத்துகளை பார்ப்போம்...

தமிழகம் 140 ஆண்டுகள் காணாத வறட்சியை 2016-ம் ஆண்டு சந்தித்தது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தும் வாடுகின்றன. வழக்கத்திற்கு மாறாக, விலங்கினங்கள் அவற்றின் உறைவிடத்திலிருந்து இடம் பெயர்ந்து, நீரும் உணவும் தேடி, கிராமங்களை நோக்கி படையெடுத்து, அங்கு அரிதாகப் பேணப்படும் சிறிதளவு விவசாயத்தையும் பாழ்படுத்தும் நிகழ்வு இந்த ஆண்டும் தொடருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு சராசரி மழை அளவான 925 மில்லி மீட்டரில், 81 சதவீதம் குறைவாக அதாவது 175.75 மி.மீ மழையே பெய்துள்ளது. மழையின் பெரும்பகுதி ஆவியாகவும், மண் ஈரப்பதமாகவும் பயன்பட்டு விட்டதால், மழைநீர், நீர்நிலைகளை சென்றடைய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆகவே, நீர் நிலைகள் நிரம்பவில்லை, விவசாயமும் நடைபெறவில்லை. இதனால், நிலநீரும் சுரக்கவில்லை.

2015-ம் ஆண்டில் தமிழகம் சராசரி ஆண்டு மழையைவிட கூடுதலாக பெற்றாலும், போதிய அளவில் நிலநீர் சுரக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம், இந்த ஆண்டின் பெரும்பகுதி மழை, நவம்பர் 15 முதல் டிசம்பர் 3-ந் தேதி முடிய உள்ள 18 நாட்களில் பெய்து விட்டது.

இவ்வாறு தொடர்ந்து பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வரும் தமிழகம், நீர் மேலாண்மை திட்டங்களை இனிவரும் ஆண்டுகளிலாவது ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் கடைப்பிடித்தால் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் சுமார் 1,000 டி.எம்.சி (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) அளவு நீர் வளத்தை கூடுதலாக்க வாய்ப்புகள் இருப்பது தெரிய வருகிறது.

மேலும், தமிழகத்தில் நீர் வளத்தை பெருக்க நீர் மேலாண்மை வழிகளுடன் முறையான நிலநீர் சட்டதிட்டங்களை இனியாவது கடைப்பிடிக்க வேண்டும்.



தமிழகத்தின் ஆண்டு சராசரி நீர்வளம் 1,643 டி.எம்.சி. இதில் மேற்பரப்பு நீர்வளம் 829 டிஎம்.சி. நில நீர்வளம் 814 டி.எம்.சி. தமிழக ஆண்டு நீர்வளத்தை தற்போது வாழும் இம்மாநில மக்களிடம் பகிர்ந்தால், ஒவ்வொரு நபருக்கும் ஆண்டு ஒன்றுக்கு 641 கனமீட்டர் நீர் கிடைக்கும். தனி நபருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவை.

இத்தேவையுடன் தமிழக தனி நபர் தற்போதைய நீர்வளத்தை ஒப்பிட்டால் 1,059 கன மீட்டர் நீர் பற்றாக்குறை. அதாவது 62 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. தனி நபர் ஆண்டின் நீர்த்தேவையான 1,700 கனமீட்டருடன் ஒப்பிட்டால் 2050-ம் ஆண்டில் நீர் பற்றாக்குறை 1,284 கன மீட்டர், அதாவது 76 சதவீதம்.

தனி நபர் ஆண்டு நீர் வளம் 500 கனமீட்டருக்கும் குறைந்தால் அந்த நாட்டில் தண்ணீர் தரித்திரம் நிலவுகிறது என்று பொருள். 2016-ம் ஆண்டின் தனி நபர் நீர் வளம் 122 கனமீட்டர். எனவே தமிழ்நாடு, தற்போது வரலாறு காணாத நான்கு மடங்கு தண்ணீர் தரித்திரத்தில் தவிக்கிறது என்பதே உண்மை. இந்த தண்ணீர் தரித்திரத்தை ஈடு செய்ய சுமார் 5 ஆண்டுகள் தமிழகத்தில் தொடர்ந்து 1,000 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்ய வேண்டும். மேலும், பல ஆண்டுகள் தொடர்ந்து நீர் மேலாண்மை வழிகளை பின்பற்ற வேண்டும்.

நீர் வளத்தை பெருக்க உலக அளவில் 30-க்கும் மேலான நீர் மேலாண்மை வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சிறப்பான வழிகள்

1. மழைநீர் சேகரிப்பு

2. செயற்கை நிலநீர்ச் செறிவு

3. கழிவு நீரை நன்னீராக்கி பயன்படுத்தல்

4. கோடை உழவு

5. விவசாயத்தில் நீர் மேலாண்மை

6. கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்தல்

7. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தல்

8. பாசனத் திறனை அதிகப்படுத்துதல்

9. நீர் நிலைகளை புதுப்பித்தல்

10. தமிழக நதிகளை இணைத்தல் மேலும் நதிக்குள் இணைப்பு

11. நீர்வளம் உள்ள இந்திய நதி ஒன்றை தமிழ்நாட்டில் இணைத்தல்.



சராசரி பருவ ஆண்டில் காவிரி ஆற்றில் 50 டி.எம்.சி. அளவும், பெண்ணை ஆற்றில் 9.09 டி.எம்.சி, வைகை ஆற்றில் 3.26 டி.எம்.சி, தாமிரபரணி 11.39 டி.எம்.சி, வைப்பாறு 4.73 டி.எம்.சி, வெள்ளாறு 21.47 டி.எம்.சி, கோதை ஆறு 14.50 டி.எம்.சி. என சுமார் 100 டி.எம்.சி என்ற அளவிலும் மழைநீர் கடலில் கலக்கிறது என்பதை விஜயராகவன் தலைமையிலான குழு கணக்கிட்டு உள்ளது. எனவே, தமிழகத்தில் சுமார் 100 டி.எம்.சி. அளவுள்ள மழைநீரை சேகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் ஊறும் அளவை மிஞ்சிய அளவில் நிலநீர் இறைக்கப்படுவதால் நிலநீர் மட்டம் தாழ்ந்து வருகிறது. 2002 முதல் 2016-ம் ஆண்டு முடிய உள்ள 15 ஆண்டுகளில் நிலநீர்ச் சுரப்பை விட சுமார் 331 டி.எம்.சி அளவு நில நீர் தமிழகத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. எனவே செயற்கை நில நீர்ச் செறிவு வழிகளை பின்பற்றினால்தான் இதுவரை காணாத நிலநீர் மட்ட தாழ்வை தடுக்க முடியும்.

கடின பாறையில் 4 மீட்டர் கனமுள்ள நீர்க் கோர்ப்புப் பாறையிலும், படிவுப்பாறையில் 3 மீட்டர் கனமுள்ள நீர்க் கோர்ப்புப் பாறையிலும், நிலநீர்ச் செறிவை செய்ய சுமார் 375 டி.எம்.சி. அளவு கூடுதல் நிலநீர் வளத்தை பெறலாம். இந்த அளவு நிலநீர்ச் செறிவைச் செய்ய 20 ஆண்டுகள் ஆகும்.

தமிழக மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 126 டி.எம்.சி. அளவு அன்றாட பயன்பாட்டுக்காக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 101 டி.எம்.சி. கழிவு நீர் உற்பத்தி ஆகிறது. இக்கழிவு நீரை நன்னீராக்கி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று கோடை மாதங்களில் 103 மி.மீ. மழை பெய்கிறது. இம்மழை பெரும்பாலும் நீராவி ஆகிவிடுகிறது அல்லது பிற இடங்களுக்கு ஓடிவிடுகிறது. இம்மழையில் 35 மி.மீ. மழையை 51 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் கோடை உழவின் வாயிலாக 62 டி.எம்.சி அளவிலான நீரை ஈரப்பதமாக சேகரிக்க முடியும்.

தமிழகத்தில் 19.3 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 14.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் விவசாயத்தை சிறப்பாக செய்வதால், ஹெக்டேருக்கு 300 மி.மீ. நீரை மிச்சப்படுத்தி 150 டி.எம்.சி நீரை சேமிக்கலாம்.

நீர்வளம் குறைந்த ஒரு லட்சம் ஹெக்டேர் நன்செய் நிலத்தில், புஞ்சை தானியத்தை பயிரிட்டு (கம்பு,சோளம், மிளகாய் கேழ்வரகு, சூரியகாந்தி) ஹெக்டேருக்கு 650 மி.மீ நீரை மிச்சப்படுத்தி, 21.3 டி.எம்.சி. நீரை சேமிக்கலாம்.

நுண்பாசன முறையை நீர்ப்பாசன விவசாயம் செய்யப்படும் 10 லட்சம் ஹெக்டேர் புஞ்சை நிலத்தில் கடைப்பிடித்து ஹெக்டேருக்கு 150 மி.மீ. நீரை குறைத்து, 50 டி.எம்.சி. நீரை மிச்சப்படுத்தலாம்.

கரும்பு விவசாயம் செய்யப்படும் 3 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நுண்பாசன முறையை பயன்படுத்தி, ஹெக்டேருக்கு 650 மி.மீ. நீரை குறைத்து, 69 டி.எம்.சி. நீரை மிச்சப்படுத்த முடியும்.

கடற்கரை மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு 30 டி.எம்.சி. கடல் நீரை, நன்னீராக்கி அன்றாட பயன்பாட்டிற்கு வழங்கி, அங்குள்ள நன்னீரை பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்த எல்லைதேவை இல்லை. தேவையான அளவு கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்தலாம்.

நீர்வளம் உள்ள நாடுகள் தமக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்து கொள்கின்றன. நீர் வளம் குறைந்த நாடுகள், பிற நாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்து கொள்கின்றன. இந்த வகையில், ஜப்பான் 1,059 டி.எம்.சி. நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உணவையும், எகிப்து 3,002 டி.எம்.சி. நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உணவையும் ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்து அவற்றின் உணவு தேவையை எட்டுகின்றன.

இவ்வாறு நீர்வளம் குறைந்த நாடுகள் உணவுப் பொருளை இறக்குமதி செய்து, அவற்றின் தண்ணீர் சிரமங்களில் இருந்து தப்பிக்கின்றன. எனவே தமிழகமும் இந்த வழியை பின்பற்றிப் பயன் அடையலாம்.

தமிழகத்தின் நீர்வளம் குறைந்த 76 சதவீதம் கடினப்பாறை பகுதிகளில் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்து அப்பகுதிக்கு தேவைப்படும் உணவை இறக்குமதி செய்து சுமார் 50 டி.எம்.சி. அளவு நீரை மிச்சப்படுத்தலாம்.

நீர்நிலைகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், விவசாய நிலம் ஆகியவற்றை சீர்படுத்தி அவற்றின் பாசன திறனை 30 சதவீதத்தில் இருந்து படிப்படியாக உயர்த்தி தண்ணீர் பயன்பாட்டை குறைக்க முடியும். இந்த வகையில் தமிழகத்தில் சுமார் 50 டி.எம்.சி. அளவு நீரை மிச்சப்படுத்தலாம்.

தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் விவசாய ஏரிகள், மேலும் 65-க்கும் மேலான பெரிய நீர் நிலைகள் மற்றும் அணைகள் உள்ளன. இவற்றில் தொடர்ந்து வண்டல் மண் படிவதால், இந்த நீர் நிலைகள் அவற்றின் கொள்ளவில் சுமார் 30 டி.எம்.சி. அளவு நீர் வளத்தை இழந்து உள்ளன. எனவே நீர் நிலைகளை குறிப்பிட்ட காலக்கெடுவில் புதிப்பித்து இழந்த நீர் வளத்தை பெறவேண்டும்.

தமிழகத்தின் ஏழு நதிகளில் (காவிரி, பெண்ணை ஆறு, வைகை, தாமிரபரணி, வைப்பாறு, வெள்ளாறு, கோதை ஆறு), சராசரி மழை ஆண்டில் சுமார் 100 டி.எம்.சி அளவு வெள்ளநீர் வீணாக கடலில் கலக்கிறது. இவற்றின் வெள்ள நீரை பிற தமிழக நதிகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டும். சில ஆண்டுகளில் ஒரு ஆற்றின் கிளை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும். பிற கிளை நதிகள் வறட்சியில் வாடும். இந்த ஆண்டுகளில் வெள்ளம் பெருகும் கிளை நதியின் நீரை பிற கிளை நதி பகுதிகளுக்கு எடுத்துச்சென்று, அங்கு பயன்படுத்த வேண்டும்.

மேலே கூறிய 10 நீர் மேலாண்மை வழிகளில் சுமார் 1,088 டி.எம்.சி அல்லது 1,000 டி.எம்.சி அளவுள்ள நீரை தமிழகத்தில் கூடுதலாக அல்லது சேமிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வகை நீர் மேலாண்மை வழிகளில் 2050-ம் ஆண்டில் உள்ள தனி நபர் ஆண்டு நீர்வளமான 416 கனமீட்டரை 689 கனமீட்டராக அதிகரிக்க முடியும். ஆனால், 1,700 கனமீட்டர் ஆக்க முடியாது. எனவே, தமிழகத்தின் நீர் தேவையில் தன்னிறைவு அடைய கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்தலாம் அல்லது நீர்வளம் உள்ள இந்திய நதி ஒன்றை தமிழகத்துடன் இணைக்கலாம்.

மேலே கூறிய நீர் மேலாண்மை வழிகளுடன் வீடு, அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் பயன்படும் தண்ணீரிலும் நீர் மேலாண்மை வழிகளில் 50 முதல் 100 டி.எம்.சி அளவுள்ள நீரை கூடுதலாக்க அல்லது சேமிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அரிதாக சில ஆண்டுகளில் கூடுதல் மழை பெய்கிறது. குறிப்பாக 1977, 2005, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் பெரும் அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆண்டுகளில் 500 டி.எம்.சி முதல் 1,000 டி.எம்.சி. வெள்ளநீர் கடலில் கலந்து உள்ளது.

தற்பொழுது தமிழ் நாட்டில் உள்ள 40 ஆயிரம் விவசாய ஏரிகள் மற்றும் இங்குள்ள பெரிய நீர்த்தேக்கங்களை தூர்வாரி, ஆழப்படுத்தி கரைகளை உயர்த்தி சுமார் 50 முதல் 100 டி.எம்.சி அளவு நீரை கூடுதலாக சேமிக்கலாம்.

நிலத்தை கையகப்படுத்த வாய்ப்பு இருந்தால் இரண்டு அல்லது மூன்று டி.எம்.சி கொள்ளளவுள்ள நீர் நிலைகளை புதிதாக அமைத்து, அவற்றில் வெள்ளநீரை தேக்கி பயன்படுத்தலாம்.

நிலத்தை கையகப்படுத்த முடியாவிட்டால் விவசாயிகளின் நிலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து சுமார் 1,500 கனமீட்டர் அளவுள்ள நீரை சேகரித்துப் பயன்படுத்தலாம்.

500 டி.எம்.சி வெள்ளநீரை சேகரிக்க 94.5 லட்சம் பண்ணை குட்டைகள் தேவை. ஒரு பண்ணை குட்டைக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 94.5 லட்சம் பண்ணை குட்டைகள் அமைக்க சுமார் 47 ஆயிரத்து 200 கோடி ரூபாய் தேவைப்படும். ஆண்டுக்கு 2 லட்சம் பண்ணை குட்டைகள் வீதம் சுமார் 25 ஆண்டுகளில், ஆண்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்து இப்பணியை முடிக்கலாம்.

தமிழகத்தின் தண்ணீர் தரித்திரத்தை முற்றிலும் களைய, கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்துதல் மேலும் நீர் வளம் நிறைந்த இந்திய நதி ஒன்றை தமிழகத்துடன் இணைத்தலை தவிர்த்த பிற மேலாண்மை வழிகளில், போதிய அளவு நீர் வளத்தை பெருக்க வாய்ப்பில்லாததால், இந்த இரு வழிகளில் சிறப்பான ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

கிழக்கு நோக்கி பாய்ந்து வங்க கடலில் கலக்கும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் பெண்ணாறு நதிகளில் தற்பொழுது 5,138 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த நதிகளில் 2050-ம் ஆண்டில் 4,301 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும். எனவே தமிழக தனிநபர் 1,000 க.மீ. நீர் தேவையில் உள்ள தற்போதைய பற்றாக்குறையைவிட ஐந்து மடங்கும், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக் குறையைவிட இரு மடங்கும், இந்த நான்கு நதிகளிலும் உள்ள வெள்ளநீர் கடலில் கலக்கும் அளவில் உள்ளது.

எனவே, தென்இந்திய நதிகளின் வெள்ளநீரை பயன்படுத்தினால் கூடிய விரைவில் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் நீங்க வழி கிடைக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகும், தண்ணீர், உணவு, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. இந்நிலையை மாற்ற, தண்ணீரைப் பகிர்ந்து வாழும் மனப்பக்குவம் இந்திய மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தேவை.

இந்திய நாட்டின் தண்ணீர் சிரமங்களை களைய, ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி, இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளில், இந்திய நாட்டின் தண்ணீர் சிரமங்களைக் களைய இந்திய அரசு செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும்.

ஆண்டு (2016-2017) பொருளாதார வளர்ச்சியை 7.6 சதவீதம், 152.51 லட்சம் கோடி ரூபாய் அளவு சாதிக்கும் இந்திய அரசால், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இந்தியாவின் ஒட்டு மொத்த தண்ணீர் சிரமங்களைக் களைவது எளிதே. எந்த மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருக்கிறதோ அந்த மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுத்து நதிநீர் பங்கிடும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா ஆகிய தென்னக மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகத்தில்தான் நிதி பற்றாக்குறை கூடுதலாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, 2016-17-ம் ஆண்டு தமிழகத்தின் நிதி பற்றாக்குறை 158.5 பில்லியன் ரூபாய் (ஒரு பில்லியன் 100 கோடி). 2017-ம் ஆண்டு நிதி பற்றாக்குறை 159.3 பில்லியன் ரூபாய். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் இம்மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. இன்றுள்ள நிலையில், சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவு கடன் சுமையில் தமிழகம் தத்தளிக்கும் நிலையில், நீர் மேலாண்மை வழிகளை பின்பற்றவோ, கடல் நீரை நன்னீராக்கி பயன்படுத்தவோ, பண்ணை குட்டைகள் அமைக்கவோ சிறிதும் வாய்ப்பு இல்லை. எனவே, நீர் மேலாண்மை, நதிநீரை பங்கிடுதல், பண்ணை குட்டைகள் அமைக்கும் வழிகளில், இந்திய அரசின் பேரிடர் நிதியை பயன்படுத்தி ஒரு காலக் கெடுவில், தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை இந்திய அரசு வருகிற 2050-ம் ஆண்டுக்குள் போக்கவேண்டும். 

Next Story